நானும் என் சமுர்த்தியும் 68ம் தொடர்.......

நானும் என் சமுர்த்தியும் 68ம் தொடர்.......

அவரது வீட்டிற்குள் சென்றதும் என்ன தம்பி சாப்பிட்டியா? என்று கேட்டார் ஓம் என்றேன். இப்போதும் அவரிடம் இருந்த பயம் போகவில்லை. என்ன பாடுகள் தம்பி என்றார் நல்லம் சேர் என்றேன். தம்பி அடுத்த மாசத்தோட நான் கொழும்பிற்கு போய் விடுவேன். என்னால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு செய்ய முடிந்ததை இந்த 20 மாதங்களில் செய்து முடித்துள்ளேன். கொழும்பிற்கு சென்றாலும் நான் இன்னும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு செய்வேன் என்று கூறினார். உங்களுக்கு யார் புதிய பிரதிப்பணிப்பாளராக வரப்போகின்றார்களோ நான் அறியேன் என்னிடமும் கருத்து கேட்டுள்ளார்கள் என்றார். தொடர்ந்து கதைத்தக் கொண்டிருந்த அவர் நான் போவதற்கு முன் உன் கிராமத்தில் ஒரு பெரிய நிகழ்வை நீ ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். நான் உன் கிராமத்திற்கு பணிபாளர் நாயகத்தை அழைத்து வருவேன் என்று கூறியதுடன் எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை சற்று யோசித்தவனாக நின்றேன். 

என்ன பயப்படுகின்றாயா? அவர் வரமாட்டார் என்று பயமா? என என்னிடம் கேட்டு விட்டு அவரே சொன்னார், அவர்  நான் கூப்பிட்டால் வருவார் என்றார். நிகழ்வு சிறப்பாக இருக்க வேண்டும் உன் தாய் சங்கத்தின் ஊடாக நடத்து இதை இப்போதைக்கு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றார். நானும் சரி என்று கூறியவனாக வந்து விட்டேன். இரவு முழுவதும் யோசனை ஓம் என்றும் சொல்லி விட்டோம் இனி ஏலா என்டா அவரைப்பற்றி தெரியும் தானே என்று என் மனம் சொல்லியது.

 அடுத்த நாள் விடிந்ததும் முதல் வேலையாக ஒன்றியத் தலைவியை அழைத்து இவ்விடயத்தை கூறினேன் அவரும் இதை செய்வோம் என கூறி நம்பிக்கை ஊட்டியவாறு அங்கத்தவர்களை அழைத்து கதைப்போம் என்றார். அப்போது தான் சில நாட்களுக்கு முன்பு தான் ஒன்றிய கூட்டம் இடம்பெற்றிருந்தது பரவாயில்லை என்று கூறி அழைத்தேன். வந்தவர்களிடம் மன்னிப்பு கோரி நடந்த விடயத்தை ஒன்றும் விடாமல் கூறினேன். அவர்களும் மிகச்சிறப்பாக செய்வோம் என கூறி அதற்கான பணிகளை ஆரம்பித்தனர். இதற்கான பணத்தினை ஒன்றியத்தில் சேமித்திருக்கும் பணத்தில் செலவு செய்வதாகவும் முடிவு எட்டப்பட்டது. சில வேலைகளை பிரித்தக் கொடுத்தேன் நிச்சயமாக ஒரு தொகுப்பு நூல் வெளியிடுவது என்றும் அப்பணியை நான் எடுத்துக் கொண்டேன். மண்டப தெரிவில் கல்லடி உப்போடை விபுலானந்தா வித்தியாலயத்தின் மண்டபத்தை பெற்றுக் கொள்வது என்றும் அதற்கு பொறுப்பாக கிருஸ்ணவேணி லோயலாவிடமும், சிற்றூண்டி ஒழுங்குகளை தங்கேஸ்வரி, சௌந்தரரானி ஆகியோரும் மற்றைய வேலைகளை சகலரும் இணைந்து செய்வதாக முடிவெடுக்கப்பட்டது. பதவி உயர்வு பெற்றுச் செல்லும் மா.நடேசராஜா சேரை சிறப்பாக கௌரவிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டு கூட்டம் முடிவுக்கு வந்தது.


இதற்கிடையில் முக்கியமான ஒரு விடயத்தை குறிப்பிட மறந்து விட்டேன் நடேசராஜா சேர் புதிதாக பதவியேற்றவுடன் மற்றுமொரு சாதனை விடயத்தை செய்து இருந்தார். சமுர்த்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது எமக்கான சம்பளம் பிரதேச செயலகத்தின் ஊடாகவே வழங்கப்பட்டு வந்தது. பிற்காலத்தில் எமக்கான சம்பளத்தை உரிய நேரத்திற்கு வழங்குவதில் பல சிக்கல்களை பிரதேச செயலகம் சந்தித்தது. பின்னர் அதற்காக சமுர்த்தி பிரிவில் ஒருவரை  நியமித்து சம்பளம் எமக்கு வழங்கப்பட்டு வந்தது இவ்வாறு எமது சம்பள பணிக்காக நியமிக்கப்பட்டவர் தான் திரு.ரஞ்சித் அவர்கள் இவர் மிக நீண்ட நாட்களாக இப்பணியை எமக்காக செய்து வந்தார். இவரின் இப்பணிக்கு மாற்றீடாக யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது. இவர் இல்லாவிட்டால் சம்பளம் வழங்க முடியாத நிலையும் காணப்பட்டது. 

இதை கருத்தில் கொண்ட நடேசராஜா சேர் அவர்கள் இதற்கு மாற்றீடாக ஒருவரை தெரிவு செய்தார் அவர்  தான் இராமநாதன் சிவநாதன் அவர்கள். இவர் அப்போது கல்லடி சமுர்த்தி வலயத்தில் நாவலடி கிராமத்தின் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வந்தார். இவர் கடந்த காலங்களில் இருதயபுரம் சமுர்த்தி வங்கியின் உதவி முகாமையானராகவும் பின்னர் கல்லடி சமுர்த்தி வங்கியில் கடன் லிகிதராகவும் கடமையாற்றி இருந்தார். எனவே அவரின் சேவையை எமக்கு பெற்றுக் கொடுத்த பெருமை நடேசராஜா சேரையே சாரும் இரா.சிவநாதன் அவர்களே இன்று வரை எமக்கான சம்பள பணியை கவணித்து வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தொடரும்......

 

Comments