நானும் என் சமுர்த்தியும்..... (ஏழாம் பகுதி) ஆழ்ந்த அனுதாபங்கள் அமரர் ஜெகத் நிசாந்த பெர்ணாண்டோ அவர்களுக்கு.....
நானும் என் சமுர்த்தியும்..... (ஏழாம் பகுதி)
ஆழ்ந்த அனுதாபங்கள் அமரர் ஜெகத் நிசாந்த பெர்ணாண்டோ அவர்களுக்கு......
23.05.2021 அன்று எனது ஏழாவது தொடரை எழுதும் போது தான் இந்த துயரச் செய்தி என் காதுகளுக்கு எட்டியது. தற்போதைய கொவிட் காலத்தில் தம் உயிரை துச்சமென மதித்து பொது மக்களுக்கான கொரோனா கொடுப்பணவினையும் சமுர்த்தி நிவாரணங்களையும் வழங்கி தம் சேவையை ஆற்றி வந்த பதுளை மாவட்டத்தை சேர்ந்த எம் சக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் அமரர் ஜெகத் நிசாந்த பெர்ணாண்டோ அவர்கள் இறையடி சேர்ந்தார் எனும் சோக செய்தி அவர்களின் ஆத்மா சாந்திடைய இலங்கை பூராவும் உள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
அவரது மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபத்தை மட்டக்களப்பு மாவட்டம் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கின்றோம்....
இனி நாம் ஏழாம் தொடரை பார்ப்போம்......
1998.06.21 அன்று ஒரு கடிதம் பிரதேச செயலகத்தால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது அதில் சமுர்த்தி ஊக்குவிப்பாளராகிய தங்களை நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப்பரீட்சை 1998.06.25 வியாழக்கிழமை மதியம் 2.00 மணிக்கு நடைபெற உள்ளதால் பிறப்பு அத்தாட்சி பத்திரம், கல்விச்சான்றிதழ். நியமன கடிதம், ஏனைய தகமையுடன் பிரதேச செயலகம் வருமாறு அறிவுருத்தபப்ட்டிருந்தது. நானும் அன்றைய தினத்தில் சகல ஆவணங்களுடன் அவ்நேர்முக தேர்வில் கலந்து கொண்டேன், என்னுடன் என் சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு என்டா சரி வருமா? வராதா? என்று கேட்டபடி இருந்தோம். நாளை சொல்லுவார்கள் நாளை மறுதினம் சொல்வார்கள் என்பதை கடந்து எமக்கு கடிதத்தில் அறிவிப்பார்கள் என நினைத்து நினைத்து காலம் தான் கடந்ததே தவிர ஒன்றுமே இடம்பெறவில்லை. பிரதேச செயலகத்தில் ஏதுவும் நடந்ததாக தெரியவே இல்லை அதே சம்பளம் தான். இப்படியான நேரத்தில் தான் நான் இச்சமுர்த்தி வேலை நமக்கு சரிப்பட்டு வராது வேறு ஏதாவது வேலையை தேடுவோம் என எண்ணி அக்காலத்தில் மட்டக்களப்பில் பிரபலமான ஒருவரிடம் வேலை பெற்றுத்தரும்படி கேட்டிருந்தேன். அவரும் பெற்றுத்தருவதாக உறுதியளித்திருந்தார். காலம் நகர நகர வேலைகள் அதிகரித்துக் கொண்டே சென்றது இறப்பு, பிறப்பு, திருமணம் என சமூக காப்புறுதி வழங்குதல் ஆறு மாதங்களுக்கொரு முறை சமுர்த்தி நிவாரண அட்டை வழங்குதல், கர்ப்பிணி தாய்மாருக்கான போசாக்கு அட்டை வழங்குதல் என்பனவும் கிராமங்கள் தோறும் குடும்ப தகவல்களை பெற்றுக் கொள்ளுதல் மற்றும் தகுதியில்லாத குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட சமுர்த்தி நிவாரணத்தை நிறுத்தி புதியவர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டமும் நடைபெற்ற வண்ணம் இருந்தன.
இதற்கிடையில் சமுர்த்தி திட்டத்தின் மூலம் ஒரு சமுர்த்தி வலயத்திற்கு ஒரு கருத்திட்டம் செயற்படுத்தும் வேலைத்திட்டத்திற்கான நிதி விடுவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் புளிந்தீவு சமுர்த்தி வலயத்தின் மூலம் புளியந்தீவு கிழக்கு கிராமத்தில் பொதுக்கிணறு அமைப்பதற்கும், கல்லடி சமுர்த்தி வலயத்தின் மூலம் கல்லடி, கல்லடி-வேலூர் கிராமங்களுக்கான கூட்டுறவு சங்க கட்டிடம் நிர்மானிப்பதற்கும், இருதயபுரம் சமுர்த்தி வலயத்தின் மூலம் கொக்குவில் கிராமத்தில் வியாபார உற்பத்தி நிலையம் அமைப்பதற்கும், இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வலயத்தின் மூலம் இருதயபுரம் கிழக்கில் பொதுக்கிணறு அமைப்பதற்கும் அனுமதி கிடைத்திருந்தது.
