சமுர்த்தி திட்டத்தால் எதிர்பார்த்த பலன் எமக்கு கிடைத்துள்ளதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் - பிரதமர்

 சமுர்த்தி திட்டத்தால் எதிர்பார்த்த பலன் எமக்கு கிடைத்துள்ளதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் - பிரதமர்

'சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றினால் அதன் பிரதிபலன் எப்போதேனும் ஒரு காலத்தில் இந்த நாட்டிற்கு உரித்தாகும் என்பதனை நம்பி நாம் பணியாற்றுவோம்' என பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் 01.07.2021 அன்று அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் 500 கிராமங்களை 'சௌபாக்கிய உற்பத்தி கிராமங்களாக' அபிவிருத்தி செய்யும் தொடக்க நிகழ்வில் கலந்துக் கொண்ட போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதற்கமைய - யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரான்பட்டிருப்பு நல்லெண்ணெய் உற்பத்தி கிராமம், நுவரெலியா மந்தாரம்நுவர போஞ்சி விதை மற்றும் கோப்பி உற்பத்தி கிராமம், மற்றும் பேராதனை உடுஈரியகொல்ல மலர் உற்பத்தி கிராமம் என்பன 'சௌபாக்கிய உற்பத்தி கிராமம்' என பெயரிடப்பட்டு அதற்கான இலத்திரனியல் நினைவு பலகைகள் கௌரவ பிரதமர் அவர்களினால் 01.07.2021 திறந்துவைக்கப்பட்டன.

குருநாகல் கனேவத்த கும்புக்கெடே கிராமம் மற்றும் கம்பஹா மீரிகம கீனதெனிய கிராமம் ஆகியவற்றில் நிர்மாணிக்கப்பட்ட 'சௌபாக்கியா செனஹசே நவாதென' வீடும் இந்த நிகழ்வின்போது அந்த வீட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

மக்களுக்குச் செயற்திறனான மற்றும் துரித சேவையை வழங்குவதற்காக  சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு  1ஆம் திகதி முதல், எதிர்வரும்7ஆம் திகதி வரையான காலத்தை  'சௌபாக்கிய சமுர்த்தி வாரம்' என பிரகடனப்படுத்தியுள்ளது.

மேற்படி 'சௌபாக்கிய உற்பத்தி கிராமம்' தொடக்க நிகழ்வில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் உரையாற்றும் போது -

நமது நாட்டின் சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து நாம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறான உலகளாவிய தொற்று நிலைமைக்கு மத்தியில் இம்மக்களுக்காக ஒர் அரசாங்கம் என்ற ரீதியில் எவ்வாறு பொறுப்பை நிறைவேற்றுவது என்பது குறித்து நாம் சிந்தித்தோம்.

கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டு இந்த மக்கள் ஒரே இடத்தில் தேங்கிருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நாம் விரும்பினோம்.'சௌபாக்கிய சமுர்த்தி வாரம்' அதற்கான மற்றுமொரு வாய்ப்பாக அமையும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

1994ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சமுர்த்தி திட்டத்திற்கு தற்போது 27 ஆண்டுகளாகின்றன. வறுமை கோட்டிலுள்ள மக்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தும் நோக்கிலேயே சமுர்த்தி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அன்று நாம் எதிர்பார்த்த பலன் எமக்கு கிடைத்துள்ளதா? என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். சமுர்த்தி திட்டத்தின் ஊடாக அன்று கொடுப்பனவுகளை பெற்றவர்கள் இன்றும் கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டு இருப்பார்களாயின் நமது எதிர்பார்ப்பு இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதே அதன் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது. சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவதன் மூலம் மாத்திரம் யாரும் செல்வந்தராக முடியாது. அவர்களுக்குச் சரியான வருமான மார்க்கத்தை உருவாக்கிக் கொடுத்து உரிய முறையில் வழிகாட்ட வேண்டும். அதனை உணர்ந்து அன்று நாம் 'மஹிந்த சிந்தனை' ஊடாக சமுர்த்தி திட்டத்தை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டோம்.

