நானும் என் சமுர்த்தியும் (12ம் தொடர்).......

 நானும் என் சமுர்த்தியும் (12ம்  தொடர்).......

(1999 அன்று சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக தெரிவு செய்யப்பட்ட மாமாங்கம் கிராமத்தின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் அற்புதமலர் அவர்களுக்கு நியமனம் வழங்கிய போது...) 

பரபரப்பாக இருந்த அந்த செய்தி எங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப் போவதான செய்தியாக தான் இருந்தது. ஆளுக்காள் வீடு தேடிப்போய் உனக்கும் கடிதம் வந்திருக்காடா? என்று கேட்க வேண்டியதாக இருந்தது அப்போது எல்லோரும் எனக்கும் வந்திருக்கு, எனக்கும் வந்திருக்கு என்று மகிழ்ச்சியில் சொன்னார்கள். அப்போது தானே ஒருவரிடமும் கையடக்க பேசிகள் இல்லையே இப்ப என்டா ஹலோ மட்டும் தான்.

1999.12.01ம் திகதி காத்தாண்குடி ஹிஸ்புல்லா கலாச்சார மண்டபத்தில் வைத்து நியமன கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் எல்லோரும் காலை 8.30 மணிக்கு முன்பதாக காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாச்சார மண்டபத்திற்கு வந்து சேரவேண்டும் என எங்களுக்கு பிரதேச செயலகம் ஊடாக அறிவிக்கப்பட்டது.

எத்தனை நாள் கனவு 23 மாத போராட்டம் ஒரு முடிவுக்கு வருவதை எண்ணி ஆனந்த களிப்பில் இந்த நாளுக்காக காத்திருந்தோம். அந்த நாளும் வந்தது காத்தான்குடியை நாங்கள் அனேகமானோர் சைக்கிளில் தான் சென்றடைந்தோம்.  எங்கு பார்த்தாலும் எம்மவர் தான் நூற்றுக்கணக்கில் சமுர்த்தி ஊக்குவிப்பாளர்கள் காணப்பட்டனர். பிரமுகர்கள் பேசிக் கொண்டே இருந்தனர் நேரம் சென்ற படி இருந்தது. நியமனம் தற்போது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் நியமனம் மிக விரைவாக வழங்கப்பட்டு கொண்டிருந்தது. எனக்கும் வழங்கப்பட்டது, சகலருக்கும் நியமனம் வழங்கப்பட்டு முடிவடைந்ததும் ஆளுக்காள் உரையாடி விட்டு வீட்டிற்கு வந்து எம் நியமனத்தை வாசித்துப் பார்த்தோம். இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம்-1க்கு தாங்களை நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. சமுர்த்தி ஊக்குவிப்பாளர் எனும் பதவி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்  பதவியாக மாற்றமடைந்து இருந்தது. மாதாந்த அடிப்படை சம்பளமாக 3990 ரூபாவாகவும், ஊழியர் சேமலாப நிதியத்திற்குள் உள்வாங்கப்பட்டதாகவும்  குறிப்பிடப்பட்டிருந்தது. என்னவோ ஏதோ நிரந்தர நியமனம் சம்பள உயர்வு கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. 

மறுநாள் நியமன கடிதத்துடன் அலுவலகம் சென்றேன் அப்போது தான் விளங்கியது எல்லோருக்கும் தரம்-1 வழங்கப்படவில்லை சிலருக்கு தரம்-2 எனவும் குறிப்பிட்டு இருந்தது. என்னவென்று விசாரித்ததில் உயர்தரம் சித்தியடைந்தோர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம்-1 எனவும், சாதாரண தரம் சித்தியடைந்தோர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம்-2 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிய முடிந்தது. சற்று சம்பளத்தில் மாற்றமும் காணப்பட்டது.

தலைமையக முகாமையாளர் மாலா நெடுஞ்செழியன் வாராந்தம் நடாத்தும் கூட்டத்தில் புதிதாக வந்த நடைமுறைகளை பற்றி கூறினார். உடனடியாக சமுர்த்தி வலயங்களை அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் அதற்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். இதன் அடிப்படையில் நான்கு வலயங்களும் தங்கள் பணிகளை ஆரம்பித்தன ஒவ்வொரு வங்கிகளும் தத்தம் இடங்களை சமுர்த்தி பயனுகரிகளை கொண்டு துப்பரவு செய்து வந்தன.

 கல்லடி சமுர்த்தி வலயம் கல்லடி இராணுவ முகாமிற்கு அருகில் தம் கட்டிடத்தை அமைக்க பள்ளமாக இருந்த அந்த இடத்தை செப்பனிட்டது. இருதயபுரம் சமுர்த்தி வலயம் இருதயபுரம் சந்தைக்கு அருகில் குப்பை கொட்டப்பட்ட ஒரு இடத்தை மண் கொண்டு நிரப்பி அவ்விடத்தில் நிர்மாணிக்க முடிவெடுத்தது, இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வலயம் இருதயபுரம் பெற்றோலிய கூட்டுத்தாபன விடுதிக்கு அருகில் உள்ள காணியில் கட்டிடம் அமைப்பதற்காக பணிகளை முன்னனெடுத்தன. புளியந்திவு சமுர்த்தி வலயம் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் முன் பக்கமாக இருந்த ஒரு பழைய கட்டிடத்தை திருத்தி அமைப்பதற்காக வேலைத்திட்டத்தை முன்னெடுத்து இருந்தன. இதன் போது இருதயபுரம் சமுர்த்தி வலயத்திற்கு புதிய சமுர்த்தி முகாமையாளராக ரவிச்சந்திரன் அவர்கள் கடமையை ஏற்றிருந்தார்.

 இவ்வாறு 1999 ஒரு இனிதான வருடமாக முடிவுற்றது. சமுர்த்தி வலயத்திற்கான கட்டிட பணிகள் மிக விரைவாக முன்னெடுக்கப்பட்டன.  இதன் போது பிரதேச செயலகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று இடம் பெற்றது அதை பற்றி நாளை பார்ப்போம்.......

தொடரும்.......


Comments