நானும் என் சமுர்த்தியும் (ஒன்பதாம் தொடர்.....)

 நானும் என் சமுர்த்தியும் (ஒன்பதாம் தொடர்.....)


(இது எனது மகளின் முதலாவது பிறந்த தினத்தில் 2000ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் இதில் இடமிருந்து வலமாக அமரர் காண்டீபன்,யூட் செல்வா ராஜரெட்னம், யூட், ரமேஸ்குமார் ஆகியோரை காணலாம்....) 

 இத்தொடரை நான் எழுதும் போது பலரும் இதை ஒரு புத்தகமாக ஆவனப்படுத்துமாறு கேட்கின்றனர். முதலில் இக்கட்டுரைகளை எழுதி முடிப்போம், பிற்காலத்தில் நிச்சயமாக புத்தக வடிவில் வெளியிடுவேன். ஏன் என்றால் இந்த ஜெயதாசனை நாடுபூராவும் அறியச் செய்தது நான் என்றும் இன்றும் நேசிக்கும் என் சமுர்த்தி தான். அது தான் இத்தொடருக்கு நானும் என் சமுர்த்தியும் என பெயரிட்டுள்ளேன். எவ்வளோவோ துன்பங்களை நான் கடந்து வந்து விட்டேன் அவைகளை நான் உங்களுடன் பகிர வேண்டாமா? இருந்தும் என்னை இதுவரை கொண்டு வந்து விட்டது என் சமுர்த்தியே. இது தான் எனது இணையதளத்திற்கு www.jeyasdo.com என்றும், மின்னஞ்சல் முகவரியை கூட jeyasdo@gmail.com என்றும் பெயரிட்டுள்ளேன் இது தான் எனக்கும் என் சமுர்த்திக்கும் உள்ள காதல்...

 புளியந்தீவு சமுர்த்தி வலயத்தில் பணியாற்றிய என் நண்பர்கள் தொடர்பு கொண்டு என்னடா எங்கட வலயத்தை பற்றி எழுதவில்லை என கேட்டபடி உள்ளார்கள், சரி சரி இனி நாம் புளிந்தீவு சமுர்த்தி வலயம் பற்றி பார்ப்போம்.

இப்புளியந்தீவு சமுர்த்தி வலயத்தை பற்றி எழுதுவதற்கு முன் எம்முடன் ஒன்றாக சேர்ந்து பணியாற்றி, சாப்பிட்டு, எம் நல்லது கெட்டது என்னவென்றாலும் எம் வீட்டிற்கே வந்து சுகநலம் விசாரித்த காலமும், எம் வீட்டில் அவரும் அவர் வீட்டில் நாமும் ஒன்றாக உணவருந்திய காலமும், ஒன்றாக சுற்றுலா சென்று மகிழ்ந்த காலமும், ஒன்றாக எமது சமுர்த்தி அலுவலக கண்டினில் தேனீர் பருகிய காலமும் எண்ணியவனாக இன்றும், என்றும் எம் மனதில் வாழும் அமரர் காண்டீபன் அவர்களுக்கு சமர்ப்பணமாக இதை எழுகின்றேன். அவர் 2019.07.27 அன்று சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக இருந்த போது தான் எம்மை விட்டு பிரிந்தார்.

சரி இனி தொடருக்கு வருவோம், நாங்கள் அனைவரும் பிரதேச செயலகத்தில் ஒப்பமிட்டே எம் பணிகளை பார்வையிட்டு வந்தோம் ஒரு வலயமும் அப்பொழுது புதிய கட்டிடமாக கட்டப்படவில்லை. நாங்கள் அனைவரும் அக்காலத்தில் சைக்கிளில் தான் பயணிப்போம் பிற்காலத்தில் சமுர்த்தியே எங்களுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்த கதையும் உண்டு அதை பிறகு பார்ப்போம். அன்றைய காலத்தில் நான் என் வீட்டின் வெளியில் முதலில் நிற்பேன் என்னை அழைத்துச் செல்ல சிவபாத சேகரமும், யூட்டும் வருவார்கள் நாங்கள் விஜயா தியேட்டருக்கு முன்னுக்கு இருக்கும் சுகுமாரின் வீட்டில் நிற்போம் அங்கே வசந்தன் வந்த சேருவார். பின்னர் ஜவரும் ஒன்றாக சேர்ந்து பிரதேச செயலகம் செல்வோம் அப்படி சந்தோசமாக  இருந்த காலம் தான் அது.

