நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (19ம் தொடர்).......
இதற்கிடையில் சமுர்த்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து உதவி சமுர்த்தி ஆணையாளராக சேவையாற்றி வந்த இரா.நெடுஞ்செழியன் அவர்கள் மாற்றலாகி திட்டமிடல் பகுதிக்கு 2006ல் செல்ல, புதிய சமுர்த்தி உதவி ஆணையாளராக P.குணரெட்ணம் அவர்கள் கடமையை ஏற்று கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
முக்கியமான விடயம் என்னவென்றால் இருதயபுரம் கிழக்கு கிராமத்திலேயே இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வங்கியும் செயற்பட்டது. நான் இருதயபுரம் கிழக்கு கிராமத்தின் சமுர்த்தி தொடர்பான் அடிப்படை தகவல்களை திரட்டிக் கொண்டிருந்தேன். கொஞ்சம் நகர் புறத்தை அண்டியதால் 147 குடும்பங்களே சமுர்த்தி நிவாரணத்தை அன்றைய கால கட்டத்தில் பெற்று வந்தன. இக்கிராமத்தில் பாரதி சமுர்த்தி சங்கம், திரிஸ்டார் சமுர்த்தி சங்கம், நியுடைமன் சமுர்த்தி சங்கம் என மூன்று சமுர்த்தி சங்கங்கள் செயற்பட்டு வந்தன. சமுர்த்தி நிவாரனம் பெற தகுதியுடையாரும் சங்கத்தில் அங்கத்தவராகி 30 சிறுகுழுக்கள் இயங்கி வந்தன. சுமார் 150 மேற்பட்ட சமுர்த்தி அங்கத்தவர்களை கொண்டதாக இக்கிராமமாக இது காணப்பட்டது. எனது அலுவலகத்தை சமுர்த்தி வங்கிக்கு அருகில் இருந்த கிராம அபிவிருத்தி சங்க கட்டடித்தில் வைத்திருந்தேன்.
2008ல் இருதயபுரம் கிழக்கு கிராமத்தின் சமுர்த்தி நிவாரணமாக 615 ரூபா பெறுமதியான நிவாரனத்தை ஒரு குடும்பமும், 415 ரூபா பெறுமதியான நிவாரனத்தை 63 குடும்பங்களும், 350 ரூபா பெறுமதியான நிவாரனத்தை 23 குடும்பங்களும், 250 ரூபா பெறுமதியான நிவாரனத்தை 15 குடும்பங்களும், 210 ரூபா பெறுமதியான நிவாரனத்தை 45 குடும்பங்களும் அன்றைய கால கட்டத்தில் பெற்று வந்தன. இதுவே இக்கிராமத்தின் அடிப்படை தகவலாக கொண்டு எனது பணியை முன்னெடுத்து வந்தேன்.
இந்த வறிய மக்களுக்கான நிவாரணம் வழங்குவது தொடர்பாக இலங்கையில் 1930ம் ஆண்டு தொடக்கமே கவனம் செலுத்தப்பட்ட போதிலும் 1979ம் ஆண்டு செப்டம்பர் மாதமளவில் இலங்கையில் உணவு முத்திரை திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதன் அடிப்படையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை இனம் கண்டு அவர்களுக்கு வயது அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் தனி உணவு முத்திரை வழங்கப்பட்டது. 08 வயதிற்கு குறைந்த பிள்ளைகளுக்கு மாதாந்தம் 25 ரூபாவும், 08 தொடக்கம் 12 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கு மாதாந்தம் 20 ரூபாவும், அதே போல் 12 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு அங்கத்தவர்களுக்கும் மாதாந்தம் 15 ரூபாவிற்கு எனவும் உணவு முத்திரை அக்காலத்தில் வழங்கப்பட்டன. அக்காலத்தில் வசதியற்ற பல குடும்பங்களுக்கு வீடுகளுக்கான மின்சார வசதி காணப்பட்டவில்லை இக்காரணத்தினாலும் எரிபொருளுக்கான விலை அதிகரித்த காரணத்தினாலும் அக் குடும்பங்களுக்கு மாதாந்தம் ரூ.9.50 சதத்திற்கான மண்ணெண்னை முத்திரையும் வழங்கப்பட்டது. இதே வேளை இவ் உணவு பொருட்களை பெற்றுக் கொள்ள கூட்டுறவு சங்க கடைகள் மற்றும் உத்தரவு பெற்ற வியாபார நிலையங்களிலும் பெற்று கொள்ள நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதே சமயம் இவ் உணவு முத்திரைகளை பயன் படுத்தி பொருட்களை பெறாத சந்தர்பத்தில் தபால் அலுவலகங்களில் குறித்த குடும்பம் பேணி வந்த சேமிப்பு கணக்குகளில் வைப்பிலிடவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காலத்தின் தேவை காரணமாக இவ் நிவாரண அட்டையின் பெறுமதிகள் மற்றமடைந்தே வந்தன அவைகளை அவ்வப்போது பார்ப்போம்.
