நானும் என் சமுர்த்தியும் 56ம் தொடர்.......

 நானும் என் சமுர்த்தியும் 56ம் தொடர்.......

மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இதன் நிமித்தம் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரிவில் கடமையாற்றும் பணியாளர்களுக்கான அன்டிஜன் பரிசோதனை 05.08.2021 அன்று மேற் கொள்ளப்பட்டது. இதன் போது 18 சமுர்த்தி பணியாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் படி மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவு தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் மற்றும் பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மாவட்ட சமுர்த்தி பிரிவுக்கு வருகை தருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். உங்கள் பாதுகாப்பு உங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது எனவே சுகாதார முறைகளை கடைப்பிடித்து பொத இடங்களில் கூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

இனி நாம் தொடருக்குள் செல்வோம் 2011ம் ஆண்டு திவிநெகும-வாழ்வின் எழுச்சி வேலைத்திட்ட ஆண்டாகவே செயற்படத் தொடங்கியது. 2011ம் ஆண்டில் சமுர்த்தி திட்டம் 22 மாவட்டங்களில் 316 பிரதேச செயலங்களிலும், 14008 கிராம சேவகர் பிரிவுகளிலும் செயற்படுத்தப்பட்டது. இலங்கை பூராகவும் 1043 சமுர்த்தி வங்கிகளும் 316 சமுர்த்தி மகா சங்கங்களும், 18788 சமுர்த்தி சங்கங்களும், 14008 சமுர்த்தி செயலணிகளும் 207,975 சமுர்த்தி சிறு குழுக்களும் செயற்பட்டதுடன் 1,541,619 குடும்பங்கள் சமுர்த்தி நிவாரனத்தினை பெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



2010 மார்கழி மாதம் இறுதியில் மட்டக்களப்பில் மழை வருவது இயற்கையே அதற்கமைய மழையும் ஆரம்பமாகியது மார்கழியில் தொடங்கிய மழை விடுவதாக இல்லை. எல்லை காணாத மழை பெய்து வெள்ள நிலையும் ஏற்பட்டது. 1956ம் ஆண்டிற்கு பின் மிகப்பெரிய வெள்ளம் மட்டக்களப்பை ஆட்கொண்டது. பலர் முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். மக்களுக்கு உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டது. அப்போது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளராக மா.நடேசராஜா அவர்கள் கடமையில் இருந்தார். மட்டக்களப்பின் வெள்ள நிலையை கொழும்பில் சமுர்த்தி தலைமையகத்திற்கு அறிவித்து பொது மக்களுக்கான உதவியை செய்யுமாறு கோரி இருந்தார். இதை கருத்தில் கொண்ட சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகஸ்ரீ அவர்கள் உடனடியாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உதவி வழங்குமாறு அதற்கான பொருட்களை சேகரித்து அனுப்புமாறும் அறிவுருத்தி இருந்தார். 


இதன் பொருட்டு பெருமளவான பொருட்களுடன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பல வாகனங்களில் பலரும் உதவிப்பொருட்களுடன் வருவதாக தகவல் வந்தது. மட்டக்களப்பு மாவட்ட களஞ்சியசாலைக்கு பொருட்கள் வருவதாக மாவட்ட பிரதிப்பணிப்பாளர் அறிவித்திருந்தார். நானும், R.சிவநாதன், தலைமையக முகாமையாளர் K.கணேசமூர்த்தி, மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் J.F.மனோகிதராஜ், திரு.சிங்கராஜா, புளியந்தீவு சமுர்த்தி வலய முகாமையாளர் K.நவரஞ்சன் மற்றும் பிரதிப்பணிப்பாளர் மா.நடேசராஜா அவர்களும் காத்துக் கொண்டிருந்தோம். 19.01.2011 புதன்கிழமை பொருட்கள் இரவு 11 மணிக்கு வந்தடைந்தன. சகல பொருட்களையும் பொறுப்பேற்றுக் கொண்டார் பிரதிப்பணிப்பாளர் அவர்கள். நாங்களே சகல பொருட்களையும் வாகனத்தில் இருந்து இறக்கினோம். இப்படிப்பட்ட பல இக்கட்டான காலகட்டத்தில் தன் மக்கள் தான் பிறந்த ஊர் என மா.நடேசராஜா அவர்கள் தன் நிலை மறந்து உதவ முன் வருவார் இச் செயற்பாட அவருக்கே உரிய செயற்பாடாகும்.

 இதை விட இன்னுமொரு விடயத்தை பற்றி நான் இதில் கட்டாயம் பதிவிட வேண்டும். சகல உத்தியோகத்தர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பணி செய்தாலும் அரச சேவையாளர்களுக்கு எதுவித உதவியும் கிடைப்பதில்லை. வெள்ளம் கரைபுரண்டோடியும் கிரான், வவுனதீவு போன்ற இடங்களுக்கு உத்தியோகத்தர்கள் பணிக்கு சென்றே வந்தனர். இக்கால கட்டத்தில் வெள்ள காலத்திற்கான முற்பணம் வழங்க வேண்டும் என சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்த போது உடனடியாக சமுர்த்தி தலைமையகத்திற்கு அறிவித்து உத்தியோகத்தர்களுக்கான வெள்ள காலத்திற்கான முற்கொடுப்பணவை வழங்குமாறு கோரி இருந்தார். உடனடியாக இதற்கான அனுமதியை வழங்கி இருந்தார் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகஸ்ரீ அவர்கள். இதன் போது ஒவ்வொரு சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. எனக்கும் கிடைத்தது அதில் தான் நான் புதிதாக ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கி இருந்தேன். அது வரை காலமும் ஒரு பழைய வண்டியைத்தான் உருட்டித்திரிந்தேன். இன்றும் அந்த நிகழ்வை என் வாழ்வில் மறக்க மாட்டேன். இதில் பயனடைந்த எல்லா சமுர்த்தி உத்தியோகத்தர்களும் மறக்க மாட்டார்கள் என்பதிலும் ஜயமில்லை.......

தொடரும்.........







Comments