நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (20ம் தொடர்).......

 நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (20ம் தொடர்).......

முக்கியமான தொரு விடயத்தை கூற மறந்து விட்டேன் 2006ம் ஆண்டில் ஒரு முக்கியமான விடயத்தை கூற மறந்து விட்டேன். மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் தலைமை முகாமையாளரான கடமையாற்றிய திருமதி.மாலா நெடுஞ்செழியன் அவர்கள் இடமாற்றலாகி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கு செல்ல, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு புதிய சமுர்த்தி தலைமையக முகாமையாளராக திருமதி.மேனகா பாஸ்கரன் அவர்கள் கடமையேற்று சேவையாற்றி இருந்தார். இதன் பின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு மாலா நெடுஞ்செழியன் அவர்கள் கடமையேற்று கடமையாற்றியது குறிப்பிடத்தக்க விடயமாகும். இதில் முக்கியமாக நான் குறிப்பிட்ட திருமதி.மேனகா பாஸ்கரன் பற்றிய நினைவலைகளை நாம் பின் நாட்களில் பார்ப்போம்.

தை மாதத்திலேயே தைரியத்துடன் சில செயற்பாடுகளை தொடங்கினேன் சமுர்த்தி பயனுகரிகளை சங்க கூட்ட வருகையை ஊக்குவிக்க பூச்சீட்டு முறையை தலைவர் தலைமையில் ஆரம்பித்தேன். பூச்சீட்டு என்பது அன்றைய தினம் குலுக்கி அன்றைய தினமே சீட்டை வழங்குவது ஆகவே சீட்டு எடுத்தவர் கட்டாயம் அன்றைய தினம் சமுர்த்தி சங்க கூட்டத்திற்கு வர வேண்டும் இது தான் திட்டம். இதனால் சங்க கூட்ட வருகையை அதிகரித்து வெற்றியும் கண்டேன். கூட்டத்திற்கு ஒழுங்காக வருவோருக்கு வருட இறுதியில் பரிசில்கள், சமுர்த்தி ஊடாக பெறும் கடன்களை மாதா மாதம் ஒழுங்காக செலுத்தவோருக்கு பரிசுகள் என அறிவித்தேன். அனைத்தும் வெற்றி மேல் வெற்றி தந்தன சங்க தலைவிகள் மிகச்சிறப்பாக செயற்பட்டனர்.

 மாதாங்கள் உருண்டோட மாதாந்த சிறுகுழு சேமிப்புக்களை வைப்பிலிட்டு கடன்களை வழங்கியவாறு நாட்கள் நகரத் தொடங்கின. மார்ச்-8 மகளிர் தினம் வந்தது எவ்வாறு அதை நடாத்துவது என்று எனக்கு தெரியாது. அந்நாளும் சாதாரண நாள் போல் நகர்ந்தன பிற்காலத்தில் மகளிர் தினத்தில் பல சாதனைகள் பெண்களுக்கான சேமிப்பு போட்டிகள் எல்லாவற்றிலும் படைத்தோம் அதை பின் நாட்களில் பார்ப்போம்.