இருதயபுரம் கிழக்கு கிராமத்தை ஓரளவு அறிந்துள்ளோம் வறுமை நிவாரணம் பற்றியும் ஓரளவு அறிந்துள்ளோம். இனி 2008ல் சமுர்த்தி வேலைத்திட்டம் என்னுள் ஏற்படுத்திய மாற்றத்தின் ஊடாக நிகழ்ந்த நிகழ்வுகளை ஆராய்வோம். முதலில் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் 2008ம் ஆண்டுடன் சமுர்த்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 10 வருடங்கள் நிறைவடைந்து இருந்தது. இதை நான் கொண்டாட வேண்டும் என முடிவெடுத்தேன். இருதயபுரம் கிழக்கில் உள்ள அனைத்து கிராம சமுர்த்தி உத்தியோகத்தர்களையும் இதில் கலந்து கொண்டு நடாத்துவோம் என அழைத்தேன் யாரும் முன்வரவில்லை நானே என் கிராமத்தை மட்டும் வைத்து 10 வருட கொண்டாட்டத்தை நடாத்த முடிவெடுத்து, சங்கங்களிடம் அனுமதியையும் பெற்றேன். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு செயற்பாடு செய்வதாகவும் இருதயபுரம் கிராமம் சமுர்த்தியில் ஒரு முன் மாதிரி கிராமமாக நாம் திகழ வேண்டுமாயின் சமுர்த்தியின் அனைத்து செயற்பாடுகளையும் செய்வோம் என தலைவர்களிடம் கூறி செயற்படத் தொடங்கினோம்.
சமுர்த்தி திட்டத்தில் பல செயற்பாடுகளை நாம் வருடந்தோறும் சமுர்த்தி திட்டம் ஆரம்பித்து தொடக்கம் இன்று வரை மக்களின் பங்களிப்புடன் செய்து வந்துள்ளோம். அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம், சித்திரை சேமிப்பு வாரம், சிறுவர் முதியோர் தினம், கருத்திட்ட வேலைத்திட்டங்கள், சிறுவர் போட்டி நிகழ்வுகள், கடன் வழங்குதல், இரத்ததான நிகழ்வுகள், சமய கலாசார நிகழ்வுகள். பயிற்சி பட்டறைகள், சுற்றுலாக்கள், சிரமதானங்கள், உட்கட்டமைப்பு செயற்பாடுகள், வீடுகளை நிர்மானித்தல், மலசல கூடங்களை அமைத்தல் என பல்வேறு வேலைத்திட்டங்களை சமுர்த்தி ஊடாக செய்து வந்துள்ளோம். எனவே இவ்வேலைத்திட்டங்களை 2008 செய்ய தீர்மானித்தோம்.
வருட இறுதியில் நாம் செய்த வேலைத்திட்டங்களையும் சமுர்த்தியின் 10 வருட பூர்த்தியை முன்னிட்டு ஒரு நினைவு ஏட்டையும் வெளியிட தீர்மானித்தேன் அப்போதே சமுர்த்தி பற்றி எழுதும் பணியை தொடங்கி விட்டேன்.
தொடரும் ...........
Comments
Post a Comment