                   சமுர்த்தி பயனாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளைத் தொழிற்பயிற்சித் திட்டங்களுக்கு வழிநடத்தி திறமையான பணியாளர்களாக உருவாக்கினோம். அதன் மூலம் பலரை நன்கொடை மற்றும் கொடுப்பனவுகளில் தங்கியிருக்கும் நிலையிலிருந்து மீட்க முடிந்தது. சுபீட்சத்தின் நோக்கில் செயற்திறனான குடிமகன் போன்றே மகிழ்ச்சியாக வாழும் குடும்பம் எனும் எண்ணக்கருவை முன்னோக்கி நகர்த்தியுள்ளோம். இதனூடாக முழுமையான வதிவிட பொருளாதாரத்தை ஏற்படுத்தி கிராம மட்டத்திலும் அந்த மக்களை வளப்படுத்துவதே எமது நோக்கமாகும். ஆனால் கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் குறைந்த வருமானம் ஈட்டும் மக்கள் திரும்பிக்கூடப் பார்க்கப்படவில்லை. 'அனைத்தும் அவர்களது கட்சியினருக்கு மாத்திரமே' என இந்த பாரிய திட்டம் மிகவும் குறுகிய இடத்தில் குவிந்திருந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கும். மக்களை மேம்படுத்தாது, இருக்கும் இடத்திலேயே அவர்களை முடங்கச்செய்து அரசியல் இலாபம் தேடுவதே முன்னைய ஆட்சியாளரின் அரசியல் தந்திரோபாயமாக காணப்பட்டது. நாம் ஒருபோதும் அவ்வாறான ஒரு நிலைக்கு தள்ளப்படவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

சமுர்த்திக்காக நாம் ஆண்டிற்கு 50 ஆயிரம் மில்லியன் ரூபாய்களைச் செலவிடுகிறோம். சமுர்த்தி பயனாளர் குடும்பங்களைப் பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதற்கு எமது அரசாங்கம் இதுவரை பல புதிய வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தியுள்ளது. அதற்கமைய வீட்டு உற்பத்திகளை மேம்படுத்தவும், அவர்களது வருமானத்தை அதிகரிக்க செய்யவும் இன்று ஆரம்பிக்கப்படும் இந்த 'சௌபாக்கிய உற்பத்தி கிராமம்' வேலைத்திட்டத்தின் ஊடாக முடியும் என நாம் நம்புகின்றோம்.

அதற்கமைய வீட்டு உற்பத்திகளை மேம்படுத்தவும், அவர்களது வருமானத்தை அதிகரிக்க செய்யவும் இன்று ஆரம்பிக்கப்படும் இந்த 'சௌபாக்கிய உற்பத்தி கிராமம்' வேலைத்திட்டத்தின் ஊடாக முடியும் என நாம் நம்புகின்றோம்.

                       தொற்று நிலைமைக்கு மத்தியில் முழு உலகமும் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளுக்கு உள்ளாகியுள்ளது. நமது நாடும் அப்பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளது. ஆனால் அனைவரதும் ஒத்துழைப்புடன் தடுப்பூசி ஏற்றும் திட்டத்தை முறையாக முன்னோக்கி முன்னெடுத்து செல்ல எமக்கு இன்று முடிந்துள்ளது. அது தொடர்பில் மக்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுகின்றமை ஆனது, அவர்கள் அரசாங்கத்திற்கு வழங்கும் பலம் என்பதை நான் இங்கு நினைவூட்ட வேண்டும். இன்று ஆரம்பிக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக கிராம மக்களை நேரடியாக நாட்டின் உற்பத்தி செயற்பாட்டில் பங்களிக்க செய்ய வாய்ப்புள்ளது.

                  அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக கிராம பொருளாதாரத்தை பலப்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படும் இராஜாங்க அமைச்சர், செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம், சௌபாக்கிய மேம்பாட்டு பணியகம் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரையும் இந்த சந்தர்ப்பத்தில் மிகுந்த மரியாதையுடன் நினைவுகூருகின்றேன் எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, C.B.ரத்நாயக்க, நாமல் ராஜபக்ஷ, ரமேஷ் பதிரன, இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, காஞ்சன விஜேசேகர, அஜித் நிவாட் கப்ரால், பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஷ்மன், சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் S.P.B.திலகசிறி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

குறிப்பு - கொவிட்-19 தொற்று அதிகரித்துவருவதால் சகலரும் சுகாதார சட்டதிட்டங்களை நாளாந்தம் கடைப்பிடித்து செயற்படுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்....





Comments