மட்டு மாவட்டத்திற்கு புதிதாக இரண்டு சமுர்த்தி வங்கிகள்.....

 மட்டு மாவட்டத்திற்கு புதிதாக இரண்டு சமுர்த்தி வங்கிகள்.....

மக்களின் நலன் கருதி மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக இரண்டு சமுர்த்தி வங்கிகள் திறக்கபடவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அ.பாக்கியராஜா அவர்கள் தெரிவித்துள்ளார். ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கரடியனாறு சமுர்த்தி வங்கி இரண்டாக பிரிக்கப்பட்டு புதிய சமுர்த்தி வங்கியானது கோப்பாவெளியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும். கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சந்திவெளி சமுர்த்தி வங்கி இரண்டாக பிரிக்கப்பட்டு புதிய சமுர்த்தி வங்கியானது புலிபாய்ந்தகல்லில்  ஆரம்பிக்கப்படுவதாகவும்  தெரிவித்ததுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது 29 சமுர்த்தி வங்கிகள் இயங்குவதாகவும் புதிதாக திறக்கப்படும் இவ்விரண்டு சமுர்த்தி வங்கிகளுடன்  சேர்த்த மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 31 சமுர்த்தி வங்கிகள் இயங்கும் எனவும் தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில் கரடியனாறு சமுர்த்தி வங்கியை பொறுத்த மட்டில் மங்களகம தொடக்கம் கொம்மாதுறை மேற்கு வரையிலான பதுளை வீதியில் உள்ள கிராமங்கள் அமைந்துள்ளதால் மங்களகம, பெரிய புல்லுமலை, கோப்பாவெளி, உருகாமம், கித்துள் போன்ற கிராமசேவகர் பிரிவில் இருந்து கரடியனாறு சமுர்த்தி வங்கிக்கு பயணிக்கும் போது தொலைதூர பிரயாணமாக அமைவதால் மக்கள் பெரும் சிரமமடைவதாகவும் குறிப்பிட்ட அவர் இவ்வங்கியை இரண்டாக பிரித்து கோப்பாவெளியில் இவ்வங்கியை அமைப்பதால் மங்களகம மற்றும் பெரிய புல்லுமலை மக்களுக்கு பெருதவியாக இருக்கும் என்றார். 

இதே போல் சந்திவெளி வங்கியை பொறுத்தமட்டில்  முறுத்தானை, குடும்பிமலை, போன்ற கிராமங்கள் சந்திவெளி சமுர்த்தி வங்கிக்கு தொலை தூரத்தில் இருப்பதாலும் மழை காலத்தில் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு வெள்ளப் பெருக்கும் ஏற்படுவதால் மக்கள் பெரும் சிரமப்படுகின்றார்கள். எனவே  புலிபாய்ந்தகல்லில் சமுர்த்தி வங்கி அமைவதால் இக் கிராம மக்களுக்கு பெருதவியாக இருக்கும் என்றார். மேலும் இவ்விரு சமுர்த்தி வங்கிகளும் வெகு விரைவில் திறக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


       






Comments