புதிதாக கோப்பாவெளியில் சமுர்த்தி வங்கி திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.....

 புதிதாக கோப்பாவெளியில் சமுர்த்தி வங்கி திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.....



மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக ஒரு சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி கோப்பாவெளி கிராமத்தில்  பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும்  மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சாதாசிவம் வியாளேந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக 22.12.2021 ஆகிய இன்று கையளிக்கப்பட்டது.

மங்களகம, பெரியபுல்லுமலை, கோப்பாவெளி, கித்துள், உறுகாமம் கிராம மக்கள் தங்கள் சமுர்த்தி தேவை கருதி கரடியநாறு சமுர்த்தி வங்கிக்கு வருகை தருவதில் பாரிய பிரச்சனைகளை எதிர் கொள்ளவதை கருத்தில் கொண்டு மக்களின் சேவையை இலகுவாக்குவதற்காக  கோப்பாவெளி கிராமத்தில் இப்புதிய சமுர்த்தி வங்கி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுமார் 26 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட இச்சமுர்த்தி திட்டத்தில் மக்கள் பல நன்மைகளை அடைந்து வந்துள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது 29 சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிகள் இயங்கி வருகின்றன இன்று திறக்கப்பட்டுள்ள கோப்பாவெளி சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிகள் செயற்படவுள்ளன.

ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும்  மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சாதாசிவம் வியாளேந்திரன் அவர்களால் கோப்பாவெளி சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் க.கருணாகரன்  அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி கணக்காளர் M.S.பஸீர் அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும், மாவட்ட சமுர்த்தி வங்கிப்பிரிவின் முகாமையாளர் நிர்மலாதேவி கிரிதராஜா அவர்களும், மாவட்ட சமுர்த்தி பிரிவின் உள்ளக கணகாய்வு முகாமையாளருமான ஏ.முரளிதரன் அவர்களும், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார உத்தியோகத்தர்கள், கிரம உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். கோப்பாவெளி சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் முகாமையாளராக S.இராசலிங்கம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 














Comments