நானும் என் சமுர்த்தியும் 76ம் தொடர்.......

 நானும் என் சமுர்த்தியும் 76ம் தொடர்.......



இதற்கிடையில் சமுர்த்தி உத்தியோகத்தர் இரண்டாம் தரத்திற்கு உள்வாங்கப்பட்டவர்களை தரம் ஒன்றிற்கு நியமிப்பதாற்கான நேர்முக தேர்வு  நடைபெறவுள்ளதாக மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் P.குணரெட்னம் அவர்களின் கையோப்பத்துடன் கடிதம் அனுப்பபட்டிருந்தது. நானும் இரண்டாம் தரத்தில் இருந்ததால் எனது சேவைகளின் முன்னேற்றத்தின் ஆவணங்களை சேகரித்துக் கொண்டு நேர்முக தேர்வுக்கு தோற்றினேன். ஆனால் அதற்கான எந்த முடிவும் எனக்கு கிடைக்கவில்லை அதற்காக நான் சோர்வடையவில்லை என் பணியை நான் தொடர்ந்து செய்தேன்.

சர்வதேச நிகழ்வுகளை வருடம் தோறும் நடாத்தும் நான் 2011ம் ஆண்டும் சிறுவர் முதியோர் தின நிகழ்வுகளை நடாத்த கல்லடி வேலூர் சமுர்த்தி தாய் சங்கத்தின் ஊடாக ஏற்பாடு செய்தேன். இதற்கான ஓழுங்கமைப்பிற்காக தாய் சங்கத்தை அழைத்து அனுமதி பெற்றுக் கொண்டு வேலைகளை தொடங்கினேன். ஒவ்வொரு சங்கத்தில் இருந்தும் ஒவ்வொரு முதியோர் எனவும் வெளியிடத்தில் இருந்து ஒருவருமாக 10 முதியோர் கௌரவிக்கப்படுவர் என முடிவெடுக்கப்பட்டது. வெளியிடத்தில் இருந்து தெரிவு செய்யும் முதியவராக செலிங்கோ நிறுவனத்தின் முகாமையாளரான       அ. சாந்தகுமாரின் தந்தையாரான  திரு.அரசரெட்ணம் அவர்களையும் கௌரவிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது. இத்துடன்  5ம் ஆண்டு புலமை பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் கௌரவிப்பதுடன் இலவசமாக கருத்தரங்கை நடாத்தி தந்த ஆசிரியரையும் கௌரவிப்பதாக முடிவெடுக்கப்பட்டது.

நிகழ்வுகள் கல்லடிவேலூர் சமுர்த்தி தாய் சங்க தலைவி ம.தங்கேஸ்வரி அவர்களின் தலைமையில் ஸ்ரீ சக்தி வித்தியாலத்தில் ஆரம்பமானது.   முதலில் 5ம் ஆண்டு புலமை பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர் நான்கு சமுர்த்தி பயனுகரிகளின் பிள்ளைகள் சித்தியடைந்து கல்லடி வேலூர் கிராமத்திற்கு பெருமை தேடித்தந்தனர். இதன் பின் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 15 சமுர்த்தி பயனுகரிகளின் பிள்ளைகள் கௌரவிக்கப்பட்டனர். நாம் நினைவு சின்னம் பாடசாலை பை, புத்தகம், காலணி என கௌரவித்த போதிலும் ஒவ்வொரு சமுர்த்தி சங்கங்களும் தங்கள் சங்க அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கும் தம்மால் முடிந்த சிறு சிறு பரிசில்களை வழங்கி கௌரவித்து இருந்தது மிக்க மகிழ்ச்சியான நிகழ்வாக அது இருந்தது.

 இதனைத் தொடர்ந்து முதியோர்கள் வாழும்போதே கௌரவிக்கப்பட்டனர் இதன் போது கௌரவிக்கப்பட்டவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டதை அவதானிக்க முடிந்ததுடன் அவர்களின உறவுகள் கண்ணீர் சிந்தியதையும் அவதானிக்க முடிந்தது.  கௌரவிக்கப்பட்டவர்கள் என்னை கட்டியணைத்து தம் அன்பை வெளிப்படுத்தியதை என் வாழ் நாளில் மறக்க முடியாத தருனங்களாக இருந்தன.  

இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் P.குணரெட்ணம் அவர்களும், மாவட்ட சமுர்த்தி ஒருங்கிணைப்பாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும், மண்முனை வடக்கு வலய கல்விப்பணிப்பாளர் திரு.டேவிட் அவர்களும், செலிங்கோ நிறுவன முகாமையாளர் அ.சாந்தகுமார் அவர்களும், ஸ்ரீ சக்தி வித்தியாலய அதிபர் T.அருட்சோதி அம்மணி  அவர்களும் கலந்து கொண்டனர். 

தற்போது எனக்கு வீட்டுப்பணிகள், விளையாட்டு கழக பணிகள், அலுவலக பணிகள் என பணிச்சுமை அதிகமாகி விட்டாலும் என் உயிராக கருதும் சமுர்த்தி  தொடர்பான தகவல்களை நான் முடிந்த வரை அறியத்தந்த படியே இருப்பேன் சில தாமதங்கள் வரும் ஆனாலும் அதையும் தாண்டி நான் வருவேன் இன்னும் பல சுவாரஸ்சியமான தகவல்கள் உள்ளன......

தொடரும்......













Comments