இறுதி வரை துடிப்புடன் வாழ்ந்த ரவி சேர்.......
இன்று நான் ஒரு நல்ல நிலையில் இருப்பதற்கு ஒரு ஊந்து சக்தியாக இருந்தவர் தான் அன்றும் இன்றும் எல்லோராலும் அன்புடன் ரவி என்று அழைக்கப்படும் ரவி சேர் தான். என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நல்ல உள்ளம் கொண்ட ஒரு மனிதர் சில வருடங்களுக்கு முன் அவரை வீதியில் சந்தித்த போது எந்த இடம் என்று பாராமல் அவரின் பாதங்களை தொட்டு வணங்கினேன். அவ்வாறு ஒரு மரியதைக்குரிய மனிதர் தான் அவர். அவருடன் நான் பின் நோக்கிய காலப்பார்வையில் உங்களுடன்......
1983ம் ஆண்டு இருக்கும் என்று நான் நினைக்கின்றேன் நான் அப்போது அரசடி மகா வித்தியாலத்தில் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்றேன். சமூகக்கல்வி படிப்பிப்பதற்காக ரவீந்திரன் என்று ஒரு ஆசிரியர் வந்துள்ளதாக தகவல் கிடைத்தது. எனக்கு சுத்த சூனியமாக சமூகக்கல்வி பாடம் அப்போது இருந்தது. பாப்பம் என்ன நடக்கப் போகின்றது என்று. அன்றைய தினம் நான் அவரை நேரில் சந்தித்தேன். மெலிவான உடல்வாகு, உடலை பிடித்ததாக அவர் அணிந்திருந்த சேட், நேரான நடை, ஆனால் தலையை மட்டும் சற்று சாய்ந்ததாக வைத்திருந்தார். சிரிக்கும் போது அவரது கொடுப்பு பல் இல்லாததை தெரிந்து கொண்டேன். இவ்வளவும் கவனித்த நான் இவருடன் பிற்காலத்தில் எப்படியெல்லாம் ஐக்கியமாகி இவருடன் வாழப் போகிறேன் என்று அந்த நிமிடம் கூட எண்ணவில்லை.
அக்கால கட்டத்தில் விஞ்ஞான பாடம் கற்பிக்க தெய்வேந்திரா சேரும், உடற்கல்வி ஆசிரியராக பீலிக்ஸ் சேரும், இவருமாக இளம் ஆசிரியர்களாக இருந்து அரசடியில் ஒரு கலக்கு கலக்கி வந்தனர். முதல் நாள் எங்கள் வகுப்பிற்கு பாடத்திற்கு வந்த ரவி சேர் தான் மலையத்தில் கற்பித்து விட்டு மாற்றலாக இங்கு வந்துள்ளதாகவும் சகலரும் பாடத்தில் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்றார். அப்போது எங்களுக்கு இலங்கை படத்தை மிக இலகுவாக வரையக் கற்றுத்தந்தார். அவர் கற்பிக்கும் பாடம் எங்கள் மனதில் பதிய வேண்டும் என்பதற்காக நகைச்சுவையான பல கதைகளை எங்களுக்கு சொல்லி அதை நினைவூட்டி கற்பித்தல் நடவடிக்கையை அழகு படுத்தினார். சமூகக்கல்வி பாடம் என்றாலே ஒளித்தோடிய நான் அவரின் பாடம் எப்போது வரும் என ஆவலாய் இருந்தேன்.
அப்போது அரசடி மகாவித்தியாலத்தில் பெண்கள் மட்டுமே வெள்ளை சீருடையில் வந்து கொண்டிருக்க ஆன்கள் கலர் சேட்டுடன் பாடசாலை வந்தார்கள் இதை மாற்ற வேண்டும் என முடிவெடுத்து சகல ஆண்களும் வெள்ளை வேட் அணிந்து வர வேண்டும் என ரவி சேர் அறிவித்தார். நான் தயங்கி தயங்கி அவரிடம் சென்று சேர் எனக்கு வெள்ளை சேட் இல்லை வாங்கவும் இப்ப வசதி இல்லை என்று கூறினேன். மறுநாள் தான் எனக்கு ஒரு வெள்ளை சேட்டை தந்தார் இது நான் பாவித்த சேட் நீ விரும்பினால் போடு என்றார் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை நன்றி சேர் என்று வாங்கிக் கொண்டேன். இந்நிகழ்வை நான் எப்போதும் என் வீட்டில் கதைத்தபடியே இருப்பேன். இன்றும் நினைவு கூர்ந்தேன்.