சித்திரை மாதம் ஆரம்பமானது முகாமையாளர் குருபரன் அவர்கள் வாராந்த கூட்டத்தில் மிக முக்கியமான ஒரு விடயத்தை எங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றார். எல்லோர் மனதிலும் ஒரே அங்கலாய்ப்பு அவர் என்ன கூறப் போகின்றார் என்று. அவரும் அவரது பாணியில் கூறத் தொடங்கினார். 2008ம் ஆண்டும் சமுர்த்தி வங்கிகளின் சேமிப்பை அதிகரிக்கவும், சமுர்த்தி பயனுகரிகளிடையே சேமிப்பை ஊக்குவிக்கவும் சித்திரை புது வருட காலங்களில் கிராமங்கள் தோறும் சேமிப்பை ஊக்கப்படுத்துமாறு சமுர்த்தி அதிகார சபையால் அறிவுறுத்தி வருடா வருடம் சுற்றிக்கை  வருவதை நாம் அறிவோம்  என கூறினார். இதற்காக சகல கள சமுர்த்தி உத்தியோகத்தர்களும் தங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார். இதன் போது அதிக சேமிப்பில் ஈடுபடும் கள சமுர்த்தி உத்தியோகத்தர், சமுர்த்தி வங்கிகள் கௌரவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். நாமும் நமது வங்கியை அதிக சேமிப்பு செய்து இம்முறையாவது மாவட்ட மட்டத்திலாவது முதலவது இடத்தை பெற நீங்கள் அனைவரும் ஒன்றினைந்து செயற்படுமாறு கூறினார். நாமும் முயற்சிப்பதாக கூறினோம். எல்லோரும் அதற்கான பணிகளை செய்ய தொடங்கினர் நானும் தொடங்கினேன் அன்று தொடங்கிய இந்த சேமிப்பு வாரத்தின் தொடக்கம் 2020 வரை ஒரு யுத்த களமாகவே சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மத்தில் இருந்தது வந்துள்ளது. இதன் பல சுவையான சம்பவங்கள் பின் நாட்களில் வரும்.

 எனக்கு மொத்தம் 147 சமுர்த்தி முத்திரைகள் தான் மொத்த சிறு குழு அங்கத்தவர்களோ 150 தான் எப்படி சேமிப்பை பலப்படுத்துவது மற்றைய கிராமங்களுடன் ஒப்பிடும் போது மிக குறைவானதாகவே காணப்பட்டது. எவ்வாறு வெற்றி பெறுவது என பலவாறு யோசித்தேன். அந்த காலத்தில் பங்கு, சிறுவர், குழு ஆகிய நிலையான கணக்குகளுக்கே சேமிப்பை சேமிக்கும்படி அறிவுருத்தப்பட்டிருந்தது. எப்படியாவது சேமிக்க வேண்டும் எனும் அவா என் மனதில் வித்திட்டது. உடனடியாக சங்க தலைவர்களை அழைத்து சங்க ரீதியாக அவர்களிடையே போட்டியை ஏற்படுத்தினேன். பங்கு, சிறுவர், குழு ஆகிய மூன்று கணக்குகளுக்கு அதிகம் சேமிப்பை சேமிக்கும் சங்கங்களுக்கும், சமுர்த்தி பயனாளிகளுக்கும்  பரிசுகள் வழங்கப்படும் எனவும், நினைவு சின்னங்கள் சங்க தலைவர்களுக்கு வழங்கப்படுவதுடன, ஆண்டிறுதி நிகழ்வில் கௌரவிக்கப்படுவர் எனவும் அறிவித்தேன். இது எனக்கு  முதல் தடவை நிச்சயம் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறினேன். உற்சாகமடைந்த சங்க தலைவர்கள் தங்கள் தங்கள் சங்க அங்கத்தவர்களை சேமிப்பை அதிகரிக்கும் படி தாம் கூறுவதாகவும் தாங்களும் சேமிப்பில் ஈடுபடுவதாக எனக்கு உறுதியளித்தனர். தாங்கள் சேமிக்கும் தொகையை போட்டி முடியும் வரை மற்றை சங்கங்களுக்கு தெரிவிக்க வேண்டாம் எனும் கட்டளையையும் எனக்கும் அவர்கள் இட்டனர். 

