கொவிட்டும் கடந்து போகும்.......

 கொவிட்டும் கடந்து போகும்.......

 நீண்ட நாட்களின் பின்  நான் உங்களுடன் மீண்டும் இணைந்துள்ளேன். கொவிட்-19 காரணமாக மாவட்ட சமுர்த்தி அலுவலகத்தில் கடமையாற்றிய சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு 05.08.2021 அன்று அன்டிஜன் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. அதில் பல சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தொற்று இருப்பதை உறுதி செய்ததன் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது. எனக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட போதிலும் என்னையையும் 14 நாட்கள் தனிமைப்படுத்த உட்படுத்தப்பட்டதால் நானும் தனிப்படுத்தப்பட்டேன். 

16.08.2021 அன்று என்னுடன் சுகாதார உத்தியோகத்தர் தொடர்பை ஏற்படுத்தி PCR பரிசோதனை செய்ய வேண்டும் கல்லடி கடற்கறைக்கு வருமாறு கூறினார். நானும் அங்கு சென்றேன். PCR பரிசோதனை செய்து விட்டு நானும் வீடு வந்தேன். அன்று இரவு தொடக்கம் கை, கால்களிலில் நோவும், தலையிடிப்பது போலவும், கழுத்து பின் பக்கம் நோவுமாக இருந்தது. வழமையாக இருப்பது தானே என நானும் இருந்து விட்டேன். இது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது அத்துடன் காச்சலும் தொடங்கியது 19.08.2021 அன்று இரவு மூச்சு எடுப்பதற்கு கஸ்டப்பட்டேன் என்னால் தாங்க முடியவில்லை தலையை சுவரில் அடிக்கலாமா? என தோன்றியது, புலம்பினேன், வாய் விட்டு அழுதேன். அந்த இரவில் என் மனைவியிடம் யாரேல்லாம் இந்த இந்த கைமருந்தை கொடுங்கள் என்று கூறினார்களோ அவ்வளவு மருந்தையும் என் வேதனை தாங்காமல் அந்த இரவில் குடித்தேன். முடியவில்லை அன்றைய இரவை கடக்க மிகவும் கஸ்டப்பட்டேன்.

மறுநாள் உடம்பின் நோ கூடியபடியே இருந்தது நான் சும்மா சாதாரண காச்சல். தடிமல் என்று தான் இருந்தேன் அப்போது தான் PCR முடிவை சுகாதார பரிசோதகர் அறிவித்தார் எனக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் இது வீரியம் கூடியதாக இருப்பதாகவும் கூறி மீண்டும் 14 நாட்கள் தணிமைப்படுத்தப்பட்டேன். இது தான் சந்தர்ப்பம் என்று கொவிட்-19 என் வீட்டில் உள்ள அனைவரையும் கௌவிக் கொண்டது. யாருக்கு யார் வைத்தியம் பார்ப்பது வீட்டிலிருந்தே வைத்தியம் செய்தோம். நான் நினைக்கின்றேன் பாமசியில் இருந்த பெரும்பாலான கொவிட் குளிசைகளை உட்கொண்டவன் நானாக தான் இருப்பேன் என்று. ஏற்கனவே நீரழிவு நோய்காரன் நான் காலை, மதியம், இரவு நேரங்களில் ஒரு கையளவு குளிசைகளை பருகியே வந்தேன். வீட்டில் அனைவரும் தேறி விட்டார்கள் என்னால் தேற முடியவில்லை. 

நாட்கள் நகர நகர சற்று உடலால் பெலவீனமானேன் சாப்பாட்டில் சுவையில்லை, மனம் அற்ற நிலை, தொடர்ச்சியான இருமல், நினைக்கும் நேரம் எல்லாம் சளியின் வெளியேற்றம் என்னை வாட்டி வதைத்தது. இருந்த போதிலும் இதிலிருந்த தப்ப என் தேகம் இடம் கொடுக்குமா? என சிந்தித்தேன். ஒருவாறு 25.08.2021 ஒரு நிலைக்கு வந்தேன். பின்னர் பலரிடம் வினவிய போது கூறினார்கள் நான் தக்க சமயத்தில் கொவிட் தடுப்பூசியை இட்டுக் கொண்டதால் தான் உயிர் தப்பியதாக குறிப்பிட்டார்கள் ஆம் இத்தடுப்பூசிகளை மிக விரைவாக சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துக் கொண்ட மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அ.பாக்கியராஜா அம்மணி அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன். கொவிட் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுகளை வழங்கிய சமுர்த்தி திணைக்களத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன். இதற்கான அனுமதியினை பெற்றுத்தந்த சமுர்த்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அவர்களுக்கும், மாவட்டத்தில் இதை வழங்க ஆவனை செய்த மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அவர்களுக்கும், அதை துரிமாக வழங்க நடவடிக்கைகளை மேற் கொண்ட பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி தலைமையக முகாமையாளர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தக் கொள்கின்றேன்.

 மற்றும் எனக்கு உலர் உணவுகள், சமைத்த உணவுகளை வழங்கிய என் உறவினர்கள், நட்புகளுக்கும் மனமார்ந்த நன்றிகள். அத்துடன் தொலைபேசியூடாக நலம் விசாரித்த அனைவருக்கும், மற்றும் எனக்கும் என் குடும்பத்திற்குமாக பிரார்த்தித்தவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். 05.08.2021 தொடக்கம் 29.08.2021 வரை தனிமைபடுத்தப்பட்ட நான் இக்கட்டுரை எழுதும் வரைக்கும் என் உடல் நிலை சற்று தளர்வாக தான் உள்ளது. இருந்தும் மெதுவாக மெதுவாக நான் என் பணிகளில் தொடங்க வேண்டும் என்பதற்காக மீண்டெழுந்துள்ளேன் கொவிட்-19 இருந்து நான் கற்றுக் கொண்ட பாடம் கட்டாயம் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும் என்பது தான். 

இன்றும் நான் வீதிகளில் செல்லும் போது சில வீடுகளில் அந்த சிவப்பு ஸ்டிக்கரை கண்டால் நான் பட்ட வேதனையை இந்த வீட்டில் உள்ளவர்களும் அனுபவிக்க வேண்டாம் ஆண்டவரே என என் மனதில் பிரார்த்தித்தவனாக செல்கிறேன்........  

அந்த இறைவன் நினைத்தால் எந்த கொவிட்டும் எம்மை கடந்து போகும்.....

கொவிட்-19 மீண்டும் என்னை தொற்றாது என நினைக்க மாட்டேன் நான் பாதுகாப்பாக இருந்தாலும் மற்றவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நாளை முதல் நானும் என் சமுர்த்தியும் 71ம் தொடர்  தொடரும்......


Comments