சமுர்த்தி வங்கிகளின் புதிய மாற்றங்கள் பற்றி அறிவோம்......

 சமுர்த்தி வங்கிகளின் புதிய மாற்றங்கள் பற்றி அறிவோம்......





இலங்கையின் வங்கித்துறையில் மூன்று தசாப்த காலங்களை அண்மித்த காலத்தில் முழு ஆற்றலையும், பூரணத்துவமான அனுபவங்களையும் கொண்ட ஒரு நுன்நிதித் துறையின் முன்னோடியாக சமுர்த்தி வங்கி திகழ்ந்து வருகின்றது. இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் மக்களின் மத்தியில் சேமிப்பு கலாச்சரத்தை ஏற்படுத்தியதுடன், இவர்களுக்கான இலகு தவணைகளில் கடன்களை வழங்கி  அவர்களை கிராமத்தின் அநியாய வட்டிக்காரர்களின் பிடியில் இருந்து மீட்டெடுத்து விடுதலை அடையச் செய்த பெருமை சமுர்த்தி வங்கியையே சாரும்.

 இன்று இலங்கை மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தி நாடுமுழுவதும் 1074 சமுர்த்தி வங்கி கிளைகளை தாபிக்கப்பட்டுள்ளதுடன் 2022 இல் சமுர்த்தி வங்கிகளில் புதிய விதி முறைகள் சிலவற்றை வங்கி வலையமைப்பில் இணைத்து பரந்த நிதிச் சேவையினை வழங்கவுள்ளது. இதனால் சமுர்த்தி வங்கிச் செயற்பாடுகளை கிராம மட்டத்திற்கு கொண்டு செல்லும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து ஒன்று மட்டும் புரிகின்றது மக்களை வெற்றியடையச் செய்து தானும் வெற்றியடைவதே சமுர்த்தி வங்கியின் குறிக்கோளாகும்.

சமுர்த்தி வங்கித்துறையில் 2020-2021 காலப் பகுதியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை நாம் அவதானிக்க கூடியதாகவுள்ளது. முக்கியமாக கடன்களுக்கான வட்டி வீதத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது 8% வீதமாக இருந்த வட்டி வீதம் 4வீதமாக குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சமுர்த்தி வங்கியில் ஒருவர் பெற்று வந்த வாழ்வாதார அபிவிருத்திக் கடன் தொகை உயர்ந்தபட்சமாக 5,00,000 இருந்து  10,00,000 உயர்த்தப்பட்டுள்ளது. இவர்கள் ஆரம்ப கட்டமாக ஒரு லட்சம் ரூபாய் கடனை பெறுவதற்கான வாய்பையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. சமுர்த்தி வங்கியின் ஒரு கடன் திட்டமான 'சமுர்த்தி இசுறு' கடன் தொகை 20 லட்சமாக அதிகரிக்கப்ட்டுள்ளதுடன் அதற்கான  தவணை காலங்களும் 84 தவணைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது மாத்திரமின்ற உள்நாட்டு வளங்களையும், வெளிநாட்டுசந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதற்காக  புதிய தொழில் முயற்சியான்மைக் கடன்கள்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளன சமுர்த்தி வங்கிகள் ஊடாக அதிகபட்சமாக ஒரு மில்லியன் கடனும், சமுர்த்தி வங்கிச்சங்கம் ஊடாக இரண்டு மில்லியன் கடன்களும் வழங்கப்படுகின்றன்.

மற்றும் மக்கள் தம் அன்றாட தேவைக்கு தேவைப்படும் தேவைகளுக்காக வழங்கப்படும் நுகர்வு கடன்  15,000 ரூபாவில் இருந்து 25,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நுகர்வு கடனுக்கான வட்டி வீதமும் 9%ல் இருந்து 7% வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இத்துடன் மக்களின் அனர்த்த காலங்களில் ஏற்படும் பிரச்சனையை தீர்ப்பதற்கான இடர் கடனும் 15,000 ரூபாவில் இருந்து 25,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி வங்கிச்சேவையை கிராம மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக சமுர்த்தி வங்கி மற்றும் சமுதாய அடிப்படை அமைப்பு அங்கத்தவர்களின் கருத்திட்டங்கள், நுகர்வகளுக்கான சிறுநிதி தேவைகளை பூர்த்தி செய்ய இரண்டு இலகு கடன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 'சமுர்த்தி அருணலு' கடன் திட்டம் மற்றும்  'சமுர்த்தி மிதுறு' கடன் திட்டம் என்பவையாகும். மற்றும் மிக முக்கியமாக சமுர்த்தி வங்கியில் அங்கத்துவம் பெற்று மூன்று மாதங்களின் பின்னரே அங்கத்தவருக்கு கடன் வழங்கப்படும் ஆனால் தற்போது அதன் காலம் இரண்டு வாரங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி வங்கியில் நிவாரணம் பெறும் அங்கத்தவர்களின் பெயர்களில் கட்டாய சேமிப்பு நிதியம் சேமிக்கப்பட்டு வருகின்றது. அதிலிருந்து குறித்த சமுர்த்தி பயனுகரி பணத்தை மீளப்பெறுவதாயின் 70 வயதிற்கு பின்பே பெற முடியும் ஆனால் தற்போது இவ்வயதெல்லை 60 வயதாக குறைக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி வங்கியில் கடன் பெறுவதாக இருந்தால் பங்கு கணக்கில் ஒன்றிக்கு பத்து மற்றும் ஒன்றிக்கு பனிரெண்டு என்கின்ற முறை மாற்றப்பட்டு புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. 200,000 வரை கடன் பெறுவதாயின் பங்கு கணக்கில் 20,000 ரூபாவும், 200,001 தொடக்கம் 300,000 வரை கடன் பெறுவதாயின் பங்கு கணக்கில்  22,000 ரூபாவும் 300,001 தொடக்கம் 400,000 வரை கடன் பெறுவதாயின் பங்கு கணக்கில்  24,000 ரூபாவும் 400,001 தொடக்கம் 500,000 வரை கடன் பெறுவதாயின் பங்கு கணக்கில்  25,000 ரூபாவும் 500,001 தொடக்கம் 700,000 வரை கடன் பெறுவதாயின் பங்கு கணக்கில்  30,000 ரூபாவும் 700,001 தொடக்கம் 800,000 வரை கடன் பெறுவதாயின் பங்கு கணக்கில்  35,000 ரூபாவும் 800,001 தொடக்கம் 1,000,000 வரை கடன் பெறுவதாயின் பங்கு கணக்கில்  40,000 ரூபாவும் எனவும் மாற்றம் பெற்றுள்ளது.

இத்துடன் வாடிக்கையாளர்களுக்கு துரித சேவை வழங்குவதற்காக சகல சமுர்த்தி வங்கிச் செயற்பாடுகளும் கணணி மயமாக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி வங்கி தொடர்பான மேலும் பல புதியதகவல்களை இனிவரும் காலங்களிலும் தங்களுக்காக வழங்கவுள்ளோம்.

B.J


Comments