நானும் என் சமுர்த்தியும் 58ம் தொடர்......
2011ம் ஆண்டு நகர்ந்த படியே இருந்தது எமது சேமிப்புக்கள், கடன் வழங்கல் போன்ற செயற்பாடுகள் நடைபெற்ற வண்ணம் இருந்தது. மார்ச் மாதமும் தொடங்கியது மார்ச்-8 சர்வதேச மகளிர் தினம் என எனது கிராம மக்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. இவ்வருடம் யார் யாரை கௌரவிப்பது என சங்கங்கள் தீர்மானிக்கும் படி கூறி இருந்தேன். 2011ம் வருடமும் சர்வதேச மகளிர் தினத்தை மிகச்சிறப்பாக நடாத்த வேண்டும் என் கல்லடிவேலூர் கிராமத்தில் சமுர்த்தி சங்கங்களின் ஒன்றியம் முடிவெடுத்திருந்தது. வருடா வருடம் சமுர்த்தி சங்கங்களில் இயங்கும் தலைவர்கள், செயலாளர்கள். பொருளாளர்கள் மற்றும் கிராமத்தின் அபிவிருத்தியில் தம் பங்களிப்பை மேற்கொள்ளும் மகளிர் கௌரவிக்கப்பட்டு வந்துள்ளனர். ஆனால் இம்முறை சற்று வித்தியாசப்பட்ட முறையில் கிராமத்தில் சேவையாற்றிய முதிய மகளிர்களையும், இளம் வயது மகளிர்களையும் கௌரவிப்பதுடன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை தேடி தந்த ஒரு பெண்மணியையும் கௌரவிப்பதாக முடிவு எட்டப்பட்டது. இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை தேடித்தந்த மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் முதல் பெண் பிரதேச செயலாளராக கடமையேற்று கடமையாற்றி வரும் பிரதேச செயலாளரான கலாமதி பத்மராஜா அவர்களை கௌரவிப்பது என தீர்மானிக்கப்பட்டது. இத்துடன் 09 சமுர்த்தி சங்கங்களின் வளர்ச்சிக்கு உதவிய இரண்டு சமுர்த்தி பயனுகரிகளுமாக 18 பேரும் கௌரவிக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வானது 08.03.2011 பிற்பகல் 3.00 மணிக்கு கல்லடிவேலூர் சிறி சக்தி வித்தியால மண்டபத்தில் கல்லடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் K.தங்கத்துரை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் M.நடேசராஜா அவர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா அவர்களும், மட்டக்களப்பு எகெட்-ஹரித்தாஸ் இயக்குணர் வணபிதா சில்வஸ்டர் சிறிதரன் அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர்களும், சூரியா பெண்கள் அமைப்பினரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சாதனை மகளிர் எனும் விருதும் பரிசில்களும் 18 சங்க ரீதியான மகளிருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கௌரவிக்கப்பட்ட மகளிர் ஆனந்த கண்ணீர் விட்டதையும் அவர்களது உறவுகளும் ஆனந்த கண்ணீர் விட்டதை பார்க்க கூடியதாக இருந்தது. இதன் பின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முதல் பெண் பிரதேச செயலாளர் என்ற பெருமையை தன்னகத்தே மாத்திரம் வைத்திருக்கும் கலாமதி பத்மராஜா அவர்களை மண்முனை வடக்கின் வீர மகளிர் என சமுர்த்தி சங்கங்களின் ஒன்றியம் கௌரவித்து வாழ்த்து பாவை வழங்கியதுடன் பொன்னாடை அணிவித்தும் மகிழ்ந்தது. உயரிய இடத்தில் இருக்கும் பெண்மணியே உனக்கு கிரீடம் அணிவித்தும் கௌரவிப்போம் என கிரீடம் அணிவித்தும் கௌரவித்தது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் தமதுரையில் சமுர்த்தியில் உள்ள மிக வறிய மக்களையும் மதிக்க ஒரு சமூகம் உண்டு என்பதை இந்நிகழ்வு காட்டுவதாக குறிப்பிட்டார். எங்கு பார்த்தாலும் பெரிய உயர் இடத்தில் இருப்போரை மாத்திரமே கௌரவிப்பதும், பாராட்டுவதுமே நடைபெற்று வருகின்றன. ஆனால் இங்கு ஓலை குடிசையில் வாழும் ஒரு விதவைத்தாய் கௌரவிக்கப்படும் போது அவர் விடும் ஒவ்வொரு துணி கண்ணீரும் இக்கிராமத்தில் சேவையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தரின் வியர்வை துளிகளாகும். சமுர்த்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் நான் இலங்கையின் எல்லா பாகங்களுக்கும் சென்றுள்ளேன் ஆனால் இப்படியொரு உத்தியோகத்தரை கண்டதில்லை என்று கூறினார். இதை தொடர்ந்து வணபிதா தமதுரையில் மகளிர் என்பவள் யார்? அவள் எப்படிபட்டவள்? இவள் ஆணுள் தன்னை எப்படி வைத்துள்ளால்? என்பதை ஆங்கில வார்த்தை மூலம் கூறியதுடன் இக்கிராம சமுர்த்தி ஒன்றியம் போல் தான் ஒரு இடத்திலும் கண்டதில்லை என பெருமைபட கூறினார். பிரதேச செயலாளர் தமதுரையில் தன்னையும் இந்நிகழ்வில் கௌரவித்ததை பார்க்கும் போது ஏழைகளின் கண்ணீரே பெறுமதி வாய்ந்தது என்பதை அறிந்து கொண்டதாகவும் ஒன்றை மட்டும் தான் கூற ஆசைப்படுவதாக கூறினார், இன்று நான் அறிந்த மட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட எந்த இடத்திலும் இப்படிப்பட்ட ஒரு உணர்ச்சி பூர்வமான மகளிர் தினம் இடம்பெறவில்லை இதை ஒழுங்கமைத்த சமுர்த்தி உத்தியோகத்தருக்கும், சமுர்த்தி ஒன்றியத்திற்கும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டார். இந்நிகழ்வில் கௌரவிக்கபட்ட மா.தேவராணியிடம் அவரது கருத்தை கேட்ட போது தன் கணவர் மீன் பிடி தொழிலை செய்து வருவதாகவும் தன்னை இப்படி மாலை அணிவித்து கௌரவித்த சகலருக்கும் நன்றி தெரிவித்ததுடன் இன்று தான் எனக்கு பிரதேச செயலாளர் என்றால் யார் என்றும், சமுர்த்தி பெரிய ஐயாமார் யார் என்றும் தெரியும் என்றார். என்னை தாய் போல் பார்த்துக் கொண்டிருக்கும் எங்கள் சமுர்த்தி தம்பி நல்லா இருக்க வேண்டும் என்று கூறினார்.
இதன் போது இதை ஒழுங்கமைத்து நடாத்திய சமுர்த்தி ஒன்றியத்தின் சார்பில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டேன். அத்துடன் அடுத்த நிகழ்வுவான சித்திரை புதுவருட சேமிப்பிற்கு தயாராகுமாறும் கூறினேன்.
தொடரும்........
Comments
Post a Comment