நானும் என் சமுர்த்தியும் 90ம் தொடர்.......
20.03.2012 தொடக்கம் வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பிரதேச செயலாளரான S.கிரிதரன் அவர்கள் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு வருவதாகவும் கலாமதி பத்மராஜா அவர்கள் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு உதவிச் செயலாளராக பதவி உயர்வு பெற்று சென்றுள்ளவுள்ளதாகவும் செய்தி எட்டியது. நான் சமுர்த்தி ஊக்குவிப்பாளராக கடமையேற்ற போது கலாமதி பத்மராஜா அவர்களே உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றி இருந்தார் பின்பு அவர் பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது அவருடன் பணியாற்றக் கிடைத்ததை பாக்கியமாக கருதினேன்.
வருடந்தோறும் நடாத்துவது போல் இவ்வருடமும் சமுர்த்தி மகளிரை கௌரவிப்பதற்கான பணிகளில் ஈடுபடுமாறு சமுர்த்தி ஒன்றியத்திடம் அறிவுருத்தி இருந்தேன். ஒரு சமுர்த்தி சங்கத்தில் இருந்து மூவரை தெரிவு செய்யுமாறும் வழமையில் பொதுவாக ஒருவரை தெரிவு செய்வதையும் குறித்து ஆராயுமாறு கூறி இருந்தேன். பொதுவான ஒருவராக ஸ்ரீ சக்தி வித்தியாலத்தின் அதிபரான T.அருட்சோதி அம்மணி அவர்களை கௌரவிக்க இருப்பதாக தெரிவித்தனர்.
24.03.2012 அன்று ஸ்ரீ சக்தி வித்தியாலத்தில் மதியம் 2.00 மணிக்கு நிகழ்வு ஆரம்பமானது. இந்நிகழ்வுக்கு புதுநகர் சமுர்த்தி சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் புளியந்தீவு சமுர்த்தி வங்கி முகாமையளர் K.நவரஞ்சன் அவர்களும் வருகை தர எமது முக்கிய கதாநாயகியாகிய ஸ்ரீ சக்தி வித்தியாலத்தின் அதிபரை எமது சமுர்த்தி ஒன்றிய உறுப்பினர்களும் அழைத்து வந்தனர்.
ஒவ்வொரு சங்கமாக தங்கள் மகளிரை கௌரவித்துக் கொண்டிருக்க கல்லடி வலய சமுத்தி முகாமையாளர் K.தங்கத்துரை அவர்களும், புதுநகர் கிரம சமுர்த்தி உத்தியோகத்தர் யூட் செல்வா இராஜரெட்ணம் அவர்களும் வருகை தந்தனர். நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க நிகழ்வுக்கு வருகை தந்தார் நாவற்குடா சின்ன லூர்து அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தை X.I.ரஜீவன் அடிகளார் அவர்கள் அவர்களுடன் எனக்கு எப்போதும் ஆலோசனை வழங்கி என்னை ஊக்கப்படுத்தும் ஒரு நண்பரான திரு.முருகவேள் அவர்களும் வருகை தந்திருந்தார். இதன் போது அன்றைய தினம் தனது பிறந்த தினத்தை திருமதி.புவனேஸ்வரி அம்பிகைபாகன் கேக் வெட்டி கொண்டாடியது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
கௌரவிப்புக்களில் முக்கிய நிகழ்வாக கௌரவிக்கப்படவிருந்த கல்லடி வேலூரின் ஸ்ரீ சக்தி வித்தியாலத்தின் அதிபர் திருமதி.T.அருட்சோதி அம்மணி அவர்கள் தான். இவர் கல்லடி வேலூர் கிராமத்தை மிக நேர்த்தியான பார்வையில் கிராமத்தையும் பாடசாலையையும் கொண்டு சென்றவர். நான் கடமையேற்ற காலம் முதல் இவருடன் பயணித்துள்ளேன் பாடசாலையில் தன் பாடசாலை பிள்ளைகளுக்காக இவர் பலரிடம் கையேந்தியதை நான் பார்த்திருக்கின்றேன். இவரது முயற்சியால் இப்பாடசாலை மிகவும் வேகமாக முன்னேறியதை நான் பார்த்து பிரம்மிப்பு அடைந்தேன் 5ம் ஆண்டு வரை இருந்த பாடசாலையை 10ம் தரம் வரை உயர்த்தி அதன் வளர்சியை கண்டவர். சிறார்களுக்கான கிரிக்கெட் விளையாட்டை கல்லடி புதுமுகத்துவாரம் விபுலானந்தா பாடசாலையுடன் தன் பாடசாலையையும் இனைத்து அதிலும் வெற்றி கண்டவர். மாணவர்களின் சீருடை, காலணி, சுத்தம், வரவு போன்றவற்றில் கவனமெடுத்து பெற்றோரை தம் சகோதரிகளாக நினைத்து அனைத்துச் சென்ற ஓர் தலைவி. பரிசளிப்பு விழா என்ன, நவராத்திரி விழா என்ன, 5ம் ஆண்டு புலமை பரீட்சை என்ன, பாடசாலை சுத்தம் மற்றும் அழகுபடுத்தல் என்ன, ஆசிரியர் தினம் என்ன, சர்வதேச தினங்கள் என்ன எல்லாவற்றையும் மிகச்சிறப்பாக ஒழுங்கமைப்பதில் இவரே கைதேர்ந்தவர் இவரிடம் இருந்தே நான் பல விடயங்களை கற்றுக் கொண்டேன். இப்படிப்பட்ட ஒரு சிறந்த சேவையாளரை 2012ம் வருடம் கல்லடி வேலூர் கிராம சமுர்த்தி ஒன்றியம் கௌரவிக்க தேர்வு செய்தது எனக்கு பெருமயாக இருந்தது.
இவரைப்பற்றி நான் ஒன்றை மட்டும் கூறுவேன் என்ன விடயம் ஆனாலும் துணிவுடன் செயற்படும் அன்பான தாய் இவர் தான்.
தொடரும்........
Comments
Post a Comment