நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (45ம் தொடர்).......

 நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (45ம் தொடர்).......

புதிதாக மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளராக பொறுப்பேற்றிருந்த மா.நடேசராஜா அவர்களுக்கு இது தான் முதல் சித்திரை புத்தாண்ட சேமிப்பு வார நிகழ்வு. அவர் மாவட்ட மட்டத்திலான இறுதி அறிவித்தலை அறிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லடி சமுர்த்தி வங்கி 35,70,000 ரூபாக்களை சேமித்து முதலாமிடத்தையும் தனி ஒரு கிராமம் அதிகளவான பணத்தை சேமித்த கிராமமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லடிவேலூர் கிராமம் 9,31,000 ரூபாக்களை சேமித்து மாவட்டத்தில் முதலாமிடத்தை பெற்றதாக அறிவித்து, இதற்காக உழைத்த கல்லடி வலய வங்கி முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களுக்கும் அவர் சார்ந்த வங்கி, கள சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் விசேடமாக கல்லடி வேலூர் கிராமத்தின் சுமுர்த்தி உத்தியோகத்தர் பா.ஜெயதாசன் அவர்களையும் பாராட்டுவதாக அறிவித்திருந்தார். என் வாழ் நாள் கனவுகளில் ஒன்று அன்று நிறைவேறியது.

 உடனடியாக கிராமத்தில் சங்க தலைவர்களை அழைத்தேன் இச்சந்தோச செய்தியை அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். இன்னும் இப்பணிகளை சுலபமாக்க என்ன செய்யலாம் என எண்ணி ஒன்பது சங்கங்களையும் இணைத்து சமுர்த்தி ஒன்றியம் ஒன்றை உருவாக்கும் எண்ணத்தை சங்க தலைவர்கள் மத்தியில் தெரிவித்தேன் அவர்களும் பணி சுமை குறையும் பணிகளை பிரித்து பணியாற்ற முடியும் என கருதி அனுமதி அளித்தனர். ஒன்பது சங்கங்களில் இருந்து தலைவர்கள், பொருளாளர்கள் என அனைவரையும் அழைத்து அவர்களில் தலைவர், செயலாளர், பொருளாளரை நியமித்ததுடன் ஆலோசராக ஒருவரையும் கண்காணிபாளராக என்னையும் இனைத்துக் கொண்டு 20 அங்கத்தவர்களுடன் செயற்படத் தொடங்கினேன். இத் தாய் சங்கத்தை உருவாக்கிய பின் என்னை சுற்றி வந்த சோதனைகளும் வேதனைகளும் சொல்ல முடியாது அதுவே எனக்கு பிற்காலத்தில் மிகப்பெரிய சோதனையாக அமைந்தது.

 இச்சமுர்த்தி ஒன்றியத்தின் பணியானது கிராம ரீதியான வைபவங்களை முன்னின்று நடாத்ததல், வாழ்வாதார திட்டத்திற்கான பயனுகரிகளை தெரிவு செய்தல், சமுர்த்தி வங்கியூடாக சுயதொழில் கடன் கோருவோருக்கு அங்கீகாரம் வழங்குதல், பயனுகரி மற்றும் உறவினர்கள் இறக்கும் பட்சத்தில் அவர்களுக்கான பதாதை கட்டுதல் துண்டு பிரசுரம் வெளியிடுவதுடன் 5000 ரூபாய் பணம் வழங்குதல், சர்வதேச தினங்களை அனுஸ்டித்தல், பிரியாவிடை நிகழ்வுகளை நடாத்ததல், கௌரவிப்பு நிகழ்வுகளை நடாத்ததல், சுற்றுலாக்களை ஏற்பாடு செய்தல்  போன்றவற்றுடன் கிராமத்தில் சமுர்த்தி பயனுகரிக்கு பணப்பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் சிறு வட்டி வீதத்தில் கடன் வழங்கி வாராந்தம் அறவிட்டுக் கொண்டு மீண்டும் கடன்களை வழங்குதல் போன்ற பணிகளை செய்வதாகும்.

  நான் அன்று செய்ததை தான் இன்று சமுர்த்தி திட்டத்தில் கிராமங்கள் தோறும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு எனும் பெயரில் அமைப்பை பதிவு செய்து மக்களுக்கு கடன் வழங்குதல், அதை அறவிடல், நிகழ்வுகளை நடாத்துதல், ஒழுங்கமைத்தல் போன்ற பணிகளை செய்வதற்றகாக புதிய உத்தியோகத்தர்களுக்கும் தற்போது நியமனம் வழங்கப்பட்டு செயற்படுத்தி வருகின்றது. 

 எனது கிராமத்தில் இந்த சமுர்த்தி ஒன்றியத்தின் ஊடாக சிறு கடன்கள் வழங்கப்பட்டு வாராந்தம் குறைந்த வட்டியின் ஊடாக பின்வரும் உதவிகள் சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. மின்சார கட்டணம் செலுத்த முடியாத பயனுகரிகளுக்கு மின்சாரம் கட்டணம் செலுத்துவதற்கு உதவுதல், சமுர்த்தி கடன் செலுத்த முடியாமல் தடைப்பட்டால் அதை செலுத்த உதவுதல், தண்ணீர் இனைப்பு பெறுவதற்கு உதவி செய்தல், வாழ்வாதார தொழில் செய்வோருக்கு தொழில் செய்வதற்கான உபகரணங்களை பெற்றுக் கொடுக்க உதவுதல், இடர் காலங்களில் தொழில் இழந்தோருக்கு நுகர்வுக்கென உதவுதல், பாடசாலையில் கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களுக்காக உதவுதல் போன்ற விடயங்களை மிகச்சிறப்பாக செய்து உதவி வந்தது. இதன் தலைவியாக மகேந்திரராஜா தங்கேஸ்வரி அவர்கள் செயற்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 இதற்கிடையில் சமுர்த்தி திட்டத்தில் 2008ம் ஆண்டு தொடக்கம்  3000 கிராமம் வேலைத்திட்டம் 3060 கிராமம் வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டன. இதற்காக கிராமங்கள் தோறும் இத்திட்டம் தொடர்பான கருத்தரங்குகள், விளக்க உரைகள் இடம் பெற்றன.  இத்திட்டத்தை எவ்வாறு நடைமுறை படுத்தவது என்பது பற்றியும் மக்களுடன் கலந்தரையப்பட்டு வந்தன. இதற்காக மாவட்ட செயலகம் மற்றும் அத்திட்டத்திற்கான திணைக்களங்களை அழைத்து கருத்துக்களும் பரிமாறப்பட்டன. இதற்காக இருதயபுரம் கிழக்கு வலயத்தில் நடைபெற்ற கலந்தரையாடல்களுக்கு அப்பொது மாவட்ட செயலகத்தில் முகாமையாளராக செயற்பட்ட K.கணேசமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கி இருந்தார்.

அதே போல் புளியந்தீவு சமுர்த்தி வலயத்தில் S.இராசலிங்கம் தலைமையில் பல்வேறு கிராமங்களிலும் இதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்றன இதற்காக திணைக்கள தலைவர்கள் அழைக்கப்பட்டு மக்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. 

தொடரும்....


2008ம் ஆண்டு புளியந்தீவு சமுர்த்தி வலயத்தில் இடம்பெற்ற கருத்தரங்கு நிகழ்வு...







Comments