2008 சித்திரை புதுவருடமும் பிறந்தது சகல சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் வருட பிறப்பை கருத்தில் கொள்ளாது வங்கியில் பிரசன்னமாயிருந்தனர். 14ம் திகதி பிறந்த தழிழ் சிங்கள புது வருடத்தில் இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி முகாமையாளர் திரு.குருபரன் அவர்களின் கைவிசேசத்துடன் ஆரம்பமாகியது சேமிப்பு வாரம். அன்றைய தினத்தில் புதிய அங்கத்தவர்களை இனைத்து புதிய கணக்குகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது. அனைத்து சமுர்த்தி உத்தியோகத்தர்களும் தத்தம் சமுர்த்தி பயனாளிளை அழைத்து வந்து புதிய கணக்கை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் ஈடபட்டனர். இது ஒரு புறம் நடக்க அனைத்து சமுர்த்தி உத்தியோகத்தர்களும் ஆளுக்காள் தெரியாமல் தங்கள் கிராமத்தின் சேமிப்புக்களை சமுர்த்தி வங்கியில் இட்டதோடு தங்கள் சேமிப்பை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என முகாமையாளரிடமும் தெரிவித்தது சுவாரஸ்யமான விடயமாகும். முதல் நாளில் எதிர்பாத்த அளவு எனது கிராமத்தால் சேமிப்பு இட முடியவில்லை. அடுத்த அடுத்த நாட்களில் சேமிப்பு அதிகரித்தது. முகாமையாளர் குருபரன் அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம். ஜெயதாசன் மாவட்டத்தில் முதலாவதாக வந்து விடுவோம் போல உள்ளது என்றார். நான் சொன்னேன் சேர் முதலில் பிரதேச செயலக மட்டத்ததை பார்ப்போம் கல்லடி, இருதயபுரம் சமுர்த்தி வங்கிகள் அதிக மக்களை கொண்டது பொறுங்கள் பார்ப்போம் என தெரிவித்தேன். மற்றைய வலய நண்பர்களிடம் கேட்ட போது இஞ்ச பெரிசா இல்லடா மச்சான் ஏலுமான வரை சேர்த்துள்ளோம் என ஆளுக்காள் கூறினார்கள். பலவாறு சேமித்து முடிவுக்கும் வந்து விட்டோம் எம்மால் முடியாத கட்டமாகி விட்டது. சேமிப்பு வாரம் இன்றுடன் முடிவுற்றதாக முகாமையாளர் அறிவித்து விட்டார்.

 ஒரு வாரத்தில் சேமிப்புக்கள் அனைத்தும் முடிவடைந்திருந்தன. எல்லோருக்கும் பதட்டம் இருதயபுரம் கிழக்கு வலயத்தில் எந்த சமுர்த்தி உத்தியோகத்தர் முதலாமிடத்தை பெற்றுள்ளார் என்பதை அறிய, ஏன் என்றால் இலங்கையிலேயே முதல் தடவையாக 2006ல் தான் இந்த சித்திரை புதுவருட சேமிப்பு இடம்பெற்றது. 2008ல்  வெற்றி பெற சகல கள சமுர்த்தி உத்தியோகத்தர்களும் அவாவில் இருந்தோம். யாரும் அவசரப்பட வேண்டாம் சரியாக் கணக்கிடப்பட்டு உங்களுக்கு அறிவிக்கப்படும் என சமுர்த்தி முகாமையாளர் குருபரன் தெரிவித்தார். நேரம் ஆக ஆக அரசல் புரசலாக பல கதைகள் வலயத்திற்குள் உலாவியது யார் அந்த உத்தியோகத்தர் இதை நான் என் வலயம் சார்பாக எழுதுகிறேன். இதே போல் ஒரு நிலை தான் சகல சமுர்த்தி வங்கிகளிலும் நடாந்து கொண்டு இருந்தது இதை வாசிக்கும் பலருக்கும் இந்நிகழ்வு தங்கள் மனதில் இன்று நின்று நிழழாடும்.  இறுதி முடிவை அறிவிக்க அனைவரையும் காரியாலயத்தில் ஒன்று கூடுமாறு தெரிவிக்கப்பட்டது. முகாமையாளர் திரு.குருபரனுடன் உதவி வங்கி முகாமையாளர் சுதர்சினி பிரபாகரன் அவர்களும், காசாளர் திரு.சிறிதரன் அவர்களும் வலய உதவியாளர் திருமதி.ரோகினி ஆகியோர் மத்தியில் இறுதி முடிவு அறிவிக்க தயாரானார்கள் எல்லோர் மனதிலும் லப் டக் லப் டக் தான்.....  

தொடரும்..........


2008ம் ஆண்டு சித்திரை புத்தாண்டு சேமிப்பை ஆரம்பித்த போது படத்தில் முகாமையாளர் குருபரன் (SM)மற்றும் அற்புதமலர்(SDO) ஆகியோரை காணலாம்.


Comments