இதில் நாம் இன்று கல்லடி சமுர்த்தி வலயம் பற்றியும் அதன் கருத்திட்டம் பற்றியும் ஆராய்வோம். கல்லடி சமுர்த்தி வலயத்திற்கு சமுர்த்தி முகாமையாளராக திருமதி பத்மா ஜெயராஜ் அவர்கள் கடமையாற்றி இருந்தார், அவர் தற்போது பதவி உயர்வு கிடைத்து காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி தலைமையக முகாமையாளராகவும், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார். இவருடன் ஆரம்ப காலத்தில் கடமையாற்றி சமுர்த்தி ஊக்குவிப்பாளர்கள் உமாசங்கர் (தற்போது கனடா), சுரேஸ் (தற்போது மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவு), புஸ்பலதா(தற்போது கல்லடி சமுர்த்தி வங்கி), யோகேஸ்வரி (தற்போது ஓய்வுபெற்றுள்ளார்), சுதர்சினி(தற்போது புளிந்தீவு சமுர்த்தி வங்கி), குளோடி ஸ்பெக்(தற்போது கல்லடி சமுர்த்தி வங்கி), ரவீந்திரகுமார்(தற்போது இருதயபுரம் சமுர்த்தி வலயம்), சிறிதரன் (தற்போது இருதயபுரம் சமுர்த்தி வலயம்), யூலியன்(தற்போது புளியந்தீவு சமுர்த்தி வலயம்), செய்துன் பீபி(தற்போது புளியந்தீவு சமுர்த்தி வலயம்), சிறிகரன்(தற்போது இருதபுரம் கிழக்கு சமுர்த்தி வலயம்), சாரதாதேவி(தற்போது ஜேர்மனி), லதா(தற்போது இருதபுரம் கிழக்கு சமுர்த்தி வலயம்), சிவாகரன்(தற்போது மாவடிமுன்மாரி சமுர்த்தி வங்கி), கலாமதி(தற்போது கல்லடி சமுர்த்தி வலயம்), முருகதாஸ்(தற்போது ஓய்வு), ரமணன்(தற்போது ஓய்வு), மெற்றில்டா(தற்போது கல்லடி சமுர்த்தி வங்கி)சுபந்தினி(தற்போது பதவி உயர்வு கிடைத்து காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர்) ஆகியோரைக் கொண்ட ஒரு படை அணி அவ்வலயத்தில் செயற்பட்டது.
இவ்வலயத்தின் கருத்திட்ட முன்மொழிவாக கல்லடி மற்றும் கல்லடி-வேலூர் கிராமத்திற்கான பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடம் அமைப்பதற்கான திட்டம் முன்மொழியப்பட்டு 150000 (ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம்) வழங்கப்பட்டு அங்கீகாரமும் வழங்கப்பட்டிருந்தது. இதற்காக கல்லடி சமுர்த்தி செயலணி ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டு கல்லடி சமுர்த்தி ஊக்குவிப்பாளர் சுரேஸ் அவர்களால் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மிக முக்கியமாக மக்களின் பங்களிப்புடன் இக்கட்டிடம் அமையப்பட வேண்டும் என கட்டாயமாக தெரிவிக்கப்பட்டது இப்பணிக்காக சமுர்த்தி ஊக்குவிப்பாளர்களாகிய சுரேஸ், சிறிகரன், உமாசங்கர், யூலியன் ஆகியோரின் உதவி அளப்பரியதாக இருந்தது. மிக முக்கியமாக கல்லடி சமுர்த்தி செயலனியின் தலைவர் அ.தேவதாஸ் அவர்கள் தன் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கி இருந்தார். இக்கட்டிடம் அமைக்கப்பட்டு 1998.11.16ம் திகதி அன்று பொது மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டது. இதற்காக அர்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் இன்றும் எம் மனமார்ந்த நன்றிகள்.
இதில் என் சார்ந்த விடயத்தை நான் கூற வேண்டும் அக்கால கட்டத்தில் நான் புதிதாக திருமணம் முடித்து கல்லடி-வேலூரில் நிரந்தரமாக குடியேறிய காலம். அப்போது கல்லடி, கல்லடிவேலூர் கிராமங்களுக்கு கூட்டுறவு சங்கத்தின் கிளை கடைகள் இருக்கவில்லை. இக்கிராமங்களில் சமுர்த்தி நிவாரனம் பெறும் அனைவரும் திருந்செந்தூர் கூட்டுறவு சங்க கிளை கடைக்கே செல்ல வேண்டும். கூடுதலாக சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்கள் இவ்விருகிராமங்களிலும் காணப்பட்டதால் இவ் அரச காணியில் இக்கூட்டுறவு சங்கத்திற்கு கட்டிடம் அமைக்கப்பட்டது. ஆனால் சமுர்த்தி நிவாரணம் சமுர்த்தி வங்கியில் பணமாக வழங்கத் தொடங்கியதும் இக் கூட்டுறவு கிளையின் கடை நிரந்தரமாக மூடப்பட்டு விட்டது. இது தற்போது கவணிப்பாற்ற ஒரு கட்டமாக பாழடைந்து காணப்படுகின்றது. அவ்விடத்தில் தற்போது இருக்கு புத்தடி கோயிலுக்கான ஒரு கூடாரத்தை அமைத்து தரும் படி கல்லடியில் வசிக்கும் திரு.பாஸ்கரன் அவர்கள் கோரிய போது தாங்கள் அனைவரும் பணம் திரட்டி ஆரம்ப கூடாரத்தை அமைத்துக் கொடுத்தாக கல்லடி சமுர்த்தி ஊக்குவிப்பாளராக கடமையாற்றிய சுரேஸ் அவர்கள் இன்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Comments
Post a Comment