நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (35ம் தொடர்).......

 நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (35ம் தொடர்).......

மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளரா புதிதாக ஒருவர் வரப்போகிறாறாம் என்பது தான் அந்த பரபரப்பு. யாராம்  என கேட்டேன் நாளைக்கு தான் பதில் கிடைக்குமமாம் என்றார்கள் அரசல் புரசலாக அன்றைய தினமே யார் என்று பதிலும் கிடைத்தது இருந்த போதிலும் நாளை ஊர்ஜிதமான முடிவு கிட்டும் வரை யாரும் வாய் திறக்கவில்லை.

அடுத்த நாள் காலை புதிய  தகவல் வெளியாகியது புதிய மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளராக மாசிலாமணி நடேசராஜா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சமுர்த்தி உதவி ஆணையாளராக P.குணரெட்ணம் அவர்கள் கடமையாற்றுவர் என்கின்ற செய்தி எம் காதுகளுக்கு எட்டியது. என்ன என்ன மாற்றங்கள் வரப்போகின்றதோ இனி வேலையில் மிக கண்டிப்பாகத்தான் இருக்க வேண்டும் சமுர்த்தியை ஆரம்பித்ததில் இருந்து செயற்பட்டவர் என்னென்ன திட்டங்களை செய்யப் போகின்றாரோ எனறு நம் பணிகளை நாங்கள் நோக்கினோம்.

10.10.2009 அன்று சிறி சக்தி வித்தியாலத்தில் இருந்து ஓர் அழைப்பு சுகாதார மேம்பாட்டிற்காக எங்கள் பாடசாலையை யுனிசெப் நிறுவனத்தின் ஊடாக தெரிவு செய்துள்ளதாகவும் இதில் கட்டாயம் அக்கிராமத்தின் சுகாதார பரிசோதகர், சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம சேவகர் இனைந்து செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அதிபர் தெரிவித்து இருந்தார். இதற்கேற்ப நானும் அங்கு சென்று விடயங்களை ஆராய்ந்து அதன் கூட்டத்தில் கலந்து கொண்டேன். இதன் போது பாடசாலை மாணவர்களுக்காக பாதணி வாங்குவதற்காக நாங்கள் அதிஸ்டலாப சீட்டினை விற்பனை செய்வதாக அதிபரிடம் தெரிவித்தேன் அவரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  அவர் கூறினார் தானும் டிக்கெட்டுக்ககை விற்பனை செய்து தருவதாக என்னிடம் உறுதியளித்தார்.

ஒக்டோபர் 17 வறுமை ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. 2009ம் ஆண்டில் அதற்கான ஒரு நிகழ்வும் அன்றைய தினம் இடம்பெறவில்லை ஏன் என்றால் புதிதாக சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதால் இது தொடர்பாக நிகழ்வை நடத்த முடியாதுள்ளதாகவும் இதற்கான ஒரு நிகழ்வு எதிர்காலத்தில்  நடாத்தப்படும் ஆகவே தங்கள் தங்கள் கிராமங்களில் சமுர்த்தி நிவராணத்தை தாமாக முன் வந்து ஒப்படைக்க விரும்புபவர்களின் விபரத்தை திரட்டி வைக்குமாறு வலய முகாமையாளர் தெரிவித்தார். 

17.10.2009 அன்று கை கழுவும் நாள் என இருந்ததால் பாடசாலை மட்டத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. கல்லடிவேலூர் கிராமத்தில் சிறி சக்தி வித்தியாலயத்திலும் இந்நிகழ்வு இடம்பெற்றது அந்த நிகழ்வில்  நானும் கலந்து கொண்டேன். அன்று கை கழுவிய நிகழ்வின் அருமை இன்று கொரோனாவால் நம்மை உரசிப்பார்க்கின்றது. இப்போது கை கழுவுகிறோம், முக கவசம் அணிகின்றோம் காலத்தின் தேவை காலப்போக்கில் உணரப்படும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

புதிதாக சமுர்த்தி பிரதிப்பணிப்பாளராகிய பதவியேற்ற மாசிலாமணி நடேசராஜா அவர்களின் முதல் நிகழ்வாக வறுமை ஒழிப்பு தின நிகழ்வு 21.10.2009 அன்று டேபா மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மிக முக்கியமாக சமுர்த்தி நிவாரணத்தை தாமாக முன் வந்து ஒப்படைப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதும், புதிய வாழ்வாதார திட்டங்களை ஆரம்பிப்பவர்களுக்கு வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வானது மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் மா.நடேசராஜா தலைமையில் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக வரவேற்புரையை சமுர்த்தி முகாமையாளர் K.கணேசமூர்த்தி அவர்கள் நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து பிரதிப்பணிப்பாளர் உரையாற்றுகையில் சமுர்த்தி திட்டம் 1995ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் சுமார் 60 தொடக்கம் 65 கோடி ரூபாக்களை சமுர்த்தி வங்கிகள் சேமித்துள்ளதாகவும். இதன் மூலம் சமுர்த்தி நிவாரணத்தை மட்டும் தான் தம் வாழ்க்கை என வாழாமல் சமுர்த்தி வங்கிகள் மூலம் கடன்களை பெற்று முன்னேற முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் இன்றைய நிகழ்வாகும் என்றார். மக்கள் தம் சமுர்த்தி நிவாரனத்தை தாமாக முன் வந்து ஒப்படைக்கும் காலத்தை சமுர்த்தி திட்டம் ஏற்படுத்தியுள்ளதாகவும் கடந்த வருடம் 67 சமுர்த்தி பயனுகரிகள் தம் சமுர்த்தி நிவாரனத்தை தாமே முன் வந்து ஒப்படைத்திருந்தனர். ஆனால் இவ்வருடம் 165 சமுர்த்தி பயனுகரிகள் தம் சமுர்த்தி நிவாரனத்தை தாமாக முன் வந்து ஒப்படைக்கின்றனர். இவர்கள் உண்மையில் கொடையாளிகள் என்றே நான் கூறுவேன் யாரும் ஒருவர் தாமாக முன் வந்து முட்டை போடும் வாத்தை கொடுப்பார்களா? ஆனால் இவர்கள் அதை எல்லாம் கருதாமல் மற்ற வறியவர்களுக்கும் வழங்க இவர்கள் முன் வந்துள்ளதால் இவர்கள் கொடையாளி என நான் குறிப்பிடுகின்றேன் என்றார். இவர்களுக்கு சமுர்த்தி வங்கியில் கடன் வழங்க முன்னுரிமை அளிக்கப்படுவதுடன் வாழ்வாதார உதவிகளும் வழங்கப்படும் என கூறினார். இந்நிகழ்வுக்கு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் பிரதம அதீதியாக கலந்து கொண்டு பயனாளிகள் ஒப்படைத்த சமுர்த்தி நிவாரனங்களை பெற்றுக் கொண்டார். இதன் போது கல்லடி வேலூர் கிராமத்தில் இருந்து செல்லத்துரை இராசையா அவர்களும் சித்தரவேல் கோணேஸ்வரி அவர்களும். தங்கள் சமுர்த்தி நிவாரன முத்திரையை தாமாக முன் வந்து ஒப்படைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் P.குணரெட்ணம் அவர்களும், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி பயனுகரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறிப்பு - கொவிட்-19 தொற்று அதிகரித்துவருவதால் சகலரும் சுகாதார சட்டதிட்டங்களை நாளாந்தம் கடைப்பிடித்து செயற்படுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்....

தொடரும்.....


Comments