நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (50ம் தொடர்).......
இன்றுடன் 50வது தொடரை கடந்து செல்கின்றேன் இதற்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.....
நாட்கள் நகர்ந்தன இதன் போது தான் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் மா.நடேசராஜா அவர்கள் பாரியதொரு திட்டத்தை வெளியிட்டார். அது சமுர்த்தி அதிகார சபையின் அனுசரனையுடன் முதல் தடவையாக சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்திகளை காட்சிப்படுத்துவதற்காகவும் விற்பனை செய்வதற்குமான சமுர்த்தி உற்பத்தி கண்காட்சி – 2010 எனும் தலைப்பில் மிகப்பெரிய கண்காட்சியை நடாத்த திட்டமிட்டிருந்தார். இதற்காக ஒரு குழுவை மாவட்ட செயலகத்தில் அமைத்து மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உதவியுடன் நடாத்த திட்டமிட்டிருந்தார்.
முதல் தடவை என்கின்ற படியால் மிக சிறப்பாக நடாத்த வேண்டும் என அவர் கூறியதுடன் இதற்கான இடத்தினை தெரிவு செய்யுமாறு கூறினார். அப்போது மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானமே இதற்கு பொருத்தமான ஒரு இடமாக இருந்தது. எனவே இவ்விடத்தை தெரிவு செய்யுமாறு கூறி அதற்கான அனுமதியும் பெறப்பட்டது. 2010ம் ஆண்டு ஒன்பதாம் மாதம் 24ம், 25ம் திகதிகளில் இக்கண்காட்சியை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற் கொள்ளுமாறு பணிக்கப்பட்டது.
பதாதைகள், சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு சகல பிரதேச செயலகங்களிலும் விநியோகிக்கபட்டதுடன் பதாதைகளும் கட்டப்பட்டன. சகல பிரதேச செயலகங்களின் ஊடாக சகல கிராமங்களில் இருந்தும் சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்திகள் இக்கண்காட்சிக்கு கொண்டு வரப்பட வேண்டும் என கூறப்பட்டது. சகல ஆயத்தங்களும் இரவு பகல் பாராமல் மேற் கொள்ளப்பட்டதுடன். இந்நிகழ்வுக்கு அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகானசபை உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள் அழைப்பதெனவும் முடிவெடுக்க்பட்டதுடன் சமுர்த்தி அதிகார சபையில் இருந்தும் பணிப்பாளர்கள் அழைப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் போது கல்லடி சமுர்த்தி வங்கியின் கிளையை இக்கண்காட்சியில் நிறுவி மக்களுக்கான சேவையினையும் வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது. 23ம் திகதி இரவு முழுவதும் பணிகள் செய்த படியே உத்தியோகத்தர்கள் இந்துக்கல்லூரி மைதானத்தில் கண்விழித்து பணியாற்றிக் கொண்டிருந்தனர். காலையில் சகல வேலைகளும் முடித்திருக்க வேண்டும் என மாவட்ட பிரதிப்பணிப்பாளர் உத்திரவிட்டிருந்தார். சகல பணிகளையும் மாவட்ட செயலக சமுர்த்தி சிரஸ்ட முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும் மாவட்ட செயலக சமுர்த்தி வங்கி பிரிவுக்குப் பொறுப்பான S.சிவபாதசேகரம் முகாமையாளரும் மும்முரமாக செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.குறித்த 24.09.2010 அன்று காலை நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கான சகல ஏற்பாடுகளும் முடிவடைந்திருந்தன அதீதிகள் வருகைக்காக காத்திருந்த போது அதீதிகளும் வருகை தந்தனர் முதல் நாள் காலை நிகழ்வுகளில் கண்காட்சி திறந்த வைக்கப்பட்டன. இக்கண்காட்சியில் சகல கிராமங்களில் இருந்தும் சமுர்த்தி பயனுகரிகளின் உற்பத்திகள் காட்சிப்படத்தப்பட்டதுடன் விற்பனையும் செய்யப்பட்டது. மாலை நிகழ்வுகளிலும் அதீதிகள் வருகை தந்து கண்காட்சியை பார்வையிட்டனர். அன்றைய நாள் மாலையில் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. திட்டமிட்டவாறு 25.09.2010 அன்று இரண்டாம் நாள் கண்காட்சிகள் ஆரம்பமானது. அன்றைய நாளிலும் அதீதிகள் அழைக்கப்பட்டு கண்காட்சி தொடர்ந்து நடைபெற்றது. இக்கண்காட்சியின் போது எனது ஆறாவது சமுர்த்தி ஸ்நேகம் பத்திரிக்கை மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் அவர்களின் முன்னிலையில் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் பஸீர் சேகுதா அவர்களிடம் கையளித்தேன். இதற்கான அனுமதியை வழங்கிய மாவட்ட பிரதிப்பணிப்பாளர் அவர்களுக்கு இன்றும் நான் நன்றி கூற கடமைப்பாடு உடையவனாக உள்ளேன்.
மிகவும் சந்தோசமாக நடைபெற்ற இக்கண்காட்சியில் தான் மாவட்ட பிரதிப்பணிப்பாளர் மா.நடேசராஜா அவர்களின் ஆளுமையையும், திறமையையும் என்னால் பார்க்க முடிந்து. யாருடன் எவ்வாறு அனுக வேண்டும் யாருடன் எவ்வாறு உரையாட வேண்டும் என்பதை மிக நேர்த்தியாக நடாத்தியதுடன், எல்லா விடயங்களையும் சகலரிடமும் பிரித்துக் கொடுத்துவிட்டு தான் கண்காணிப்பதில் மாத்திரம் செயற்பட்டார். இது அவரின் ஒரு வெற்றி முயற்சியாக இருந்தது. முதல் சமுர்த்தி கண்காட்சி முதல் வெற்றியாகவே அமைந்தது. இதில் பல சுவாரஸ்சியமான சம்பவங்களும் இடம்பெற்றன இரவு நேர சாப்பாடு இல்லாத போது சிவாவை அழைத்துக் கொண்டு சரவணா ஹோட்டலை திறந்து இரவு 12 மணிக்கு தோசை போட்டு கொண்டு வந்து சாப்பிட்டது. இரவு நேர காவலாளி மைதானத்தில் இல்லாததால் நாங்கள் இரவு நேர காவலாளியாக K.கணேசமூர்த்தி தலைமையக முகாமையாளருடன் பாடல்களை பாடி மைதானத்தில் நின்றது. இரவு நேரத்தில் கொடிகளை கட்டுவதற்காக கம்பிகளை S.சிவபாதசேகரம் முகாமையாளருடன் கடை கடை திரிந்தது. இது போன்ற பல சம்பவங்கள் இன்றும் எமது மனதில் நின்றாடுகின்றது.
தொடரும்........
Comments
Post a Comment