நானும் என் சமுர்த்தியும் 65ம் தொடர்.......

 நானும் என் சமுர்த்தியும் 65ம் தொடர்.......

சில நாட்களுக்கு முன் தெரிவித்த அதிரடி மாற்றத்தின் செய்தி எமது காதுகளுக்கு எட்டியது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளராக பணியாற்றிய மாசிலாமணி நடேசராஜா அவர்கள் இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் வாழ்வாதார பிரிவிற்கு பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று செல்லவுள்ளதாக தகவல் கிடைத்தது. அப்போது எல்லோர் மனதிலும்  இருந்த  கேள்வி யார் எமக்கு  புதிய சமுர்த்தி பிரதிப்பணிப்பாளராக வருவார் என்று தான். இப்படியே பலரது கேள்விக்கு மத்தியில்  நாங்கள் சேவையாற்றிக் கொண்டிருந்தோம் நாளாந்த பணிகள் சென்று கொண்டு தான் இருந்தன யார் அந்த பிரதிப்பணிப்பாளர் என அரசல் புரசலாக கதைகள் போய்க் கொண்டிருந்தன.

இதன் போது மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பலர் இணைந்து திருப்பெருந்துறையில் சிறு ஒன்று கூடலை நடாத்தினோம். இதன் போது எல்லே மற்றும் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தோம். அது மகிழ்ச்சியான ஒரு விடயமாக காணப்பட்டது. பலரும் மகிழ்ச்சியாக கலந்துரையாடி அன்றைய நிகழ்வு கழிந்தது. 

சித்திரை புதுவருட சேமிப்பும் வந்தது இது தான் பெரிய தலையிடி யாரும் முதலிடம் பெறவும் கூடாது நாம தான் முதலிடம் பெற வேண்டும் எனும் மனபாங்கு திருந்தவே மாட்டம் என எனக்குள் கூறியவாறு கிராமத்தில் சமுர்த்தி ஒன்றியம் மூலம் சேமிப்பிற்காக தயாராகுமாறு கூறினேன். 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் வலய மட்டத்தில் முதலிடமும், 2010ல் மாவட்ட மட்டத்தில் முதலிடமும் பெற்றுள்ளேன் இந்த வருடம் எப்படி வரப்போகுதோ தெரியாது? என எண்ணியவாறு பணிகளில் ஈடுபட்டேன். அதே போல் ஒரு வார கால சேமிப்பு செய்யும் படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. என்னுடன் கடமையாற்றும் உத்தியோகத்தர்களும் தங்கள் கிராமங்களில் சேமிப்பிற்கான யுத்திகளை மேற் கொண்டு இருந்தார்கள்.

14.04.2011 அன்று சேமிப்பை தொடங்கி வைத்தார்கள் நானும் எனது கிராமத்தின் சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டு சபையின் உறுப்பினரும் அலைமகள் சமுர்த்தி சங்கத்தின் தலைவியுமான தாட்சாயினி நாசர் மூலம் முதல் வைப்பை வங்கியில் இட்டேன். இதன் போது தலைவியிடம் ஒரு விடயத்தை கூறினேன் இந்த வருடம் கட்டாயம் கல்லடிவேலூர் கிராமம் வலய மட்டத்தில் முதலிடத்தை பெற வேண்டும் அதற்கான தங்களின் அர்பணிப்பான சேவை மட்டுமல்ல கிராமத்தின்  அர்பணிப்பான சேவைகளையும் நீங்கள் முன்னின்று பெற்றுத்தர வேண்டும் என கூறினேன் தான் முயற்சிப்பதாக கூறினார். 21.04.2011 வரை சேமிப்பு நடைபெற்றது. பரபரப்பாக சேமிப்பு முடிவுற்றதும் முடிவுகள் 28ம் திகதி நடைபெறும் சித்திரை பாரம்பரிய விளையாட்டு நிகழ்வின் போது அறிவிக்கப்படும் என முகாமையாளர் தெரிவித்தார். என்னடா புதுவிதமா இருக்கே என்று கூறிக் கொண்டு சித்திரை விளையாட்டு விழாவிற்கான ஆயத்தத்தில் ஈடுபட்டேன்.

தொடரும்........










Comments