மீண்டும் ஒரு முறை மீட்டிப்பார்ப்போம் அதே நாளின் நினைவுகளை...

  நானும் என் சமுர்த்தியும்..... (முதல் பகுதி)


இற்றைக்கு 
25 வருடங்களுக்கு முன்பு நடந்தவை இன்றும் என் மனதில் புதைந்து கிடக்கின்ற எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விளைகின்றேன் என் எண்ணக்கருவாகவே இது அமையவுள்ளது. மாற்றங்கள் இருப்பின் மாற்ற முயற்சிப்போம் நான் இன்று வரை நேசிக்கும் என் சமுர்த்தி என்னை உயர்த்துமே தவிர என்னை தாழ்த்தாது நான் வீழ்ந்து விட மாட்டேன் இது உறுதி......

30.06.1995 வெள்ளிக்கிழமை அன்று என்னை நோக்கி ஒரு கடிதம் வந்தது வேலை தேடும் படலத்தில் திரிந்த எம் போன்ற இளைஞர்களுக்கு என்னடா இது என ஆர்வத்தோடு அக்கடிதத்தை பிரித்து படித்தேன். அக்கடிதம் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தால் எனக்கு அனுப்பபட்டிருந்தது. சமுர்த்தி ஊழியர்(ஊக்குவிப்பாளர்) பதவிக்கு நியமனம் வழங்க  நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்ட கடிதமாக அது இருந்தது.

கடிதத்தில்  10.07.1995 சனிக்கிழமை  அன்று 2.00 மணிக்கு நேர்முக தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுத்தப்பட்டிருந்தது. அன்றைய தினம் நானும் ஏனோ தானோ என்று சென்றேன், அவர்கள் கல்விச்சான்றிதழ், பிறப்பு அத்தாட்சி பத்திரம், அன்மையில் பெறப்பட்ட வதிவிட அத்தாட்சி பத்திரங்களை பார்த்து விட்டு அனுப்பி விட்டனர்.  அக்காலத்தில்  பல நேர்முக தேர்வில் கலந்து கொண்ட எனக்கு இதுவொன்றும் புதிதாக தெரிவில்லை என்னடா புதிசா சமுர்த்தி ஏமாத்துறானுகள் என எண்ணியவாறு இவ்விடயம் சாதாரமாணதாகவே கடந்து போனது. காலங்கள் கடந்து போனது  நேர்முக தேர்விற்கு போய் ஒன்றரை வருடங்கள் கடந்தோடின.

காலம் கடந்து செல்ல 04.01.1997 வெள்ளிக்கிழமை அன்று காலை எனக்கு ஒரு தந்தி வந்துள்ளதாக அம்மா தகவல் அனுப்பினார் என்னடா எனக்கு தந்தியா?  என கேட்ட வண்ணம் வீட்டிற்கு வந்து பிரித்து படித்தேன் 06.01.1997 திங்கட்கிழமை அன்று தன்னை வந்து தனது அலுவலகத்தில் சந்திக்குமாறு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் அழைத்திருந்தார். ஒன்றறை வருடம் நேர்முக தேர்வு முடிவுற்றுள்ளது இவர் இப்ப கூப்பிடுறார் என்று ஏனோ வேண்டா வெறுப்பாக திங்கட்கிழமை காலை நான் எனது தந்தையாரை அழைத்துக் கொண்டு சுபராஜ் திரையரங்கிற்கு பின் பகுதியில் அமைந்திருந்த  அவரது அலுவலகத்திற்கு சென்றோம். அங்கு எனக்கு அறிமுகமான சிலரும் அறிமுகமில்லாத பலரும் இருந்தனர். சற்று நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் உங்களை சந்திப்பார் எனும் தகவல் எல்லோரிடமும் அறிவிக்கப்பட்டது.

  நேரம் சென்று  கொண்டே இருந்தது நேரம் செல்லச் செல்ல பதட்டமும் மன சோர்வும் ஏற்பட்டது இது நடக்குமா? நடக்காதா? என எண்ணியவனாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தோம். ஒரு வழியாக பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் வருகை தந்தார். அவர் கூறுகையில் இந்த அரசாங்கத்தால் உங்களுக்கு சமுர்த்தி ஊக்குவிப்பாளர் எனும் நியமனம் வழங்கப்படவுள்ளது இதற்காக உங்களுக்கு 2000 (இரண்டாயிரம் ரூபாய்) மாதாந்தம் வழங்கப்படும் என தெரிவித்ததுடன் நாளை 07.01.1997 அன்று அதற்கான நியமன கடிதம் உங்களுக்கு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார் வந்தவர்கள் அனைவரும் அவருக்கு நன்றி கூறி சென்றனர். நானும் எனது தந்தையாருடன் வீடு வந்தடைந்தேன்.

 ஒரே பதட்டம் நாளை என்ன உடுப்பு போடுறது எப்படி போவது என்று இரவு படுக்கைக்குச் சென்றால் நித்திரையே வரவில்லை எப்படா நாளைக்கு விடியும் என மனம் துவன்டது. ஒருவாறு விடிந்து விட்டது காலை 8.00 மணிக்கு மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்திற்கு வருமாறு எங்களுக்கு அறிவித்தல் கடிதம் கிடைக்கப்பட்டிருந்தது. நானும் ஒருவனாக அரசடி தேவநாயகம் மண்டபத்திற்கு சென்றேன் எங்கு பார்த்தாலும் இளைஞர் பட்டாளமே காணப்பட்டது ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் ஆதரவாளர்கள் புடை சூழ காணப்பட, மாவட்ட கட்சி அமைப்பாளர்களும் தங்கள் ஆதரவாளர்களுடன் கலந்துரையாட ஒவ்வொரு பிரதேச செயலாளர்களும் தங்கள் பணிகளை செய்து கொண்டிருக்க தேவநாயகம் மண்டபமே நிரம்பி வழிந்தது. முக்கிய பிரமுகர்கள் வருகை தந்தனர் நிகழ்வு ஆரம்பமானவுடன் நியமன கடிதங்கள் எங்களுக்கு வழங்கப்பட்டன அக்கடிதத்தில் 1997.01.07 செவ்வாய்கிழமை அன்று தொடக்கம் நீங்கள் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தாமரைக்கேணி 177/B கிராமத்திற்கு சமுர்த்தி ஊக்குவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள் என குறிப்பிட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் அவர்களால் எங்களுக்கு நியமன கடிதம் வழங்கப்பட்டது. இதன் போது ஒரு தடித்த உருவம் கொண்ட ஒருவர் அங்கும் இங்கும் மிகவும் வேகமாக செயற்பட்டுக் கொண்டிருந்தார் அவரைப் பற்றி பிறகு பார்ப்போம். ஒரு கிராமத்திற்கு இருவர் என நியமிக்கப்பட்டிருந்தோம் மற்றையவர் யார் என அறியவே முயற்சிக்கவில்லை சந்தோசத்தில் மண்டபத்தில் இருந்து வெளியேறி வீட்டை வந்தடைந்தேன். 

தொடரும்............



  

Comments