நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (38ம் தொடர்)....... ஐயோ எங்களை காப்பாத்துங்கள், காப்பாத்துங்கள்.......

  நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (38ம் தொடர்)....... ஐயோ எங்களை காப்பாத்துங்கள், காப்பாத்துங்கள்.......

12.07.2013 அன்று இன்றைய தினத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பயணித்த வாகனம் மண்ணம்பிட்டியில் இடம் பெற்ற விபத்தில் மூன்று சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மரணமடைந்தும் 17 உத்தியோகத்தர்கள் காயமடைந்த நிகழ்வை அறியாதவர்கள் தெரிந்து கொள்வதற்குமாக இக்கட்டுரையை எழுதியுள்ளேன்.


ஐயோ எங்களை காப்பாத்துங்கள், காப்பாத்துங்கள் இந்த குரல் ஒலித்து இன்றுடன் எட்டு வருடங்கள் கடந்து விட்டன. ஆம் 12.07.2013 அன்று மன்னம்பிட்டி கொட்டாஎலிய பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் போட்ட கூக்குரல் தான் ஐயோ எங்களை காப்பாத்துங்கள், காப்பாத்துங்கள் இன்றும் அந்த துயரச் செய்தி எம் மனதில் மாறாத ஒரு வடுவாகவே காணப்படுகின்றது.


இதைப்பற்றி அறிய ஆவலுடன் இந்த பயணத்தில் சென்று சிறு சிறு காயங்களுடனும் தப்பிய இராசலிங்கம் சமுர்த்தி முகாமையாளரை அன்மையில் சந்தித்தேன். அவருடன் கலந்துரையாடிய போது அவ்விபத்தின் அடித்தளத்தில் இருந்த கூறத் தொடங்கினார். முதலில் சற்று கற கறத்த குரலில் பேசத் தொடங்கிய அவர் பின் தன்னை சுதாகரித்துக் கொண்டு கூறினார். அப்போது தான் ஆரையம்பாதி பிரதேச செயலகத்தில் சமுர்த்தி முகாமைத்தவ பணிப்பாளராக கடமையாற்றி கொண்டு இருந்தேன். 09.07.2013 அன்யைதினம் தொலைபேசி ஊடாக ஒரு தகவல். கொழும்பில் ஒரு செயலமர்விற்கு சமுர்த்தி தலைமையக முகாமையாளர்களையும், கருத்திட்ட முகாமையாளர்களையும் கலந்து கொள்ளுமாறும், கருத்திட்ட முகாமையாளர் இல்லாத விடத்து கருத்திட்ட உதவியாளர்களை கலந்து கொள்ளுமாறும் மாவட்ட செயலகத்தில் இருந்து தகவல் கிடைத்தது.

இக்கருத்தரங்கில் வெளிநாட்டு வீரர் வீடமைப்பு வேலைத்திட்டம் (ரட்டவிருவோ) தொடர்பான செயலமர்வாகும். இச்செயலமர்வு கொழும்பு-07ல் வொக்சோல் வீதியில் உள்ள லக்ஸ்மன் கதிர்காமர் பயிற்சி நிலையத்தில் 11.07.2013 அன்று நடைபெறும் என்றும் எனவே சகலரும் இதில் கலந்து கொள்ளுமாறும் மாவட்ட செயலகம் அறிவித்திருந்தது. நாமும் செல்வதற்கான ஆயத்தங்களை மேற் கொண்டோம். பலரிடம் போவதைப்பற்றி கேட்டோம் ஒரு சிலர் தாம் தனியாக வருவதாகவும் பலர் எம்முடன் இனைந்து வருவதாகவும் தெரிவிக்க ஒரு பஸ்ஸை ஒழுங்கு செய்யுமாறு வெல்லாவெளி சமுர்த்தி தலைமயக முகாமையாளர் உதயகுமாரிடம் நான் தெரிவித்தேன் அவரும் அதற்கான ஒழுங்கினை மேற் கொள்வதாக கூறினார்.

