அறிந்ததும் அறியாததும் பாகம் (02)........

 அறிந்ததும் அறியாததும் பாகம் (02)........

   மட்டு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சியில் KSC மற்றும்  KSV யின்  பங்களிப்பு.....  

இந்துக்கல்லூரி மாணவர்களான ரெட்ணராஜா தேனுரதன் மற்றும் மோகனசுந்தரம் சாருகன் இவர்களில் யார் கொழும்பில் உள்ள பிரபலமாக இருக்கும் 26 கழகங்களில் இணைக்கப்படவுள்ளார்கள் என்பது பலருக்கு கேள்விக்குறியாக இருந்தது.   கோட்டைமுனை விளையாட்டு கழகத்தில் இருந்து முதலாவது வீரராக இவர்களில் இருந்து யார் இணையவுள்ளார் என நானும் அங்கலாய்த்தவனாக தான் இருந்தேன்.

மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் மூத்த உறுப்பினரும் இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் புவனசிங்கம் வசீகரன் அவர்கள் அப்போது இலங்கைக்கு வருகை தந்திருந்தார் அவர் கொழும்பில் உள்ள மிகவும் பிரபல்யம் வாய்ந்த புளும்பீல்ட் கிரிக்கெட் கழகத்துடன் (Bloomfield Cricket Club) தொடர்பை ஏற்படுத்தி எமது கழகத்தில் உள்ள வீரர்களை தங்கள் கழகத்துடன் இணைத்து பயிற்சிகளை மேற்கொள்ள வாய்ப்பளிக்க முடியுமா? என கேட்ட போது அவர்கள் கூறினார்கள் கோட்டைமுனை விளையாட்டு  கழகத்தை நாம் அறிந்த பிறகு இதற்கான முடிவை ஓர் இரு தினங்களில் தாங்கள் தெரிவிப்பதாக அறிவித்திருந்தனர். கொழும்பு புளும்பீலட் கிரிக்கெட் கழகமானது  (Bloomfield Cricket Club) இலங்கையின் புகழ்பூத்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய கழகமாகும் பந்துல வர்ணபுர, ரொசான் மஹாநாம, சனத் ஜெயசூரிய, குமார் தர்மசேன போன்ற பெறுமதி வாய்ந்த வீரர்களை இலங்கை தேசிய அணிக்கு கொடுத்த கழகமாகும். இந்த கழகத்தில் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் வீர்கள் இணைந்து கொள்ளப் போவதை இட்டு கழக மட்டத்தில் பெரிய பரபரப்பு நிலவியது.

இரண்டு நாட்களின் பின்னர் தகவல் வெளியாகியது கொழும்பு புளும்பீலட் கிரிக்கெட் கழகத்துடன் (Bloomfield Cricket Club) இணைந்து தங்கள் வீரர்கள் பயிற்சி பெறுவதற்கான அனுமதியை எமக்கு அவர்கள் வழங்கி இருந்தார்கள். தொடர்ந்தும் வீரர்களை வருடா வருடம் அனுப்பும் பட்சத்தில் தாம் அவர்களுக்கான பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கான போட்டிகளையும் ஏற்பாடு செய்து தருவதாகவும் குறிப்பிட்டார்கள். தற்போது முதல் கட்டமான ஒரு வீரரை தாம் இணைத்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

அப்போது பாடசாலை மட்டத்தில் இவ்விரு வீரர்களும் மிகச்சிறப்பாக செயற்பட்ட வீரர்களாக  இருந்த போதிலும் ரெட்ணராஜா தேனுரதன் அவர்களை கொழும்பு புளும்பீல்ட் கிரிக்கெட்  கழகத்தில் (Bloomfield Cricket Club) இணைப்பதற்கான அனுமதியை கோட்டைமுனை விளையாட்டு கழகம் வழங்கி இருந்தது. எனவே முதல் முதலில் கொழும்பில் உள்ள ஒரு பிரபல கழகத்தில் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் வீரராக ரெட்ணராஜா தேனுரதன் இணைத்துக் கொள்ளப்பட்டார். இது சிலருக்கு அறிந்தும், பலருக்கு அறியாமலும் இருக்கலாம். ஆனால் இது தான் உண்மையின் வரலாறு இதை யாரும் மறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது இதை நான் ஏன் ஆணித்தரமாக கூறுகின்றேன் என்றால் இச்சம்பவம் நடக்கும் போது நானும் ஒரு பார்வையாளனாக அல்ல பங்காளியாகவே பணியாற்றி இருந்தேன். ரெட்ணராஜா தேனுரதன் அவர்களுக்கு தேவையான சகல வசதிகளும் கொழும்பில் செய்து கொடுக்கப்பட்டது. இவ்வாறு கோட்டைமுனை விளையாட்டு கழகம் பாடசாலை மட்டத்திலான கிரிக்கெட் வீரர்களை மேம்படுத்த உதவியதை நாம் மறந்து விடக் கூடாது.

பிற்காலத்தில் இப்பயணம் இடைநடுவில் கைவிடப்பட்டது தான் மிக வேதனையான விடயமாக இருந்தது இவரைத் தொடர்ந்து வேறு யாரும் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தில் இருந்து கொழும்பில் உள்ள கழகங்களில் இணைக்க கோட்டைமுனை விளையாட்டு கழகத்தால் முயற்சி எடுக்கப்படவில்லை புதிய மாற்றத்துடன் கோட்டைமுனை விளையாட்டு கழகம் மற்றுமொரு முயற்சியை மேற் கொண்டுள்ளதை அடுத்த தொடரில் பார்ப்போம்.....

தொடர் தொடரும்......


Comments