நானும் என் சமுர்த்தியும் 82ம் தொடர்.......
2011ம் ஆண்டின் இறுதி மாதத்திற்குள் சென்று கொண்டிருந்தேன் அப்போது கல்லடி வேலூர் கிராமத்தில் திரியபியச வீட்டுத்திட்டத்தின் மூலம் வீடு அமைத்துக் கொடுக்க ஒரு பயனாளி தெரிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் கடந்த மாதங்களில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்தது. அவ்வீட்டின் பணிகள் டிசம்பர் மாதம் 08ம் திகதி முடிவுற்று பயனாளியிடம் கல்லடி சமுர்த்தி வலய முகாமையாளர் K.தங்கத்துரை அவர்களால் கையளிக்கப்பட்டது. எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது நான் கடமையாற்றும் காலத்தில் ஒரு வீட்டை கல்லடிவேலூர் கிராமத்தில் அமைத்துக் கொடுத்துள்ளோமே என்று.
சர்வதேச நிகழ்வுகளை நடாத்தி வந்த நாம் சமயம் தொடர்பான நிகழ்வுகளையும் நடாத்தி வந்தோம். நவராத்திரி விழாவை வருடந்தோறும் நடாத்தி வந்த நாம் வருட கடைசி என்றால் ஒளிவிழா மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகளை நடாத்தி வந்தோம். 2011ல் ஒரு வித்தியாசமான முறையில் ஒளிவிழாவை நடாத்த தீர்மானித்தோம். ஒவ்வொரு சங்கமும் கட்டாயம் ஒரு கரோல் கீதம் பாட வேண்டும். இது சங்கங்களுக்கிடையே போட்டியாக நடைபெறும் என்றும் முதலாவதாக பெறும் கரோல் கீதத்திற்கு பரிசு வழங்குவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
சங்க ரீதியான இப்போட்டியில் ஆகக் குறைந்தது மூன்று போட்டியாளர்கள் கட்டாயம் பங்குபற்ற வேண்டும் என்றும், அனைவரும் ஒரே சீருடையில் போட்டியில் பங்கு பற்ற வேண்டும எனவும், வாத்திய கருவிகள் பாவிக்க முடியும் போன்ற நிபந்தனைகளுடன் போட்டியை நடாத்த தீர்மானித்தோம்.
கல்லடி கிராமமே சில நாட்கள் அல்லோல கல்லோலப்பட்டது. பாட்டுக்கான பயிற்சிகள், ஆடைகளை தயார் செய்தல் மற்றும் காட்சிப்படுத்தலுக்கான ஆயத்தங்கள் என பல்வேறு வேலைகளில் சங்க தலைவர்கள் செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.
போட்டி நாளும் வந்தது ஸ்ரீ சக்தி வித்தியாலத்தில் மாலை 4.00 மணிக்கு போட்டிகள் ஆரம்பமாகின நடுவர்களாக நாவற்குடா சின்ன லூர்து ஆலய பங்குத்தந்தை X.I.ரஜீவன் அடிகளார் அவர்களும், டச்பார் இஞ்ஞாசியார் ஆலய பங்குத்தந்தை ஜீவராஜ் அடிகளார் அவர்களும், கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தின் ஆசிரியை திருமதி.அமலநாதன் அவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
ஒவ்வொரு சங்கமும் தங்கள் போட்டியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க சீட்டுப் போட்டு போட்டி ஆரம்பமானது. இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி ஒருங்கிணைப்பாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும் வருகை தந்திருந்தார். போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன் அவர் உரையாற்றுகையில் இன்று இக்கரோல் போட்டி நிகழ்ச்சியில் முதலிடத்தை பெறும் குழுவினர் மாவட்ட செயலகத்தில் நடைபெறும் ஒளிவிழா நிகழ்வில் பங்குபற்ற சந்தாப்பம் வழங்கப்படும் என கூறினார். எந்த வித சமய வேறுபாடுகளும் இன்றி சங்க நலனுக்காக ஒன்று கூடிய சமுர்த்தி பயனாளிகள் உற்சாகத்துடன் போட்டிகளில் பங்கு பற்றினர். போட்டிகள் முடிவுற்றன இறுதியாக முதல் இடத்தினை பெற்ற சமுர்த்தி சங்கத்தின் பெயரை வெளியிட பிரதம நடுவர் X.I.ரஜீவன் அடிகளார் முன்வந்தார். யார் வெற்றி பெற்றது என்பதை அடுத்த தொடரில் பார்ப்போம்.....
தொடரும்....
Comments
Post a Comment