நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (33ம் தொடர்).......
இதற்கிடையில் முக்கியமான ஒரு விடயத்தை குறிப்பிட மறந்து விட்டேன் சமுர்த்தி என்றால் கொள்கலனில் அடைக்க முடியாத பாரிய செயற்பாடுகளை கொண்டது. ஒவ்வொன்றாக எழுதும் போது தான் ஒவ்வொருவராக தாங்கள் அனுபவித்த அனுபவத்தை பகிர்கின்றார்கள் அதில் ஒன்று தான் இது. 2006ம் ஆண்டு மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் ''சுகாதாரத்தை மேம்படுத்துவோம் சுபீட்சமான நாட்டை கட்டியேழுப்புவோம்'' எனும் தொணிப்பொருளில் மலசலகூடங்கள் இல்லாத குடும்பங்களுக்கும் தண்ணீர் வசதிகள் அற்ற குடும்பங்களுக்கும் அவற்றை அமைத்துக் கொள்வதற்காக சமுர்த்தி திட்டத்தின் மூலம் சமுர்த்தி அதிகார சபையின் நிதிப்பங்களிப்புடன் மலசல கூடங்கள், கிணறுகள், குழாய் கிணறுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்த மட்டில் வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுனதீவு, கிரான் போன்ற பிரதேச செயலகங்களில் அதிகமான சமுர்த்தி பயனுகரிகளுக்கு இவ்வசதி செய்து கொடுக்கப்பட்டது. அத்துடன் கிரவல் வீதிகள் கொங்கிறீட் பாதைகளாக மாற்றப்பட்டதுடன், வடிகான்கள் புதிதாக அமைக்கப்பட்டதுடன், பொதுக்கட்டிடங்களும் அமைத்துக் கொடுக்கப்பட்டன. இது சமுர்த்தியின் வரப்பிரசாதம் என்றே கூறலாம். இனி நாம் எம் தொடருக்குள் செல்வோம்......
2009ம் ஆண்டு பத்தாம் மாதமளவில் கல்லடிவேலூர் கிராமத்தின் தகவல்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டேன். அப்போது கிராம சேவகராக திரு.சிவலிங்கம் அவர்கள் கடமையாற்றி வந்தார். அப்போது கல்லடிவேலூர் கிராமத்தில் நிரந்தரமாக மொத்தம் 872 குடும்பங்கள் வசிப்பதாகவும், 3161 குடும்ப அங்கத்தவர்களை கொண்ட ஒரு கிராமமாக இது காணப்பட்டது. இங்கு 327 குடும்பங்கள் சமுர்த்தி நிவாரனம் பெறும் குடும்பமாகவும் இனங் கண்டு கொண்டேன். இங்கு ஒன்பது சமுர்த்தி சங்கங்கள் இயங்குவதாக வங்கியில் பதிவுகள் தெரிவித்தன. தகவல் படி எட்டு வங்கி பதிவுகளில் ஒன்பது விடுபட்ட ஒரு சங்கத்தை தேடினேன் கண்டுபிடித்தும் விட்டேன் அத்திப்பட்டி கிராமம் போல் அழிந்து இருந்தது அபஹாமியா எனும் ஓர் சமுர்த்தி சங்கம். ஆக இக்கிராமத்தில் கலைமகள், அலைமகள், மலைமகள், துர்க்கா, சரஸ்வதி, சக்தி, லட்சுமி, காயத்திரி, அபஹாமியா என ஒன்பது சமுர்த்தி சங்கங்கள் இயங்குவதாக எனது புதிய தகவலை பதிவிட்டுக் கொண்டேன். முக்கியமாக விடயம் என்னவென்றால் எட்டு சங்கங்களின் தலைவிகளாக பெண்களும் லட்சுமி சங்கத்தின் தலைவராக ஆண் சிங்கமான ராயு அவர்கள் செயற்பட்டு வந்தார். எனது அவதானிப்பில் சங்க கூட்டங்கள் ஒழுங்காக நடைபெற வில்லை இதனால் சேமிப்புக்கள் ஒழுங்காக சேமிக்கப்படவில்லை, குழுக்களில் குழப்ப நிலை இதன் காரணமாக கடன் பெற முடியாத நிலை காணப்பட்டதால் பெறப்பட்ட கடன்கள் மீள செலுத்தாத நிலையும் காணப்பட்டது, இதனால் சமுர்த்தி பயனுகரிகளுக்கு புதிய கடன்களை பெற முடியாத நிலை காணப்பட்டது. முதலில் இது தொடர்பாக பல வேலைகள் திட்டமிட்டே செய்ய வேண்டும் என திட்டத்தினை வகுத்தேன். மற்றும் 2008ம் ஆண்டு வழங்கபப்ட்ட கமநெகும கடன்களுக்கான அறவீடுகள் அறவிடப்படாமல் இருந்தது. ஏன்டா சும்மா இங்கு வந்து மாட்டித்தோமோ என எண்ணத் தோன்றியது. மெல்ல மெல்ல சங்கங்களை சந்தித்து குழுக்களை சீராக்கி பலப்படுத்தினேன். நான் இக்கிராமத்தை பொறுப்பேற்ற போது 45 குழுக்கல் பதிவுகளில் இருந்தது ஆனால் 30 குழுக்கள் மாத்திரமே இயங்கிய வண்ணம் இருந்தது. அதிலும் சில குழுக்களில் இருவர் மூவர் கொண்ட குழுவாகவே சில குழுக்கள் காணப்பட்டது. அதனை சீர் செய் வேண்டும் என சங்க தலைவர்களிடம் தெரிவித்தேன். இதன் அடிப்படையில் சகல குழுக்களை ஆண்டு இறுதிக்குள் இயங்கச் செய்ய வேண்டும் எனவும் 2010ம் ஆண்டு கல்லடி வேலூர் கிராமம் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் ஒரு முன் மாதிரி கிராமமாக திகழ சகல சங்க தலைவர்களும் செயற்பட வேண்டும் எனவும் முடியாதவர்கள் இவ்வருடத்துடன் தலைவர் பதவியில் இருந்து விலகி கொள்ளலாம் எனவும் ஆணித்தரமாக கூறிவிட்டேன்.
குறிப்பு - கொவிட்-19 தொற்று அதிகரித்துவருவதால் சகலரும் சுகாதார சட்டதிட்டங்களை நாளாந்தம் கடைப்பிடித்து செயற்படுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்....
தொடரும்........
2006ம் ஆண்டு மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் பண்டாரியாவெளி கிராமத்தில் கந்தசாமி நல்லம்மாவிற்கு கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டது.
Comments
Post a Comment