நானும் என் சமுர்த்தியும்..... (ஆறாம் பகுதி)

 நானும் என் சமுர்த்தியும்..... (ஆறாம் பகுதி)

நான் என் சார்ந்த விடயங்களை எழுதுகின்றேன், என்னுடன் பணியாற்றிய மட்டக்களப்பு மாவட்டத்தை சார்ந்த சமுர்த்தி ஊக்குவிப்பாளர்களுக்கும் பல விடயங்களை சொல்ல மனம் தூண்டும் எனவே எதையும் கருத்தில் கொள்ளாமல் என்னுடன் தொடர்பு கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தை சார்ந்த சமுர்த்தி ஊக்குவிப்பாளர்கள் தங்கள் எண்ணத்தை பதிவிடவும்......இனி பயணத்தின் தொடரை பார்ப்போம்.....

மறு நாள் காலை 3.00 மணிக்கு அன்றைய தினத்திற்குரிய மதிய உணவை எல்லோரும் இணைந்து சமைத்து கொண்டு காலையிலேயே புறப்பட்டோம். அன்று தான் நாம் மிக முக்கியமான வேலைத்திட்டங்களில் ஒன்றான கருத்திட்டங்கள் தொடர்பாக பார்வையிட செல்கிறோம் என கூறப்பட்டது. அம்பாந்தோட்டையில் மிகவும் பின் தங்கிய ஒரு கிராமத்திற்கான நீண்ட தூர பயணமாக அது இருந்தது. பல மணி நேரத்தின் பின் ஒரு கிராமத்தை சென்றடைந்தோம். காலையில் தொடங்கிய பயணம் மதியம் 3.00 மணிவரை பயணித்தோம். அனைவருக்கும் சரியான பசியும் களைப்புமாக இருந்தது இறங்கியவுடன் சாப்பிடுவதற்காக காலையில் சமைத்த உணவை எடுத்த போது அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. காலையில் 3.00 மணிக்கு சமைத்த  உணவு பழுதடைந்து இருந்தன என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஆளுக்காள் பசியால் முகத்தை பார்த்தோம். இனி என்ன செய்வது கொண்டு வந்த பிஸ்கெட்டுக்களை அசை போட்டுக் கொண்டு கருத்திட்டங்களை பார்வையிட சென்றோம். நடேசராசா ஜயா அவர்கள் விளக்கம் கூறிக் கொண்டே வந்தார். மிகப்பெரிய வடிகால் ஒன்று மக்களின் பங்களிப்புடன் மிக சிறப்பாக செய்து முடிக்கப்பட்டிருந்தது. புதிய வீடுகள் சங்க உறுப்பினர்களின் உதவியுடனும், பங்களிப்புடனும் செய்து முடிக்கப்பட்டிருந்தது, வீதிகள் செப்பனிடப்பட்டு மணல் வீதிகள் கிரவல் வீதிகளாக மக்கள் பங்களிப்புடன் செய்யப்பட்டிருந்தது. குளங்கள் தூர்வாரப்பட்டும் இருந்தது எதுவுமே முடியாது என்று கூறாமல் முடிவடைந்தே இருந்தது. மாடு, ஆடுகளின் பட்டிகள் திரும்பும் திசைகளில் காணப்பட்டது எல்லாம் மக்கள் பங்களிப்புடனேயே நடைபெற்றுள்ளது இனி அப்படித்தான் எல்லா வேலைகளும் நடைபெறும் அரசாங்கமே முழுப்பணத்தையும் தராது சமுர்த்தி பயனுகரியும் தம் பங்கிற்கு முதலீடு இட வேண்டும் இதை தான் நான் இணையதளம், முகநூல் வாயிலாக நேற்றைய தினம் தெரிவித்திருந்தேன். நேற்றைய தினம் (21.05.2021) ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் சௌபாக்கியா விஷேட வீட்டை அமைப்பதற்காக சமுர்த்தி திணைக்களம் வழங்கிய 600000 லட்சம் ரூபாயுடன் சமுர்த்தி பயனுகரி தன் பாரிய பங்களிப்பான  எட்டு லட்சத்திற்கு மேற்பட்ட தொகையை பங்களிப்பு செய்து வீட்டை அமைத்துள்ளார் இதை தான் அன்று தொடக்கம் இன்று வரை சமுர்த்தி சொல்லி வருவதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிக்றேன்.