பாடசாலையில் கிரிக்கெட் அணியை ஆரம்பிப்போம் என பீலிக்ஸ் சேர் சொன்ன போது எனக்கு கிரிக்கெட் மட்டையே பிடிக்க தெரியாது ஆனால் பழகுவோம் என ரவி சேர் கூறினார். எங்களை உற்சாகப்படுத்தி காலப்போக்கில் பந்து வீசவும் தொடங்கி விட்டார். இவரது முயற்சியை நான் அன்று தான் புரிந்து கொண்டேன். இக்கால கட்டத்தில் என்னுடம் மிகவும் அன்பாகவும் நேசமாகவும் பழகிய அவர் என்ன வேலை என்றாலும் ஜெயதாசன் என அழைக்கும் நிலைக்கு நான் வந்து விட்டேன். அவரால் ஈர்க்கப்ட்ட நான் அவரைப் போல எழுதவும் கற்றுக் கொண்டேன். 11ம் ஆண்டில் வர்த்தக பாடம் நான் கற்ற போது அது பெரிதாக போகவில்லை ஒரு நாள் ரவி சேரிடம் கதைத்த போது வர்த்தக பாடம் பெரிதாக பிடிபடுகுது இல்லை என கூறினேன். உனக்கு சரி என்டா ஜந்து ஆறு பேர் வாங்க நான் இலவசமா படிப்பிக்கிறேன் என்றார். அப்போது புகையிரத வீதியில் இருந்த விமலநாதன் சேரின் டியூடரில் அதை எற்பாடு செய்து கற்பித்தார். இந்த வளவில் தான் அப்போது சாரங்கப்பாணி சேர் வசித்து வந்தார். வர்த்தக பாடம் இலகுவாக மனதில் பதிய பரீட்சைமீதியில் ஐ1, ஐ2, இ1, இ2 எனும் குறியிட்டு பதியும் முறையை சொல்லி தந்தார். அப்போது நான் கூறினேன் ஏன் சேர் 9 பாடங்களையும் நீங்க படிப்பிச்சா நாங்க இலகுவாக பாஸ் பண்னுவோம் என்றேன் அதற்கு அவர் இதை தவிர வேறு பாடம் சொல்லித்தர என்னால் முடியாது என்றார்.
பாடசாலையில் சரஸ்வதிபூசை, ஒளிவிழா, பரிசளிப்பு விழா, இல்ல விளையாட்டு போட்டி இவை எல்லாவற்றிக்கும் முன்நின்று உழைப்பார். பாடசாலை அபிவிருத்திக்காக அக்காலத்தில் திரைப்படங்கள் பாடசாலையில் போடுவது வழமை அதில் வரும் பணத்தை கொண்டு வறிய மாணவர்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார். எங்களுடன் அவர் இருந்த காலத்தில் தான் அவருக்கு கலைப்பிரிவிற்காக பட்டதாரிக்கான பட்டம் கிடைத்தது இதை நாங்கள் எங்கள் வகுப்பறையில் கரும்பலகையில் பெரிதாக எழுதி வரவேற்றோம். அதற்காக அவர் எங்களுக்கு சிற்றூண்டிகள் வாங்கி தந்தது இன்றும் என் நினைவில் உள்ளது.
1986ம் ஆண்டு க.பொ.த(சாதாரண) பரீட்சையில் சித்தியடைந்தேன் ரவி சேர் கற்பித்த சமூகக்கல்வியில்-C, வர்த்தகத்தில்-C பெற்றேன். அப்போது அரசடி மகாவித்தியாலத்தில் சௌந்தரராஜன் சேர் அவர்கள் அதிபராக இருந்தார். அங்கு உயர்தரம் இல்லாத காரணத்தால் கோட்டைமுனை மகா வித்தியாலத்திற்கு வரவேண்டிய நிலை எற்பட்டது. எனவே ரவி சேரிடம் சென்று நான் போய் வருகிறேன் என்றேன் அவர் கேட்டார் என்ன படிக்கப் போகிறாய் என்று நான் வர்த்தகம் என்றேன் உனக்கு தான் அது சுத்த சூனியம் ஆச்சே என்றார் நான் கூறினேன் நீங்க போட்ட அடித்தளத்தில் நான் நடக்கப் போகிறேன் என்றேன். சிரித்த படி கட்டியணைத்து விடை தந்தார்.
இன்று உயர்கல்வியில் மூன்று பாடம் சித்தியடைத்து ஒரு அரச பணியில் இருக்கிறேன் என்றால் அது ரவி சேர் எனக்கு போட்ட பிச்சை என்றே சொல்வேன். பல காலமாக அவரை சந்திக்க முடியவில்லை சில வருடங்களுக்கு முன் சந்தித்தேன் அதே நடை, அதே வேகம், அதே உடல்வாகு, உடை உடுத்தியதில் அதே அழகு என்னை பிரம்மிக்க வைத்தது. அவர் பாதத்தை தொட்டு வணங்கினேன் மனம் விட்டு கதைத்தேன் என் குடும்ப விபரங்களை கேட்டார் மிக சந்தோசம் என்றார். இன்று அவரை இழந்து நிற்கின்றோம் நல்ல ஆசான் என்றும் வாழ்வான் நான் மட்டுமல்ல என்னைப் போல் பலர் அவரால் உயர்த்தப்பட்டுள்ளார்கள்
உங்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் என்று உங்கள் மனதில் அழியா இடத்திலிருக்கும்
உங்கள் மாணவன்
பா.ஜெயதாசன்.
.
Comments
Post a Comment