நானும் என் சமுர்த்தியும் 94ம் தொடர்.......

 நானும் என் சமுர்த்தியும் 94ம் தொடர்.......

சமுர்த்தி திட்டத்தில் சர்வதேச தினங்களை அனுஸ்டிப்பது வழமையான விடயமாகவே காணப்படுகின்றது. நான் கிராம மட்டத்தில் பல நிகழ்வுகளை வருடந்தோறும் நடாத்தி வந்துள்ளேன். 2012ல்  செயற்பாடுகளை சமுர்த்தி அதிகாரசபை வெளியிட்டு இருந்தது.

சர்வதேச மகளிர் தினம் - மார்ச் 08 - சர்வதேச மகளிர் தினத்தோடு இணைந்ததாக பிரதேச மட்டத்தில் மகளிர் தின வேலைத்திட்டங்களை நடாத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், அதற்கமைய சமூக அபிவிருத்தி மன்றம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அனுசரனைக்கமைய பெற்றுக் கொண்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மகளிருக்கான நலன்புரி வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும். தொடர்ந்து நிவாரணங்களில் மாத்திரம் தங்கி வாழ்வதற்குப் பதிலாக அவர்களது சக்தி வளர்ச்சிக்கு ஆற்றல் விருத்திக்கு உதவி வழங்கப்பட வேண்டும். இதனுடாக அவர்களுக்கு கடன் வசதிகளை வழங்குவதனூடாக அவர்களை வலுவூட்டி பயனுள்ள ஒரு முயற்சியாளராக அவர்களை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.  இவ்வாறான பெண்களின கருத்தில் கொண்டு பிரதேச, மாவட்ட மட்டங்களில் பல்வேறு பாராட்டு வைபவங்களையும், ஊக்குவித்தல் மற்றும் விழிப்பூட்டல் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதேச மட்டத்தில் பின்வரும் வேலைத்திட்டங்களை செயற்படுத்தவும் முன்மொழியப்பட்டிருந்தது. ஆற்றல் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், கர்ப்பிணித்தாய்மார் வேலைத்திட்டம், பெற்றோர் யாத்திரிகை வேலைத்திட்டம், வீட்டு முகாமைத்துவம் மற்றும் குடும்ப அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், சமுர்த்தி வேலைத்திட்டத்தினூடாக முன்னேறி வந்துள்ள ஊக்கமிகு பெண்களைப் பாராட்டி கௌரவிக்கும் வேலைத்திட்டம், இரத்தத்தான வேலைத்திட்டங்கள், பெண்களின் பலத்தை வெளிக்கொணரும் வேலைத் திட்டங்கள் போன்றவற்றை நடைமுறை படுத்தும் படியும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

இதே போன்று சர்வதேச புகைத்தல் எதிர்ப்புத்தினம் - மே மாதம் 31ம் திகதி நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என இலங்கை சமுர்த்தி அதிகாரசபை அறிவுறுத்தி இருந்தது. திவிநெகும சமுர்த்தி சக்தியினை சேர்த்து புகைத்தலுக்குச் செலவாகும் தொகையினை நாட்டின் அபிவிருத்திக்கு என மாவட்டம் மற்றும் தேசிய மட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன. இதற்காக நாடு பூராகவும் கொடி விற்பனை வேலைத்திட்டமொன்று நடைபெற்று வருகின்றது. அதன் மூலம் பெற்றுக்கொள்ளப்படுகின்ற நிதி பிரதேச மட்டத்தில் சமூக அபிவிருத்தி மன்றங்களில் வைப்புச் செய்யப்படுகின்றது. அந்நிதியினைப் பயன்படுத்திக் கொண்டு போதைத்தடுப்பு வேலைத்திட்டங்கள் வீடமைப்பு மற்றும் கழிவறைகள் அமைக்கும் வேலைத்திட்டங்கள், பிரதேச அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், பல்வேறு நலன்புரி வேலைத்திட்டங்கள் மற்றும் அனர்த்த வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் குறைந்த வருமானம் பெறும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு பங்களிப்புச் செய்து வருகின்றன. இதன் அடிப்படையில் பல வருடங்களாக  கொடி விற்பனையின் வருமானங்கள் கீழ் உள்ளவாறு சேமிக்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு 51.9 மில்லியன் ரூபாக்களும் 2008ம் ஆண்டு 68.1 மில்லியன் ரூபாக்களும்  2009ம் ஆண்டு 83.2 மில்லியன் ரூபாக்களும்  2010ம் ஆண்டு 79.3 மில்லியன் ரூபாக்களும்  2011ம் ஆண்டு 86.3 மில்லியன் ரூபாக்களும் 2012ம் வருடம்  123.5 மில்லியன் ரூபாக்கள் சேமித்து சாதனை படைத்துள்ளதாகவும் அறியப்படுகின்றது.

 

இதற்கிடையில் சமுர்த்தி அதிகார சபையால் வாழ்வாதார உதவிகள் சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதன் போது கல்லடிவேலூர் கிராமத்திலும் சமுர்த்தி பயனாளிகளுக்கு 10 கோழிகுஞ்சுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது கல்லடி சமுர்த்தி வலயத்தில் வைத்து வலய உதவியாளர் K.குமணன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இதன் போது சமுர்த்தி வங்கி உதவி முகாமையாளர் S.சிவாகரன் அவர்களும், சமுர்த்தி உத்தியோகத்தர் S.ஸ்ரீதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தொடரும்.....







Comments