நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (17ம் தொடர்).......

               இரண்டாம் பாகம் தொடருவோமா வேண்டாமா என பல கேள்விகளுக்கு மத்தியில் இருந்த போது, பலர் தொடர்பு கொண்டு நிறுத்த வேண்டாம் தொடருங்கள் என கேட்டுக் கொண்டனர். இனித்தான் நல்ல பல சம்பவங்களை காணவுள்ளோம் தொடருங்கள் என்று கூறினார்கள். இருந்தும் என் பணி நிமித்தம் மிக வேகமாக தொடர முடியுமோ தெரியாது இருப்பினும் தாங்கள் அனைவரும் கேட்டுக் கொண்டதற்கினங்க மீண்டும் தொடர்கின்றேன்.......

நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (17ம் தொடர்).......

நான் சவூதி அரேபியா சென்ற பின்பு 2001.12.18 அன்று கல்லடி சமுர்த்தி வங்கியின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு கேக் வெட்டி நிகழ்வை சிறப்பித்துக் கொண்டாடியுள்ளார்கள். இந்நிகழ்வுக்கு அன்றைய பிரதேச செயலாளர் K.கதிர்காமநாதன் அவர்களும், மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் இரா.நெடுஞ்செழியன் அவர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் கல்லடி சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் பத்மா ஜெயராஜா அவர்களால் கேக் வெட்டப்பட்டு ஒரு வருட பூர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.   இதற்கிடையில் சமுர்த்தி வங்கியில் சமுர்த்தி முதல் கடனாக 5000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது சமுர்த்தி வங்கியூடாக ஒரு சமுர்த்தி பயனுகரிக்கு தொழில் செய்வதற்கு 15லட்சம் ரூபாய் வழங்கப்படுகின்றது.

 நான் சவூதியில் இருக்கும் போது முதலாவது தடைதாண்டல் பரீட்சையில் சித்தியடைந்தும் இருந்தேன். என்ன பயன் ஒன்றுமில்லையே! கவலையாகத் தான் இருந்தது. இதற்கிடையில் சமுர்த்தி செயற்பாடாக பல சிரமதான பணிகள் புதிய புதிய கருத்திட்டங்கள் செய்த வண்ணம் காலம் உருண்டோடியது.

 இதன் போது சமுர்த்தி வங்கி முகாமையாளர்களுக்கான இடமாற்றங்களும் இடம்பெற்றன. புளியந்தீவு சமுர்த்தி வங்கிக்கு திருமதி.பத்மா ஜெயராஜா அவர்கள் புதிய முகாமையாளராக கடமையை  பொறுப்பேற்றிருந்தார். கல்லடி சமுர்த்தி வலயத்திற்கு திரு.ரவிச்சந்திரன் அவர்கள் புதிய முகாமையாளராக கடமையை பொறுப்பேற்றிருந்தார். இருதயபுரம் சமுர்த்தி வலயத்திற்கு திருமதி.கீதா கணகசிங்கம் அவர்கள் புதிய முகாமையாளராக கடமையை பொறுப்பேற்றிருந்தார். இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வலயத்திற்கு திருமதி.தமயந்தி அவர்கள் புதிய முகாமையாளராக கடமையை பொறுப்பேற்றிருந்தார்.

நானும் வந்து மீண்டும் சமுர்த்தி வேலையைப் பெற்றுக் கொள்ள எவ்வளவோ முயற்சிகளை மேற் கொண்டேன் ஒன்றுமே சரிப்பட்டு வருவதாக இல்லை. என்னுடன் பணியாற்றியவர்களிடம் கேட்டால் இப்ப நல்ல சம்பளம்டா, நல்ல வேலை கஸ்டமில்லை என்று சொல்வதோடு சும்மா இருந்த வேலையை விட்டுப்போட்டு இப்ப அலை மோதுகிறாய் என வசைபாடினார்கள். காண்பவர் எல்லோரும் இதை தான் சொன்னர்கள். முயற்சித்துக் கொண்டே இருந்தேன் முடியவில்லை என் பழைய தொழிலை மீண்டும் ஆரம்பிக்க எண்ணி ஆரம்பித்து நடாத்தி கொண்டு வந்தேன். 

காலம் உருண்டோடியது 2004.12.26 அன்று எனது வீடியோ கடையில் நான் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன் அப்போது 9.00 மணி போல் மட்டக்களப்பே அல்லோல கல்லோலப்பட்டு கொண்டிருந்து. கடல் தண்ணி வீட்டுக்குள் வருவதாக சனங்கள் ஓடித்திரிந்தது. நானும் வீட்டிற்கு ஓட்டமும் நடையுமாக  வந்த போது எனது மனைவியும் பிள்ளையும் வீட்டிலிருந்து கல்லடி பிரதான வீதிக்கு ஓடிவந்தார்கள். நானும் அவர்களை தேடிப் பிடித்து அழைத்துக் கொண்டு எனது தயாரின் வீட்டிற்கு தாமரைக்கேணிக்கு போனேன். சற்று நேரம் தாழ்த்தி எனது வீட்டை வந்து பார்த்த போது என் வீட்டின் கதவு நிலை மட்டத்திற்கு சுனாமி அலையின் தண்ணீர் வந்திருந்ததையும், நான் வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த அனைத்து பொருட்களும் தண்ணீரில் மிதப்பதை பார்த்து விட்டு கண் கலங்கிய படி சென்று விட்டேன்.

