நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (34ம் தொடர்).......
இதனிடையே நான் 01.10.2009 அன்று கல்லடி வேலூரில் அமைந்துள்ள சிறிசக்தி வித்தியாலயத்திற்கு முதல் தடவையாக சென்றேன். வெறுமனே தேர்தல் காலத்தில் மாத்திரம் வாக்களிப்பதற்காக இப்பாடசாலைக்குள் ஒதுங்கும் நான் மற்றும் படி அந்த பாடசாலைக்குள் ஒரு நாள் கூட சென்றதேயில்லை. ஒரு அலுவலராக அன்று அந்த பாடசாலைக்குள் சென்றதும் ஒரு ஆலயத்திற்குள் செல்வது போன்ற ஒரு மனநிலை என்னுள் வந்தது மிகவும் அழகாகவும், அமைதியாகவும் இருந்தது. அதிபரை சந்திக்க வேண்டும் என்று ஒருவரிடம் கூறினேன். உள்ளே அழைத்துச் சென்றார்கள் அங்கே ஓர் அம்மணி வணக்கம் சொல்லி என்னை அழைத்தார். நான் என்னை அறிமுகப்படுத்தியவனாக அவரின் அறிமுகத்தை கேட்டேன். தானும் கல்லடிவேலூர் கிராமத்தை சேர்ந்தவள் தான் என்றும் தனது பெயர் சக்தி தேவநாயகி அருட்ஜோதி என கனீர் என்ற குரலில் கம்பீரமாகவும் மிகவும் சாந்தமாகவும் கூறினார். சிறிது நேர கலந்துரையாடலின் பின்னர் என்னை அழைத்துக் கொண்டு பாடசாலை மற்றும் வளாகங்களை சுற்றி காட்டினார். இவர் தொடர்ந்து கூறும் போது இங்கு மிகவும் வறிய மாணவர்கள் தான் கல்வி கற்பதாகவும் கூடுமானவரை தான் பலரிடம் உதவியை பெற்று தான் இங்குள்ள மாணவர்களுக்கு உதவுவதாகவும் குறிப்பிட்டார். ஒரு விடயத்தை என் கண்கள் நோக்கின நான் கண் கலங்கி விட்டேன். அவ்விடத்திலேயே முடிவெடுத்தேன் இந்த பாடசாலைக்கு நான் உதவ வேண்டுமென்று. என்னை கண்கலங்க வைத்த அந்த விடயம் என்னவென்றால் இப்பாடசாலையில் கல்வி கற்கும் பல மாணவர்கள் பாதனி இல்லாமலும் கிழிந்த பாதணிகளை அணிந்து கொண்டும் பாடசாலைக்கு வருகை தந்தது இருந்தது தான் என் கண்களை குளமாக்கிய விடயமாகும். நானும் O/L படிக்கும் வரை சப்பாத்தே அணியவில்லை பாட்டா செருப்பை தான் அணிந்து செல்வேன் பல தடவை கிழிந்த பாட்டாவை கூட நான் அணிந்து போயிருக்கின்றேன். உயர்தரம் கற்கும் போது தான் நான் முதல் முதலில் சாப்பாத்தை கண்டேன் இதுவெல்லாம் என் மனக்கண்ணில் பட்டு கண்ணீராய் ஓடியது.
உடனடியாக சங்க தலைவர்களை அழைத்து அதிஸ்டலாப சீட்டு மூலம் டிக்கட் விற்பனை செய்து அதில் சேகரிக்கும் பணத்தில் இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாதணியை வழங்குவோம் என என் கருத்தை முன்வைத்தேன். சகலரும் சரியென முடிவெடுக்க ஒரு சங்கம் தான் முன்னின்று செயற்பட வேண்டும் மற்றைய சங்கங்கள் பக்கபலமாக உழைக்க வேண்டும் என்றேன். உடனடியாக ராயு அவர்கள் தன் லட்சுமி சமுர்த்தி சங்கம் ஊடாக நடத்த சங்க கூட்டத்தில் அனுமதி தந்தார். வலய முகாமையாளரின் அங்கீகாரத்துடன் தலைமையக முகாமையாளரின் சிபார்சுடன் பிரதேச செயலாளரின் அனுமதியுடன் அதிஸ்டலாப சீட்டு விற்பனையை ஆரம்பித்தோம்.
