நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (30ம் தொடர்).......

 நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (30ம் தொடர்).......

 

டை தாண்டல் பரீட்சையின் முடிவுகள் வெளி வந்தன ஆனால் நான் சமுர்த்தி தொடர்பான பரீட்சையில் மாத்திரமே சித்தியடைந்து இருந்தேன்.  தாபனக்கோவையில் கோட்டை விட்டு விட்டேன். பரவாயில்லை அடுத்த தடவை முயற்சிப்போம் என என்னை நானே தேற்றியவனாக மாற்றிக் கொண்டேன். ஒரு நாள் மாவட்ட செயலகத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு என்னடா என பார்த்த போது சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் P.குணரெட்ணம் அவர்கள் உரையாடினார். நாளை டேபா மண்டபத்தில் ஒரு கூட்டம் உள்ளது இதில் நீர் இருதயபுரம் கிழக்கு கிராமத்தின் தற்போதைய செயற்பாடுகள் பற்றி கூற வேண்டும். இக்கிராமம் தற்போது ஒரு முன்மாதிரியான கிராமமாக இருப்பதால் இதை எவ்வாறு நீர் நடைமுறை படுத்தினீர் என்பதை கூற வேண்டும் என்றார். சரி என்று கூறினாலும் ஒரு பயம் தான் யாருக்கு கூற சொல்கிறார் எப்படி கூறுவது என பல யோசனைகள் என் மனக்கண் முன்னே ஓடித்திரிந்தன.

அடுத்த நாள் காலை டேபா மண்டபத்திற்கு காலை 10 மணிக்கு போனேன். கூட்டம் நடாந்து கொண்டிருந்தது. முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் இருந்தனர். என்னை அழைத்த மாவட்ட பிரதிப்பணிப்பாளர் அவர்கள் என்னை பற்றி அறிமுகம் செய்து வைத்தார். இவர் இருதயபுரம் கிழக்கு கிராமத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர் சமுர்த்தி தொடர்பான பல்வேறு வேலைத்திட்டங்களை இக்கிராமத்தில் செய்து ஒரு முன் மாதிரியான கிராமமாக இருதயபுரம் கிழக்கு கிராமத்தை திகழச் செய்துள்ளார். மிக முக்கியமாக சங்க கூட்ட வருகையை சீராக கொண்டு செல்கின்றார். அவரின் அனுபவ பகிர்வை தற்போது உங்களுடன் பகிர்வார் என கூறி அமர்ந்தார்.

 நானும் பூச்சீட்டு முதல் இறுதி ஒன்றுகூடல் வரை விளாசித்தள்ளினேன். சங்க கூட்டத்திற்கான வருகையை அதிகரிக்க அதிக கூட்டத்திற்கு வருவபவர்களுக்கு வரவேட்டு புத்தகத்தை பார்த்து ஆண்டிறுதியில் பரிசில்கள் வழங்கியதாகவும், சமுர்த்தி வங்கியில் பெற்ற கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்தினால் பரிசு வழங்குவதாகவும், சிறப்பாக செயற்படும் சங்கம், குழு, தலைவர், செயலாளர், பொருளாளர் போன்றோருக்கு ஆண்டிறுதியில் கௌரவிப்பு செய்வதாகவும், சித்திரை புத்தாண்டு, புகைத்தல் எதிர்ப்பு வாராங்களில் சங்க ரீதியாக போட்டிகளை ஏற்படுத்தி சேமிப்பை ஊக்குவித்ததாகவும், பூச்சீட்டினை அறிமுகம் செய்து அன்றைய கூட்டத்திற்கு வருபவர்களுக்கு மாத்திரம் சீட்டு வழங்குவதாகவும், சுற்றுலாக்களுக்கு அழைத்துச் செல்வதாகவும், பரீட்சைகளில் வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவித்தாகவும் நான் செய்த அனைத்து விடயங்களையும் பட்டியலிட்டு கூறினேன். உண்மையில் என் வாழ்வில் எனக்கு சமுர்த்தியால் கிடைத்த அங்கீகாரம் தான் அது என்று இப்போதும் பெருமைப்பட்டு கொள்வேன். இச் செயற்பாடுகளை உன்னிப்பாக கவனித்த பிரதிப்பணிப்பாளர் அவர்கள் எல்லோர் முன்பாகவும் என்னை; உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கியதற்கு நான் இன்றும் அவருக்க நன்றி கூறுகின்றேன். அதிலிருந்து இன்னும் வேகமாக என் செயற்பாடுகளை இருக்க வேண்டும் என எண்ணி செயற்பட தொடங்கினேன்.

2009ம் ஆண்டு புகைத்தல் எதிர்ப்பு வாரத்தில் அதிக சேமிப்பை செய்து அகில இலங்கை ரீதியாக புதுநகர் கிராமம் ஜந்தாமிடத்தை பெற்றதை சிறப்பிக்கும் முகமாக புதுநகர் கிராம மக்கள் அக்கிராமத்தின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் யூட் செல்வா இராஜரெட்ணம் அவர்களையும், அதிக சேமிப்பை செய்த மாணிக்கப்பிள்ளையார் சமுர்த்தி சங்கத்தையும் கௌரவிப்பதற்காக ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வுக்கு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளரும் சமுர்த்தி உதவி ஆணையாளருமான P.குணரெட்னம் அவர்களும், அப்போதைய மண்முனை வடக்கு உதவிப்பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணம் அவர்களும், அப்போதைய IOM நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் I.J.சில்வஸ்டர் அவர்களும், சமுர்த்தி முகாமையாளர் S.இராசலிங்கம் அவர்களும் கலந்து கொண்டனர். இதன் போது உரையாற்றிய பிரதிப்பணிப்பாளர் அவர்கள் புதுநகர் கிராமம் சமுர்த்தி விடயத்தில் குறிப்பாக சேமிப்பில் முன்னிலை நிற்கும் ஒரு கிராமமாக திகழ்கின்றது. அத்துடன் இக்கிராமத்திற்கு அகில இலங்கை ரீதியாக இரண்டாவது தடவையாக பாராட்டும் கிடைத்துள்ளதை பாராட்டினார். இதன் போது கலந்து கொண்ட அதீதிகளுக்கு 2009 புகைத்தல் வெற்றிக்கான ஞாபகார்த்த குறித்து  சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் வெற்றியாளர்களுக்கு சான்றிதாழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டது. அத்துடன் அக்காலத்தில் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த IOM நிறுவனத்தால் அன்பளிப்பு செய்யப்பட்ட நுளம்பு வலைகளை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வானது 2009.06.15 அன்று புதூர் கிராமத்தில் நடைபெற்றது. இதில் நானும் கலந்து கொண்டு  எனது ஸ்நேகம் பத்திரிகைக்கான தகவல்களையும் தேடி பெற்றுக் கொண்டேன்.

குறிப்பு - கொவிட்-19 தொற்று அதிகரித்துவருவதால் சகலரும் சுகாதார சட்டதிட்டங்களை நாளாந்தம் கடைப்பிடித்து செயற்படுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்....

தொடரும்........

(என்னால் வெளியிடப்படும் ஸ்நேகம் பத்திரிக்கை இரண்டாம் பிரதி அச்சுப்பிரதியாக வெளியிடப்பட்டது. இப்பத்திரிக்கை வெளிவர அனுசனை வழங்கிய அமலன் மோட்டஸ் தாபனத்திற்கு நன்றி.)





Comments