10.07.2013 அன்று மாலை 6.00 மணிக்கு பஸ் புறப்படும் என்றும் என்னை இந்துக்கல்லூரி மைதானத்திற்கு முன்பாக இரவு 8.00 மணிக்கு நிற்குமாறு கூறப்பட்டது. நானும் சகல ஆயத்தங்களுடன் இந்துக் கல்லூரி மைதானத்திற்கு முன் வந்து நின்று கொண்டருந்த போது பஸ் வந்து நின்றது. உள்ளே ஏறிய போது சமுர்த்தி முகாமையாளர்களான உதயகுமார், குணரெட்ணம், கலாதேவன், சத்தியசீலன், ஜெயராஜா எல்லோரும் வாடா மச்சான் என அழைத்துக் கொண்டு கலந்தரையாடிபடி நிர்மலாதேவி அவர்களை ஏற்றிக் கொண்டு பயணித்தோம். பிள்ளையாரடியில் இறங்கி பிள்ளையாரை கும்பிட்ட பின் பயணத்தை தொடர்ந்தோம். செல்லும் வழியில் ஒவ்வொருவராக ஏற்றிக் கொண்டே சென்றோம் குறிப்பாக மேனகா பாஸ்கரன், தமயந்தி, ரதிதேவி, பிருந்தா, தேவமணோகரி, என பலருடனும் பயணித்தோம். எம்முடன் கருத்திட்ட உதவியாளராக சபேசன், சீவரெத்தினம், சபாரெத்தினம் ஆகியோரும் இனைந்து கொண்டனர். குறிப்பாக கூறுவதானால் எம்முடன் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இருந்து ஒரு முஸ்லீம் சக உத்தியோகத்தரை கடைசியாக ஏற்றியதுடன் மொத்தம் பஸ் நடத்துனர் சாரதி உட்பட 23 பேருடன் நாம் பயணித்த போது பஸ்சில் 15 ஆண்களும் 08 பெண்களுமாக இருந்தோம். பஸ் இரவு உணவுக்காக நாவலடியில் நிறுத்தப்பட்டது. அனைவரும் அளவளவிக் கொண்டு இரவு உணவை முடித்துக் கொண்டோம். சமுர்த்தி திட்டம் ஆரம்பிக்கபப்ட்ட காலம் முதல் இது போன்ற பயணங்களில் நாம் இனைந்து பயணிப்பது வழமை எனவே எதையும் அலட்டிக் கொள்ளாமல் நாம் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க பஸ் சாரதி தனக்கே உரிய பாணியில் பஸ் செலுத்திக் கொண்டிருந்தார். அதிகாலை சரியாக 3.45 மணிக்கு கொழும்பு-13ல் அமைந்துள்ள சௌபாக்கியா விடுதில் எம்மை தஞ்சடைய வைத்தது அந்த பஸ் வண்டி.

காலையில் 9.00 மணிக்கு செயலமர்வு நடைபெறவுள்ள இடத்திற்கு சென்ற போது மட்டக்களப்பில் இருந்து வருகை தந்த மற்றைய முகாமையாளர்களை சந்தித்து கலந்தரையாடினோம். எமது பயணம் பற்றி அவர்கள் கேட்க நாமும் நல்லம் என கூறி செயலமர்வுக்கு சென்றோம். 11.07.2013 அன்று காலை 9.30 மணிக்கு சமுர்த்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பந்தல திலகஸ்ரீ அவர்களின் தலைமையில் செயலமர்வு நடைபெற்றது இதில் வாழ்வாதார பணிப்பாளர்கள், பணிப்பாளர்கள், ஆலோசகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மதிய இடைவேளைக்கு நிறுத்தப்பட்ட போது சபேசன் என்னிடம் கூறினார் கொழும்பு கோட்டையில் சில சாமான்களை வீட்டுக்கு வாங்கிக் கொண்டு போவம் சேர் என்றான் நானும் சரி என்று கூறிக் கொண்டு மீண்டும் செயலமர்வில் கலந்து கொண்டோம் மாலை 4.30 மணிக்கு செயலமர்வு முடிவுக்கு வர நாம் தங்கியிருந்த விடுதிக்கு சென்று எமது பொதிகளை எடுத்துக் கொண்டு கொழும்பு கோட்டைக்கு வந்தோம். அப்போதே தொடங்கி விட்டான் காலதேவன் எம்முடன் பயணிக்க. பஸ்ஸில் ஏதோ பிரச்சனையாம் என்று சொல்ல பெண்கள் எல்லோரும் அப்ப போக முடியாதா? என கேட்க இல்லை மெக்கானிக்கை கூப்பிடப் போறாங்க கொஞ்ச நேரத்தில் திருத்தி விடுவதாக சாரதி சொல்லியுள்ளார் நீங்கள் சாமான்களை வாங்குங்கள் என நான் கூறினேன்.

கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 7.30 மணிக்கு பஸ் திரும்பவும் தன் பயணத்தை மட்டக்களப்பை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. எல்லோரும் செயலமர்வு பற்றிய கலந்தரையாடியும் பல சுவாரஸ்சியமான பழைய நினைவுகளை மீட்டியவாறு பயணித்தோம்.  இதற்கிடையில் எரிபொருள் நிரப்புவதற்காக பஸ் நிறுத்தபப்ட்ட போது உதயகுமார் முகாமையாளர் எங்களிடம் போக்குவரத்திற்கான பணத்தை பெற்றுக் கொண்டார் நானும் கொடுத்தேன் எரிபொருள் நிரப்பியதுடன் பஸ் மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்தது. இரவு 9.45 மணிக்கு வரக்காப்போலவில் இரவு சாப்பாட்டிற்காக பஸ் நிறுத்தப்பட்டது. அனைவரும் சாப்பிட்டுக் கொண்டோம் பெண்களில் சிலர் சாப்பிடவில்லை. சாப்பிட்ட பின்  சற்று வெளியில் நின்று அனைவரும் ஒருவருக்கொருவர் நகைச்சுவையாக கதைத்துக் கொண்டு சரியாக 10.00 மணிக்கு பஸ் மீண்டும் தன் பயணத்தை தொடர அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தோம். பஸ்ஸில் பயணித்த ஒரு சிலர் தங்கள் தங்கள் இருக்கைகளை மாற்றி வசதிக்காக மாறி இருந்தனர் அப்போது முன் சீட்டில் அமர்ந்திருந்தார் பிருந்தா முகாமையாளரிடம்  பின் சீட்டில் இருந்த மேனகா முகாமையாளர் அவர்கள் தான் முன் சீட்டில் அமரபோவதாகவும் பிருந்தாவை பின் சீட்டிற்கு வரும்படி கூறியுள்ளார். அதற்கமைய அவர்கள் இருவரும் மாறி இருந்தனர். சபேசன் முன்சீட்டிலும் இதற்கு அடுத்தாற் போல் சீவரெத்தினம் அமர்திருந்தனர். பஸ் வேகமாக தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தது. பெரும்பாலும் ஆண்கள் எல்லோரும் பின் இறுதி சீட்டிலேயே அமர்ந்து பயணித்து வந்தோம் நானும் குணரெடணமும் அருகருகில் தான் இருந்த வந்தோம்.

சற்று நேரத்தில் பாரிய சத்தத்துடன் பஸ் நின்று விட்டது நித்திரை தூக்கத்தில் இருந்த நான் கண் விழித்த போது இரத்த வெள்ளமாக பஸ் காணப்பட்டது. எல்லோரும் அங்கும் இங்குமாக தூக்கி எறியப்பட்டு முனங்கிய படி இருந்தார்கள். நான் குணரெட்ணத்தை ஒருவாறு எழுப்பிக் கொண்டு பஸ்சில் இருந்தவர்களை தூக்க முயற்சித்தேன் முடியவில்லை. பஸ்சில் இருந்தும் வெளியில் வரவும் முடியவில்லை, ஏன் என்றால் ஒரு கதவு தான் அந்த பஸ்சில் அக்கதவும் உடைந்து இருந்தது. மீண்டும் மீண்டும் வெளியில்வர முயற்சித்தேன் முடியவில்லை இனி என்ன செய்வது அவர்கள் மேல்  பாய்ந்து யன்னல் வழியாக வெளியில் வந்தேன். வந்து பஸ்சை பார்த்தேன் சுக்கு நூலாய் இருந்தது வாய் விட்டு கத்தினேன் ஜயோ எங்களை காப்பாத்துங்கள் காப்பாத்துங்கள் என்று கத்தினேன். அப்போது மணி அதிகாலை 3.15 ஆக இருக்கும். அப்போது தொலை தூரத்தில் ஒரு வாகனம் வருவதை கண்டேன் நடு வீதியில் நின்று மீண்டும் மீண்டும் காப்பாற்றுங்கள் என்று கத்தினேன் வந்த வாகனம் நின்றது. அப்போது கிராமத்தில் இருந்த பலரும் வந்தனர் சாரதி அவ்விடத்திலேயே இறந்த விட்டதாக கூறினார்கள் ஒவ்வொருவராக வெளியில் எடுத்தோம் சபேசன் இறந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் என் காதுகளுக்கு எட்டியது. யாரும் இறக்க கூடாது என நான் நினைத்து நினைத்து ஒவ்வொருவராக தூக்கினேன் ஆனால் ஒருவர் இறந்த சேதி எனக்கு சோகத்தை தந்தது. உடனடியாக போக்குவரத்து பொலிசாரும் அவ்விடம் வந்த விட அம்புலன்ஸ் வாகனமும் வந்தது. 

