அரச சேவையை அலங்கரித்த மூத்த பிரஜை முன்னாள் அரச அதிபர் செ.புண்ணியமூர்த்தி கௌரவிப்பு ......

 அரச சேவையை அலங்கரித்த மூத்த பிரஜை முன்னாள் அரச அதிபர் செ.புண்ணியமூர்த்தி கௌரவிப்பு ......





74வது இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அரச சேவையில் தம் அர்ப்பணிப்பான சேவையை மக்களுக்கு வழங்கி தற்போது ஓய்வு நிலையை அடைந்து 75 அகவையை கடந்த சிரேஸ்ட அரச சேவையாளர்களை கௌரவிக்கும் செயற்பாட்டிற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 04.02.2022 அன்று நடைபெற்ற 74வது  சுதந்திர தின நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபர் செல்லையா புண்ணியமூர்த்தி அவர்களை பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்திஇ வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்  அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய K.கருணாகரன் அவர்களும் கௌவித்து பொண்ணடை அணிவித்து நினைவுச்சின்னமும் வழங்கி வைத்தனர்.

மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமல்ல வடகிழக்கிற்கே தம் அர்பணிப்பான சேவையை வழங்கிய செல்லையா புண்ணிமூர்த்தி அவர்களின் நெடுந்தூர அரச சேவை பணியை சற்று நோக்குவோம்...

அலுவலகத்தில் அமைதியாக காணப்படும் இவர் குனிந்த தலை நிமிராது வந்தவரை யாரென்டு பார்க்காமலே அவர் கூறுவதை கேட்ட பின் தலை நிமிர்ந்து சரியான பதிலை அமைதியாக கூறும் ஒரு சிறந்த சேவையாளன் தான்  இவர். 1945.10.18ம் திகதி குருமண்வெளியில் பிறந்த  இவர் தன் கல்வியை மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையில் கற்று, கொழும்பு பல்கலைகழகத்தில் தன் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டார். இவர் 1967ஆம் ஆண்டு அரச சேவையில் இனைந்து கொழும்பு மாவட்டத்தில் கடமையாற்றினார். 1984ஆம் ஆண்டு பதவியுயர்வு பெற்று அதியுயர் சேவையான லிகிதர் சேவையில் கடமையாற்றி 1991ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்குள் தெரிவு செய்யப்பட்டார். இக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 17 பேர் இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவாகி மட்டக்களப்பு மாவட்டத்திற்கே பெருமையை தேடித்தந்தார்கள் இதில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவர் மட்டக்களப்பு  உள்ளூராட்சி திணைக்களத்தின் உதவி ஆணையாளராக கடமையாற்றினார். இதன் பின் 1994ஆம் ஆண்டு தொடக்கம் தன் முதல் பிரதேச செயலாளர் சேவையை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கடமையேற்றுக் கொண்டார். இக்காலத்தில் தான் அப்போதைய அரசினால் கொண்டு வரப்பட்ட சமுர்த்தி ஊக்குவிப்பாளர் நியமனத்தை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் முன்னின்று வழங்கி வைத்து சாதனை புரிந்தார்.

 இதன் பின் 2000மாம் ஆண்டில் இருந்து கோரளைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றி 2003ஆம் ஆண்டில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபராக பதவி உயர்வு பெற்று மாவட்ட செயலகத்தில் கடமையாற்றினார். இதன் போது 2004ஆம் ஆண்டில் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றும் வாய்ப்பும் இவருக்கு கிட்டியது. 2005ம் ஆண்டு வடக்கு கிழக்கு கரையோர சமுதாய அபிவிருத்தி திட்டத்திற்கான மாவட்டத்திட்ட பணிப்பாளராக கடமையாற்றி இதன் பின் 2005.10.18 அன்று தன் அரச சேவையில் இருந்து ஓய்வைப் பெற்று சென்றார்.

இவரின் சேவையை மீண்டும் பெற்றுக் கொண்ட அரசாங்கம் 30.12.2006 வரை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் அரசாங்க அதிபராக இவரை நியமித்து இவரின் சேவையை பெற்றுக் கொண்டது. இதன் பின்பும் தன் சேவையை அவர் அரசாங்க்திற்கு வழங்கி வந்தார். 2007ம் ஆண்டுவரை மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக கடமையாற்றி வந்துள்ளதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவர்  மேல் படிப்பிற்காகவும், பயிற்சிகளுக்காகவும் இந்தியா, தாய்லாந்து, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கு பயணம் மேற் கொண்டுள்ளார். ரோட்டறி கழகத்தின் அங்கத்தவராக செயற்பட்ட இவர் பிற்காலத்தில் ரோட்டறி கழகத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். இவர் வடக்கு கிழக்கு மாகான முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் ஒழுக்காற்று நடைமுறை தொடர்பான பயிற்சி நெறியின் ஒரு வளவாளராக செயற்படுகின்றார். அத்துடன் கிழக்கு மாகாண பொதுச்சேவை விசாரனை குழுவின் ஒரு விசாரனை அதிகாரியாகவும் தற்போதும் செயற்பட்டு வருகின்றார்.

இவ்வாறு தன் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காக அர்பணித்து சேவையாற்றி இவரை இன்றைய தினத்தில் 04.02.2022 அன்று சிறந்த சிரேஸ்ட அரச சேவையாளர் என கௌரவிப்பதில் பெருமையடைகின்றனர்.

(தொகுப்பாகம்- சமுர்த்தி ஜெயா.)



Comments