நானும் என் சமுர்த்தியும் (பதினொராம் தொடர்).......
1997ம் ஆண்டு முதல் நியமனமான சமுர்த்தி ஊக்குவிப்பாளர் நியமனம் வழங்கிய நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் என் சக உத்தியோகத்தர் சிவாகரன் அவர்களுக்கு நியமனத்திற்கான கடிதத்தினை வழங்கிய போது பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தியை எனக்கு அனுப்பி இருந்தார் அதன் புகைப்படம் கீழே தங்களின் பார்வைக்காக......
1997ம் ஆண்டு நாங்கள் புதிதாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் போது மட்டக்களப்பு லியோ கழகத்தால் பெப்சி நிறுவனத்தின் அனுசரனையில் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் எமது மண்முனை வடக்கு பிரதேச செயலகம் 3ம் இடத்தை பெற்றுக் கொண்டது. அவ்வெற்றிக்கிண்ணத்தை அப்போதைய மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் G.புண்ணியமூர்த்தி ஐயாவிடம் ஒப்படைத்திருந்தோம். அக் கிண்ணம் தற்போதும் மண்முனை வடக்கு செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அப்போட்டியில் நான், சிவநாதன், ரவீந்திரகுமார்,யூட் செல்வா இராஜரெட்னம் போன்றோர் கலந்து கொண்டிருந்தோம் அப்போது வழங்கிய வெற்றிச்சான்றிதழ் கீழே.....இவ்வாறே 1998ம் ஆண்டு உருண்டோடி முடிந்தது. பிரதேச செயலகத்தின் ஊடாக சில பதிவுகளை எம்மிடமிருந்து பெற்றுக்கொள்வதை எம்மால் அவதானிக்க கூடியதாக இருந்தது. 1999ம் ஆண்டாவது ஒரு முடிவை பெற்றுத்தரும் ஆண்டாக அமைவேண்டும் என அனைவரும் கேட்டுக் கொண்டு பணிகளில் ஈடுபட்டோம். 1999 தை மாதமளவில் சமுர்த்தி ஊக்குவிப்பாளர் நலன்புரி நிதிய அங்கத்துவ விண்ணப்பபடிவம் எம்மிடம் தரப்பட்டு உடனடியாக ஒப்படைக்கும் படியும் கூறப்பட்டது. எம்மையறியாமல் எம் மனதில் ஒரு வகை சந்தோசம் தான். என்னடா இது வெல்லாம் கேக்கிறார்கள் என்று, உடனடியாக பூர்த்தி செய்து 12.02.1999 அன்று வலயத்தில் ஒப்படைத்தோம். அப்போ நலன்புரி நிதியத்தில் எல்லாம் எம்மை பதியுறாங்க இனி நிரந்தரம் தான்டா என ஒருவருக்கொருவர் கதைத்துக் கொண்டோம்.
நாட்கள் நகர நகர அப்போதைய மண்முனை வடக்கு உதவிப்பிரதேச செயலாளராக கடமையாற்றிய கலாமதி பத்மராஜா அம்மணி அவர்கள் ஒப்பமிட்டு 1999.10.28ம் திகதி இடப்பட்ட ஒரு கடிதம் எமக்கு கிடைத்திருந்தது. அக்கடிதத்தில் சமுர்த்தி ஊக்குவிப்பாளர் பதவி நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சைக்கு எம்மை அழைக்கப்பட்டிருந்தது. இது எத்தனையாவது பரீட்சையடா என கேட்டவாறு, எப்ப வரச் சொல்லியுள்ளது என பார்த்தோம். எனக்கு 1999.11.05ம் திகதி மதியம் 2.00 மணிக்கு பிரதேச அலுவலகத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தது வரும் போது பின்வரும் ஆவணங்களையும் கொண்டு வரும் படி கோரி இருந்தது முன்னர் வழங்கப்பட்ட நியமனகடிதம், கல்வித்தகமை (சாதாரணதரம், உயர்தரம்), பிறப்பு அத்தாட்சி பத்திரம், தேசிய அடையாள அட்டை என்பவற்றுடன் வருமாறு அழைக்கப்பட்டிருந்தது. நானும் சரி என்னுடன் கடமையாற்றி உத்தியோகத்தர்களும் சரி தெரிந்த இடமெல்லாம் சென்று நற்சான்றிதழ்களை பெற்று நேர்முக தேர்விற்கு தயாரானோம்.
1999.11.05ம் திகதியன்று மதியம் 1.00 மணிக்கெல்லாம் அனைவரும் பிரதேச செயலகத்தில் ஆஜராகி இருந்தோம். எனது நேரம் வந்தது நான் உள்ளே சென்றேன் கேட்கப்பட்ட ஆவணங்கள் மாத்திரம் சரி பார்க்கப்பட்டது வேறு எதுமே கேட்கவும் இல்லை, பார்க்கவும் இல்லை. எனக்கே இந்த நிலை என்றால் கருத்திட்டம் செய்து முகாமையாளரிடம் கடிதம் வாங்கி வந்தவர்களின் நிலை என்னவென்று யோசித்தவனாய் வெளியில் வந்தேன். எல்லோரும் என்னடா என்று கேட்டார்கள், நானும் பார்த்ததை எல்லாம் சொல்ல இத தான் எங்களிடமும் கேட்டார்கள் என்று அவர்கள் சொல்ல எனக்கும் சந்தோசமாக தான் இருந்தது.
1999 நவம்பர் மாதம் மெல்ல மெல்ல நகரத் தொடங்கியது ஏதோ ஒரு மாற்றம் வராதா என என் மனம் கேட்டுக் கொண்டிருந்தது. வேற வேலைய எடுத்து தாரன் என்று சொன்னவரும் ஒரு முடிவும் இன்னமும் சொல்லல்ல என ஒரு புறம் கோபமாக இருந்தது சமுர்த்தி வேலையோ அல்லது வேற வேலையோ சரி வராட்டி இந்த வருசத்துக்குள்ள நாம வெளிநாடு போவம் என்ற முடிவில் இருந்த போது, 1999.11.25ம் திகதி ஒரு தகவல் என் காதுகளுக்கு மிகவும் பரபரப்பாக எட்டியது எல்லோரும் மகிழ்ச்சிக்கடலில் ஆடப்பாடி துள்ளிக்குதித்தோம் அது என்ன என்பதை நாளைய தினம் பார்ப்போம்.......
தெடரும்........
Comments
Post a Comment