ஒரு புறம் இச் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்க 2011ம் ஆண்டில் அபஹாமியா சமுர்த்தி சங்கம் தங்கள் சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் கூட்டத்திற்கு ஒழுங்காக வருகை தந்தோர், கடன் ஒழுங்காக செலுத்தியவர்கள், விசேட நிகழ்வுகளில் பங்கேற்றவர்கள், சிரமதானத்தில் கலந்து கொண்டோர் போன்றோரை கௌரவிக்க முடிவெடுத்து என்னிடம் அனுமதி கோரி வந்தனர் நானும் சிறந்த செயற்பாடு தானே ஒழுங்காக செயற்படுத்துமாறு கூறி இருந்தேன். அவர்கள் மிகச்சிறப்பாக ஒழுங்கமைத்து நடாத்தி இருந்தார்கள். நான் கடமையேற்று இரண்டு வருடத்தில் சங்கங்கள் தனித்தே செயற்படும் அளவிற்கு அவர்களை வளர்த்து விட்டேன் அவர்களே முடிவெடுக்கும் நிலையையும் ஏற்படுத்தி கொடுத்தேன். இக்கிராமத்தில் அபஹாமியா எனும் ஒரு சமுர்த்தி சங்கம் நான் வரும் போது மண்ணுக்குள் புதைந்த அத்திப்பட்டி கிராமம் போல் இருந்தது ஆனால் இப்போது மிகவும் விசாலமாக வளர்ந்து இருந்ததை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.
கல்லடி வேலூர் கிராமத்தின் செயற்பாடுகளை மிகவும் உன்னிப்பாக கவனித்த ஒரு கிராமமாக புதூர் கிராமம் திகழ்ந்தது. நாங்கள் நடாத்திய பல நிகழ்வுகளில் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் எம் சமுர்த்தி தாய் சங்கத்தை புதூர் கிராமத்திற்கு அழைத்து அதன் செயற்பாடுகளை அறிந்து கொள்ள ஆசைப்படுவதாகவும் இதற்காக தாம் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாகவும் கட்டாயம் வருமாறும் அழைத்திருந்தனர்.
நானும் என் தாய் சங்க அங்கத்தவர்களை அழைத்துக் கொண்டு புதுநகர் கிராமத்திற்கு சென்றேன். இதில் ஒரு விடயம் என்ன வென்றால் புதுநகர் கிராம சமுர்த்தி உத்தியோகத்தர் யூட் செல்வா இராஜரெட்னம் அவர்களும் நானும் நல்ல நண்பர்கள், இவரும் எம்மை அழைப்பாற்கு ஒரு காரணமாக இருந்தார். அங்கு சென்ற போது தான் புளியந்தீவு சமுர்த்தி முகாமையாளர் K.நவரஞ்சன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருப்பதை அறிந்து கொண்டேன்.
முழு நிகழ்வும் இந்த தாய் சங்கத்தை எப்படி வழிநடாத்துகின்றீர்கள் எப்படி சேமிப்பில் முதலிடம் பெறுகின்றீர்கள் கடன்களை எவ்வாறு ஒழுங்காக செலுத்த நடிவடிக்கை எடுக்கின்றீர்கள் என கேட்டார்கள். எங்கள் சமுர்த்தி ஒன்றிய தலைவி ம.தங்கேஸ்வரி அவர்கள் கூறினார், தொழில் பாதிப்பு காலத்தில் சமுர்த்தி கடனை திருப்பி செலுத்த முடியாதவர்களுக்கு நாங்கள் தாய் சங்கத்தின் ஊடாக சிறு சிறு கடன் வழங்கி அதை வாராந்தம் அறவிட்டு வருகின்றோம், இதனால் சமுர்த்தி கடன் ஒழுங்காக செலுத்தப்படுவதாகவும். சித்திரை, புகைத்தல், தைப்பொங்கல் சேமிப்பிற்கு சங்கங்களுக்கிடையில் போட்டியாக சேமிப்பு செய்யப்பட்டு சங்கங்களை கௌரவிப்பதாகவும், மற்றும் மின் கட்டணம், பாடசாலை உபகரணம் கொள்வனவு, சிறு தொழில் முயற்சிக்கு ஒன்றியத்தின் மூலம் சிறு சிறு கடன்களை சங்க கூட்டத்திற்கு ஒழுங்காக வருபவர்களுக்கும், சமுர்த்தி செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பவர்களுக்கும் வழங்குவதால் எமது கிராமம் சிறப்பாக செயற்படுவதாக குறிப்பிட்டார். நானும் என் பங்கிற்கு எனது மக்கள் பூரண ஒத்துழைப்பால் தான் இச் செயற்பாடுகள் நடைபெறுகின்றன நான் ஒரு பார்வையாளர் மாத்திரமே என்றேன்.
இன்று சமுர்த்தி திட்டத்தில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு என அறிமுகம் செய்யப்பட்டு சங்கங்கள் மூலம் மக்களுக்கு கடன் வழங்கும் வேலைத்திட்டம் நடைபெறுகின்றது. ஆனால் இந்த செயற்பாட்டை கல்லடி வேலூர் கிராம ஒன்றிய சங்கம் 2011ல் ஆரம்பித்து விட்டது என்பதை நான் இன்று பெருமையுடன் சொல்லிக் கொள்வேன். அதை தடுக்க எத்தனை பேர் முயற்சித்து அதை அழித்தும் விட்டனர் இது பற்றி காலம் வரும் போது எழுதுகிறேன்.....
Comments
Post a Comment