 இவை அனைத்தையும் பார்த்து விட்டு வரும் போது நடேசராஜா ஜயா அவர்கள் குறிப்பிட்டார் இங்கு பார்த்த கருத்திட்டங்கள் போன்று தான் நீங்கள் மட்டக்களப்பில் செய்வீர்களோ? செய்ய மாட்டீர்களோ? எனக்கு தெரியாது ஆனால் நீங்கள் செய்து முடிக்கத்தான் வேணும் என்றார். இவைகளை பார்த்து தான் உங்கள் நியமனம் நிரந்தரமாக்கப்படும் எனவும் கூறியதுடன், தற்போது உங்கள் நான்கு சமுர்த்தி வலயத்திற்கும் ஒவ்வொரு கருத்திட்டம் தரப்பட்டுள்ளள்ளது. அதற்கான முன்மொழிவுகள் தங்களால் எங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவற்றை நீங்கள் சென்றவுடன் நடைமுறைப்படுத்துவதற்கான நிதி உடனடியாக விடுவிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டு, இக்கருத்திட்டத்தை கருத்தில் வைத்து உங்களில் இருந்து ஒரு சிறந்த சமுர்த்தி ஊக்குவிப்பாளரை சமுர்த்தி அதிகாரசபை இவ்வருடம் தெரிவு செய்யும் என ஒரு குண்டை தூக்கி போட்டார். அன்று முழுவதும் பஸ்சில் இதே கதையுடன் இரவு வேளை மட்டக்களப்பை அடைந்தோம்.

இதில் முக்கியமாக நான் நடேசராஜா ஜயா அவர்களை பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும் முதலில் அவருக்கு இருக்கும் மும்மொழி ஆற்றலை நாம் பாராட்டியே தீர வேண்டும் இக்கட்டுரையில் நான் மூன்றாம் பாகம் எழுதிய போது திரு.சீவகன் (அண்ணன்) அவர்கள் நடேசராஜா அவர்கள் கொழும்பு பல்கலைகழக மாணவன் என குறிப்பிட்டு எனக்கு சுட்டி காட்டி இருந்தார். யாரையும் மிக இலகுவாக கவர்ந்து இலுக்கும் வசீகர பேச்சு அவரிடம் இருந்ததை நான் கண்டு கொண்டேன். அவர் ஒரு விடயத்தை எங்கு தொடங்க வேண்டும் அதை எப்படி முடிக்க வேண்டும் என்கின்ற பக்கும் அவரிடம் தெளிவாக காணப்பட்டது. அவருக்கு இலங்கையில் தெரியாத இடங்களே இல்லை என்றே கூறலாம். மிக முக்கியமாக சமுர்த்தி பற்றி மிக ஆழமாக அறிந்து கொண்ட அவர் இதன் மூலம் மற்றவரும் பயன்பெற வேண்டும் என்கின்ற எண்ணக்கரு அவரிடம் மேலோங்கி இருந்தது. இதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மீது அவர் கொண்ட அக்கறையில் தான் மட்டக்களப்பு மாவட்டத்தில்  சமுர்த்தி திட்டம் மிளிர வேண்டும் என்கின்ற ஆதங்கமும் அவரிடம் அன்றே மேலாக காணப்பட்டது. அவரிடம் எல்லாம் சரி சமுர்த்தி பற்றியோ அல்லது தனக்கு தெரிந்த விடயத்தை பற்றியோ கலந்துரையாட தொடங்கினால் நேரத்தை மாத்திரம் கணிக்க மாட்டார். தான் கூறும் விடயத்தை முடித்த பின்பே நம்மை அவர் விடுவிப்பார்.  ஒரு சமயம் சமுர்த்தியின் ஆரம்பம் பற்றி கேட்டோம் இலங்கையில் சமுர்த்திக்கென பாராளுமன்றத்தில்  1995ம் ஆண்டு 30ம் இலக்க சமுர்த்தி அதிகார சபை உருவாக்கப்பட்டதாகவும்  இதன் குறிக்கோள் 'இளைஞர்கள்,பெண்கள் மற்றும் குறைந்த வருமான நிலையில் காணப்படும் குழுக்களை பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளில் இணைத்துக்கொள்ளல், சமூக நிலைப்பாட்டினை மேம்படுத்தல்; மற்றும் வறுமை நிலையினை ஒழித்தல்' என்பதாகும் இதனால் தான் உங்களுக்கு இந்த வேலை கிடைத்ததாக குறிப்பிட்டார். சமுர்த்தி திட்டம் 1995ல் ஆரம்பிக்கப்பட்டது ஆனால் உங்களுக்கு 1997ல் நியமனம் தந்து இது தற்போது மட்டக்களப்பில் செயற்படுவதாக குறிப்பிட்டு மிகுதியை இனிவரும் காலத்தில் பார்ப்போம் என்றார். இது தான் அவரின் வளர்ச்சியும் உயர்சியும் ஆகும். மட்டக்களப்பை வந்தடைந்தவுடன் 1998.04.29ம் மற்றும் 30ம் திகதிகளில் மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் இருநாள் பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது. வேலை கிடைத்து 17 மாதங்கள் கடந்த நிலையில் ஒரு அதிரடி மாற்றம் எம் கண் முன்னே நிகழ்ந்தது.

தொடரும்.....

Comments