அறிந்ததும் அறியாததும் பாகம் (08)........ புனித மிக்கல் கல்லூரிக்கு ஐந்து லட்சம் ரூபாய் பெறுமதியான கிரிக்கெட் உபகரணங்கள்......
அறிந்ததும் அறியாததும் பாகம் (08)........
புனித மிக்கல் கல்லூரிக்கு ஐந்து லட்சம் ரூபாய் பெறுமதியான கிரிக்கெட் உபகரணங்கள்......
மட்டு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சியில் KSC மற்றும் KSV யின் பங்களிப்பு.....
மட்டக்களப்பு பாடசாலை கிரிக்கெட் சங்கம் சிறப்பாக செயற்படும், அதற்கான உதவிகளை வழங்கி மட்டக்களப்பு பாடசாலைகளின் கிரிக்கெட் வளர்ச்சியை மேம்படுத்தலாம் என நினைத்திருந்த கோட்டைமுனை விளையாட்டு கழகத்திற்கும், கோட்டைமுனை விளையாட்டு கிராமத்திற்கும் இறுதியில் அது வெற்றியளிக்காதது கவலையான விடயமாகவே தென்பட்டது. இவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு நேரடியாக தாம் பாடசாலைகளுடன் தொடர்பை ஏற்படுத்தி பாடசாலைகளுக்கு உதவிகளை வழங்குவதன் மூலம் இதை வளர்த்தெடுக்க முடியும் என கருதி ஒரு தொகை கிரிக்கெட் உபகரணங்களை புனித மிக்கல் கல்லூரிக்கு வழங்க முடிவெடுத்தது கோட்டைமுனை விளையாட்டு கிராமம்.
இதன் அடிப்படையில் 2019.02.12ம் திகதி அன்று கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் ஏ.சிவநாதன் அவர்களால் புனித மிக்கல் கல்லூரி பாடசாலையின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா அவர்களிடம் சுமார் ஐந்து லட்சம் ரூபாய் பெறுமதியிலான கிரிக்கெட் உபகரணங்களை கையளித்து பாடசாலை கிரிக்கெட்டினை மேம்படுத்துமாறு வேண்டு கோளையும் விடுத்திருந்தது.
இதன் போது கருத்து தெரிவித்த கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் ஏ.சிவநாதன் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக கோட்டைமுனை விளையாட்டு கிராமம் மற்றும் கோட்டைமுனை விளையாட்டு கழகம் 2016ம் ஆண்டு முதல் பல்வேறு வேலைத்திட்டங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்து வருவதை பலர் அறிந்தும் பலர் அறியாமலும் இருக்கலாம் ஆனால் இன்று நேரடியாக நாம் பாடசாலை கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த புனித மிக்கல் கல்லூரிக்கு கிரிக்கெட் உபகரணங்களை வழங்கி உதவி செய்ததுடன் இதே போல் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள பாடசாலைகளுக்கும் நாம் உதவி செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில் இன்று மட்டக்களப்பில் கிழக்கிலங்கையிலேயே முதல் தடவையாக மிகப்பிரமாண்டமானதொரு கிரிக்கெட் புற்தரை மைதானத்தை நாம் அமைத்து வருகின்றோம் இம்மைதானத்தை அமைப்பதற்கு மட்டக்களப்பில் இருந்து புலம் பெயர்ந்து வாழும் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழக அங்கத்தவர்களின் பங்களிப்புடன் இந்த மைதானம் அமைக்கப்பட்டு வருகின்றது. இம்மைதனத்திற்கு சுமார் 200 மில்லியன் ரூபாய் செலவில் உருவாக்கப்படவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் முன்னாள் மட்டக்களப்பு கல்விப்பணிப்பாளர் K..பாஸ்கரன் அவர்களும், வலய உடற்கல்விப்பணிபாளர் V.லவக்குமார் அவர்களும், புனித மிக்கல் கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் அருட்பணி ஸ்;ரனிஸ்லாஸ் அடிகளார் அவர்களும், கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் நம்பிக்கையாளர் சபையின் பிரதிநிதியும் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் பொருளாளருமான செ.ரஞ்சன் அவர்களும், கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் நம்பிக்கையாளர் சபையின் பிரதிநிதி ச.காசிப்பிள்ளை அவர்களும் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் பே.சடாற்சரராஜா அவர்களும், கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் அங்கத்தவர்கள், புனித மிக்கல் கல்லூரியின் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் முன்னாள் வலய பணிப்பாளர் K..பாஸ்கரன் அவர்கள் உரையாற்றும் போது கோட்டைமுனை விளையாட்டு கிராமம் தனி ஒரு அமைப்பாக இருந்து மிகப் பெரியதொரு புற்தரை மைதானத்தை அமைத்து வருவதை தாம் பாராட்டுவதாகவும், கிரிக்கெட் விளையாட்டை மட்டக்களப்பில் மேம்படுத்த புனித மிக்கல் கல்லூரிக்கு கிரிக்கெட் உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் இதற்கு மட்டக்களப்பில் இருந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் அங்கத்தவர்களில் முக்கியமாக புவனசிங்கம் வசீகரன் அவர்களுக்கு தம் பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
இதன் போது கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் செயலாளர் சா.அருள்மொழி அவர்கள் கருத்து தெரிவிக்கையில் கோட்டைமுனை விளையாட்டு கிராமம் விளையாட்டுடன் தொடர்புடையவர்களுக்கு விளையாட்டு, கல்வி, வாழ்வாதாரம் போன்றவற்றின் மேம்பாட்டிற்கான உதவிகளை வழங்கும் என தெரிவித்தார்.
கோட்டைமுனை விளையாட்டு கழகமும், கோட்டைமுனை விளையாட்டு கிராமமும் சோரவில்லை முடக்கப்பட்ட மட்டக்களப்பு பாடசாலை கிரிக்கெட் சங்கம் ஒரு புறம் இருக்க நேரடியாக தம் செயற்பாட்டில் இறங்கி இருந்தது. இதன் போது பல உறுதி மொழிகள் அன்று (2019.02.12) அவ்விடத்தில் பலராலும் தெரிவித்ததை நம் காதுகளிலும் எட்டியது. நிச்சயமாக 13 வயதிற்குட்பட்ட, 15 வயதிற்குட்பட்ட மற்றும் 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணிகள் உருவாக்க இந்த உபகரணங்கள் பேருதவியாக இருக்கும் என்று ஒரு சாராரும், நிச்சயமாக இன்னும் ஒரு வருடத்தில் சிறந்த பாடசாலை அணியை உருவாக்க முடியும் என ஒரு சாராரும், இது மாணவர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என ஒரு சாராரும், பாடசாலை மட்டத்தில் 13, 15, மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளை பாடசாலை மட்டத்தில் ஏற்படுத்தி வேறு மாவட்ட பாடசாலையுடன் போட்டிகளில் பங்குபற்ற செய்வோம் என ஒரு சாராருமாக அன்று கருத்து தெரிவித்தனர்.
இது பலருக்கு அறிந்திராத விடமாக இருந்திருக்கும் சிலருக்கு அறிந்த விடமாக இருந்திருக்கும் இன்னும் சுவாரஸ்சியமான செய்திகள் உள்ளன .....
தொடர் தொடரும்......
Comments
Post a Comment