புளியந்தீவு சமுர்த்தி வலயத்தில் அக்காலத்தில் செல்வி தமயந்தி அம்மணி அவர்கள் சமுர்த்தி முகாமையாளராக கடமையாற்றி வந்தார்.(தற்போது ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் சமுர்த்தி முகாமையாளார்). இவருக்கு பக்கபலமாக இவருடன் பணியாற்றிய சமுர்த்தி ஊக்குவிப்பாளர்கள் ரமேஸ்குமார்(தற்போது ஓய்வு), ஜெயதாசன்(நான்-தான், தற்போது மாவட்ட செயலகம் சமுர்த்தி பிரிவு), யூட் செல்வா இராஜரெட்ணம்(தற்போது கல்லடி சமுர்த்தி வலயம்), யூட்(தற்போது ஓய்வு), சுவாம்பிள்ளை(தற்போது இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வலயம்), அமரர்.காண்டீபன்(தற்போது எம்மை விட்டு பிரிந்து விட்டார்), இளங்கோ(தற்போது ஓய்வு), றீட்டா(தற்போது ஓய்வு), ரங்கநாயகி(தற்போது இருதயபுரம் சமுர்த்தி வலயம்), விஜிதா(தற்போது இருதயபுரம் சமுர்த்தி வலயம்), பியற்றிஸ்(தற்போது ஏறாவூர் சமுர்த்தி வலயம்), ரதினி(தற்போது பதுளை), லூயிஸ்(தற்போது ஓய்வு), சுபாஜினி(தற்போது மாவட்ட செயலகம் சமுர்த்தி பிரிவு), மிருனாளினி(தற்போது வவுனதீவு சமுர்த்தி வங்கி), யுனைதீன்(தற்போது ஆரையம்பதி பிரதேச செயலம் சமுர்த்தி பிரிவு), எமலின்( தற்போது புளியந்தீவு சமுர்த்தி வங்கி), அஜந்தினி(தற்போது கரவெட்டி சமுர்த்தி வலயம்), மோசிகவதனி(தற்போது ஓய்வு), உமாச்சந்திரன்(தற்போது மாவட்ட செயலக சமுர்த்தி கணக்காய்வு பிரிவு), கண்ணா(தற்போது ஓய்வு), சந்திரவதனி(தற்போது புளியந்தீவு சமுர்த்தி வங்கி) ஆகியோரைக் கொண்ட ஒரு பெரிய கள ஊக்குவிப்பாளர் களத்தில் பணியாற்ற தயாராகி இருந்தனர். 

முதல் பணி, முதல் கருத்திட்டம், எல்லாமே முதல் தான், புளியந்தீவு சமுர்த்தி வலயத்தை பொறுத்தமட்டில் எல்லாமே முதலாவதாக தான் கிடைத்து வந்ததாக வரலாறு கூறுகின்றன. ஏன் என்றால் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் இருந்த படியால் அதன் பார்வை மிக விரைவாக புளியந்தீவு சமுர்த்தி வலயத்தையே சார்ந்து நின்றது என்றே கூறலாம். புளியந்தீவு சமுர்த்தி வலயத்தில் தம் கன்னி கருத்திட்டமாக எதை செய்யலாம் என ஆராய்ந்த போது சகல சமுர்த்தி ஊக்குவிப்பாளரும் தத்தம் கிராமங்களுக்கு தரும் படி கோரி நின்றனர். முகாமையாளருக்கு பாரிய பிரச்சனையாக இருந்தது எல்லா சமுர்த்தி ஊக்குவிப்பாளரும் தாம் சிறந்த ஊக்குவிப்பாளர் ஆக வர வேண்டும் என்கின்ற நோக்கில் செயற்பட, முகாமையாளர் கள விஜயத்தினை மேற் கொண்டு இறுதியாக புளியந்தீவு கிழக்கு கிராமத்திற்கு பொதுக்கிணறு அமைப்போம் என முடிவெடுத்தார். சகலரும் ஒத்தழைக்குமாறு கூறி புளியந்தீவு கிழக்கு சமுர்த்தி செயலணியிடம் ஒப்பந்தம் ஒப்பமிட்டு வேலைகளை ஆரம்பிக்கும் படி புளியந்தீவு சமுர்த்தி ஊக்குவிப்பாளராகிய ரமேஸ்குமாரிடம் கையளிக்கப்பட்டது. அவரும் தம் கிராம சமுர்த்தி பயனாளிகளின் உதவியுடன் மிக குறுகிய காலத்தில் பணியை முடித்து பொதுக்கிணறு பொது மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

நான்கு வலயமும் தம் முதல் கருத்திட்டத்தை செய்து முடித்து மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. யார் அந்த 1998ம் ஆண்டிற்கான சிறந்த சமுர்த்தி ஊக்குவிப்பாளர் பல கேள்விகளுக்கு மத்தியில் நான்கு முகாமையாளர்களும் தகவலுக்காக காத்திருக்க நீங்களும் நாளை வரை காத்திருங்கள் 1998ம் ஆண்டிற்கான சிறந்த சமுர்த்தி ஊக்குவிப்பாளர் யார் என்பதை அறிய....

தொடரும்........


Comments