 என்ன கஸ்டமடா இது அடிக்கு மேல் அடி விழுகின்றதே? என்று கூறியவாறு காலங்கள் நகர்ந்தன காலத்தின் நியதி  மீண்டும் கல்லடி வேலூரில் குடியேறி வாழ்ந்து வந்தேன். அப்போது சுனாமி கொடுப்பணவு கல்லடி சமுர்த்தி வங்கியூடாக வழங்கப்பட போவதாக தகவல் வெளியாகியது. போவதற்கே மனம் இடம் கொடுக்கவில்லை என்ன செய்வது போகத்தான் வேண்டும் அங்கு சென்றேன் அப்போதிருந்த சமுர்த்தி முகாமையாளர் ரவி சேர் என்னை அழைத்து பல விடயங்களை கூறினார் நிச்சயம் வேலை கிடைக்கும் கவலைப்பட வேண்டாம் என்றார். அப்போது என்னுடன் பணியாற்றிவர்கள் என்னை அழைத்து அக்கொடுப்பணவை விரைவாக வழங்கி இருந்தனர். இவ் கல்லடி சமுர்த்தி வங்கியானது கல்லடி முகாமிற்கு அருகில் அமைந்திருந்தது இதனால் சுனாமி அலையின் போது பெருமளவில்  தாக்கப்பட்டு முற்றாக சேதமடைந்து இருந்தது. ஆகவே  இவ்வங்கியானது சுனாமியின் பின்  நாவற்குடாவில் ஒரு தனியார் கட்டிடத்தில் தற்காலிகமாக செயற்பட்டு வந்தது. சமுர்த்தி வங்கிக்காக கட்டப்பட்ட பழைய கட்டிடம் தற்போது பிரதேச செயலக சித்தவைத்திய சாலையாக செயற்படுவது குறிப்பிடத்தக்க விடமாகும்.

2005ம் ஆண்டு 6ம் மாதத்தில் மற்றுமொரு இடமாற்றம் சமுர்த்தி முகாமையாளர்களுக்கு நடைபெற்றது. இதில் கல்லடி சமுர்த்தி வலயத்திற்கு G.F.மணோகிதராஜ் அவர்களும், இருதயபுரம் சமுர்த்தி வலயத்திற்கு திருமதி.நிர்மலா கிரிதரன் அவர்களும், இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வலயத்திற்கு திரு.குருபரன் அவர்களும், புளியந்தீவ சமுர்த்தி வலயத்திற்கு திரு.இராசலிங்கம் அவர்களும் கடமையேற்றிருந்தனர். இப்படியே 2005ம் ஆண்டு உருண்டோடிக் கொண்டிருந்தது. எனது அக்காவின் கணவர் எப்போதும் கூறுவார் தான் எனக்கு ஒரு வேலையை பெற்றுத்தருவதாக பல தடவை எனக்கு சொல்லி வந்துள்ளார். அவர் ஒருநாள் என்னை தொலைபேசி அழைத்து தற்போது நீ வேலை இல்லாமல் இருக்கிறாய் தானே உனக்கு ஒரு அதிஸ்டம் கிடைத்துள்ளது இரவே வெளிக்கிட்டு நாளைக்கு  கொழும்பிற்கு வா என்றார். ஒரு புறம் சந்தோசம் தான் என்ன வேலை என்றும் சொல்லவில்லை. அவசர அவசரமாக கொழும்பு பயணத்திற்கான ஆயத்தத்தை செய்து கொண்டு அன்று இரவே கொழும்பு புறப்பட்டேன்.

பயணத்தின் போது எனது சகல ஆவணங்களையும் கொண்டு வரச்சொல்லி இருந்தார். கொழும்பை சென்றடைந்ததும் காலையில் அத்தானுடன் மோட்டார் சைக்கிளில் இருவருமாக புறப்பட்டோம். எங்கே போகின்றோம் என அவர் என்னிடம் எதுவும் கூறவில்லை எனக்கு பயமாகவும் இந்த வேலை சரி வருமா? இது சரிவருமா என்கின்ற கேள்வியும் மனதில் திக் திக் என இருந்தது இறங்கி நடந்து சென்றோம் அந்த அலுவலகத்திற்கு......

தொடரும்......


கல்லடி வங்கி ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு  நிகழ்வில் அப்போதைய மண்மனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா குத்துவிளக்பேற்ற உதவி சமுர்த்தி ஆணையாளர் இரா.நெடுஞ்செழியனை படத்தில் காணலாம்....

ஒரு வருட ஆண்டு நிறையொட்டி சமுர்த்தி பயனுகரிக்கு பரிசினை வழங்குகின்றார் மண்மனை வடக்கு பிரதெச செயலாளர் மு.கதிர்காமநாதன் அவர்கள்....

இருதயபுரம் சமுர்த்தி வங்கி ஆரம்பிக்கப்ட்ட போது சிவநாதன், மணிவண்ணன், நித்தியானந்தபவான்.

சிரமதான பணிகள் முன்னெடுப்பு...

சிரமதான பணிகள் முன்னெடுப்பு...

                                               சிரமதான பணிகள் முன்னெடுப்பு...

Comments