07.10.2009 அன்று சிறிசக்தி வித்தியாலத்தில் ஆசிரியர் தின நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் என்னை கலந்து கொள்ளுமாறு பாடசாலை அதிபர் சக்தி தேவநாயகி அருட்சோதி அம்மணி அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார். அங்கு சென்ற போது கல்லடி இராமகிருஸ்ண மிசன் தலைவர் சுவாமி அஜராத்மானந்தாஜீ அவர்களை அன்று முதல் முதலில் சந்திக்க கூடிய வாய்ப்பும் கிடைத்தது. அதிபர் அவர்கள் என்னை சுவாமிஜீயிடம் அறிமுகம் செய்து வைத்ததுடன் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோகள், பாடசாலை நலன்விரும்பிகளிடமும் என்னை அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பெரிய பெரிய மனிதர்கள் மத்தியில் நாம் என்ன அவ்வளவு பெரியவரா? என சிந்தித்த போது எல்லாம் சமுர்த்தி என்கின்ற அந்த பெயருக்குத்தான் என்பதை அன்றே உணர்ந்து கொண்டேன். இந்த மரியாதைக்கு நான் இன்னும் வேகமாக ஓட வேண்டும் என எண்ணினேன். அன்றைய காலைப் பொழுது அப்படியே கழிய மாலை பொழுதில் சிறுவர் தின நிகழ்வு வலய மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஒக்டோபர் 01 சிறுவர் தினத்தை முன்னிட்டு 07.10.2009 அன்று மாலை 3.00 மணிக்கு அந்நிகழ்வு கல்லடி சமுர்த்தி வலய முகாமையாளர் J.F.மணோகிதராஜ் தலைமையில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் சமுர்த்தி அதிகார சபையால் வருடா வருடம் நடாத்தப்படும் சிறுவர் தின போட்டிகளில் கலந்து கொள்ளும் சிறார்களை ஊக்குவிக்கும் பொருட்டு பரிசில்களும், சான்றிதழ்களிலும் வழங்கி வைக்கப்பட்டதுடன், முதல் இடங்களை பெற்ற கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன. இதில் முக்கிய விடயம் என்ன வென்றால் நாவற்குடா தெற்கு கிராமத்தின் நடன குழுவினர் மாவட்ட மட்டத்தில் தெரிவாகி அகில இலங்கை ரீதியில் போட்டியில் பங்குபற்ற செல்ல இருந்தது. இதற்காக அயாரத உழைத்த நாவற்குடா தெற்கு சமுர்த்தி உத்தியோகத்தர் ந.ரவீந்திரகுமாரை இன்றும் நாம் பாராட்டுகின்றோம். தேசிய மட்டத்திற்கு சென்ற இந்நடன குழுவினர் தமிழ் பிரிவில் மூன்றாமிடத்தை பெற்று வந்தது குறிப்பிடத்தக்க விடயமாலகும். இதன் போது என் எதிர் பார்ப்பு கல்லடி வேலூர் கிராமத்திற்கு ஒரு சான்றிதழ் தனும் கிடைக்குமா? என எதிர்பார்த்தேன் ஒருவருக்கு கூட ஒன்றும் கிடைக்கவில்லை அன்று கவலையடைந்தேன். அப்போது தான் முடிவெடுத்தேன் அடுத்த வருடம் நிச்சயமாக கல்லடி வேலூர் கிராமத்தில் இருந்த ஒரு போட்டியாளரையாவது தேசிய மட்டத்திற்கு அனுப்ப வேண்டும் என்று. இந்நிகழ்வுக்கு புளியந்தீவு சமுர்த்தி முகாமையாளர் S.இராசலிங்கம் அவர்களும் மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் விஜயகுமார் அவர்களும், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அடுத்த நாள் காலை எமது சமுர்த்தி வங்கி மிகவும் பரபரப்பாக இருந்தது. எல்லோரும் பதட்டத்துடன் காணப்பட்டனர் என்ன என்று கேட்டால் யாரும் ஒன்றும் சொல்வதாக இல்லை. இன்னும் சரியாக தெரியாதாம் இன்னும் சற்று நேரத்தில் தெரியுமாம். மாவட்ட செயலகத்தில் இருந்து செய்தி வருமாம். என பல கதைகள் எனக்கு பைத்தியமே பிடிக்கும் போல இருந்தது என்னடா சொல்லுங்களன்டா என கேட்டேன். அதை அடுத்த தொடரில் பார்ப்போம்.......
குறிப்பு - கொவிட்-19 தொற்று அதிகரித்துவருவதால் சகலரும் சுகாதார சட்டதிட்டங்களை நாளாந்தம் கடைப்பிடித்து செயற்படுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்....
தொடரும்....
Comments
Post a Comment