சிறு காயங்களுக்குள்ளானவர்களை வெளியேற்றி போது சீவரெத்தினம் அவர்களும் இறந்து விட்டதாக கூறப்பட்டது. மேனகா மிகவும் மோசமாக காயப்பட்டிருந்தார் அவரையும் வெளியேற்றிய போது பஸ் நடத்துனரும் பாரிய காயங்களுக்கு இலக்காகி இருந்தார். எல்லோரும் இராசலிங்கம் இராசலிங்கம் என என்னை கூப்பிட்டபடி அழுதார்கள்  நான் அழுவதா இவர்களை பார்ப்பதா என்ன செய்வதென்றே தெரிவில்லை. எல்லோரையும் பொலநறுவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக சொன்னார்கள் மறுபுரம் விமலாதேவி என்னால் கால்களை தூக்க முடியாது என அழுதபடி கூறினார் அவரையும் ஏற்றினோம், பிருந்தாவின் முகம் கூடுதலாக பாதிக்கப்பட்டிருந்தது அவரும் அழுதபடி அழைந்தார் அனைவரையும் நானும் குணரெட்னமும் இனைந்து அம்புலன்ஸ் மற்றும் வந்த வாகனங்களில் ஏற்றினோம். அப்போது மாவட்ட பிரதிப்பணிப்பாளர் குணரெட்னம் மணோகிதராஜ் முகாமையாளர் அவர்களும் அவ்விடத்திற்க வந்து விட்டனர். எங்களது உடுப்பு மற்றும் பொருட்களை பிரதிப்பணிப்பாளரின் வாகனத்தில் ஏற்றி விட்டு கடைசியாக ஒரு தடவை வாகனத்தை பார்த்த போது வாகனம் ஒரு மரத்துடன் மோதியதை கண்டேன் வாகனத்தின் முன் கதவு வரை நசுங்கி இருந்தது. சாரதிக்கு அருகில் சபேசனும், சபேசனுக்கு பின்புறம் சீவரெத்தினம், கதவுக்கு நேராக மேனகாவும் இருந்த ஞாபகம் எனக்கு வந்தது. என்னையும் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றார்கள்.

இராசலிங்கம் அவர்கள்  இதற்கு பிறகு நடந்த விடயம் எனக்கு சரியாக தெரியவில்லை என்றார். இதை பற்றி யாரிடம் கேட்கலாம் என பலரிடமும் கேட்ட போது பலரும் சரியான தகவலை தரவில்லை. அப்போது தான்  தற்போது மாவட்ட செயலகத்தில் கருத்திட்ட முகாமையாளராக கடமையாற்றும் அலி அக்பர் என்னை கூப்பிட்டு என்ன தகவல் வேணும் என்றார் நான் விடயத்தை கூற தன் முன் அமரும்படி கூறி அவர் சொல்லத் தொடங்கினார்.

இன்னும் பதட்டமான தகவல்கள்  நாளை உங்களை வந்தடையும் தறாமல் படியுங்கள்.....

தொடரும்........

 









Comments