நானும் என் சமுர்த்தியும்..... (ஜந்தாம் பகுதி)

காலம் நகர நகர 2000 ரூபாய் சம்பளம் அதிகரிக்கவும் இல்லை நிரந்தர நியமனம் வழங்குவதாகவும் இல்லை, மாதாந்த சம்பளமும் சரியான காலத்தில் கிடைப்பதாகவும் இல்லை.  நாங்கள்  எங்கள் சொந்த வேலையை முடிக்க ஒரு அலுவலகம் சென்றால் நீங்க எங்க வேலை செய்றீங்க என்று கேட்பார்கள் புதிதாக வேலை கிடைத்ததை நாங்களும் பெருமையாக கருதி சமுர்த்தியில் என்று கூறுவோம் ஆனால் அவர்கள் முகத்தை சுழித்தவாறு மறுமொழியாக சமுர்த்தியா? அந்த 2000 ரூபாய் வேலையா? அந்த O/L ரிசால்சோட கொடுத்த வேலையா? என மிகவும் வேதனை படும் அளவிற்கு பதில் தருவார்கள்.  இது என் வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில் நடந்த நிகழ்வு  அன்றே நினைத்தேன் இதற்கு ஒரு சரியான தருனம் வரும் என்று அதை என் வாழ்நாளில் இன்று 20.05.2021 இந்த நொடியில் எனக்கு தற்போது கிடைத்த செய்தியை  கண்டு அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன் இவ்விடயம் என்னுடன் பணியாற்றும்  உத்தியோகத்தர்களுக்கு புரியும். 

இதை மாற்றமடைய  என்ன செய்யலாம் என எண்ணி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து சமுர்த்தி ஊக்குவிப்பாளர்களையும் ஒன்றிணைத்து ஒரு சமுர்த்தி ஊக்குவிப்பாளர் சங்கம் அமைக்கலாம் என முடிவெடுத்தோம் இதற்காக மட்டக்களப்பு  பயனியர் வீதியில் அக்காலத்தில் அமைந்திருந்த விபுலானந்தா கல்வி நிலையத்தில் வைத்து சமுர்த்தி ஊக்குவிப்பாளர்  சங்கத்தை அமைத்தோம். அச்சங்கத்திற்கு வே.ரமேஸ்குமார் அவர்களை தலைவராக தெரிவு செய்தோம். எமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு  அப்போதைய அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் இச்சங்கத்தின் ஊடாக சென்று பல கோரிக்கைகளை முன் வைத்தோம் அனைவரும் செய்து தருவதாக உறுதி அளித்திருந்தனர்.  

 

இவ்வாறு எம் பதவியின் நிரந்தர நியமனத்துக்காக நாம் பல இடங்களில் அலைந்து திரிந்தோம். அப்போது தான் எனது திருமணமும் 1998.02.02 இடம்பெற்றது நானும் பெருமையாக எனது பெயருக்கு கீழ் சமுர்த்தி ஊக்குவிப்பாளர் என எனது திருமண அழைப்பிதழில் போட்டு பெருமைப்பட்டுக் கொண்டேன். யார் எம்மை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை நாம் அரச ஊழியர் என அரசாங்கம் எம்மை ஏற்றுக் கொண்டுள்ளது தானே எனும் இறுமாப்பில் இருந்தேன் இச்சமுர்த்தி என்னை வானலாவிற்கு உயர்த்தும் என்று மலையாக நம்பினேன். என் திருமணத்திற்கு  சக சமுர்த்தி ஊக்குவிப்பாளர்கள் சமுர்த்தி முகாமையாளர்கள் அனைவரும் வந்து எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். காலம் சுழற்சியின் வேகமாக உருண்டோட கருத்தரங்குகளும் நடைபெற்ற வண்ணம் தான் இருந்தன. 

இக்கால கட்டத்தில் தென் பகுதியில் சமுர்த்தி திட்டம் சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளதாகவும் அவர்களின் செயற்பாடுகளை பார்வையிட்டு இங்கும் சமுர்த்தி வேலைத்திட்டத்தை செயற்படுத்துவோம் என மாசிலாமணி நடடேசராஜா ஜயா அவர்கள் தெரிவித்திருந்தார். தென் பகுதிக்கு செல்ல இரண்டு பஸ் வண்டிகளில் மண்முனை வடக்கு சமுர்த்தி ஊக்குவிப்பாளர்களான நாங்கள் தயாராகி சமைப்பதற்கான ஆயத்தங்களுடன் முதல் சுற்றுலாவாக எண்ணி நடேசராஜா ஜயா அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர், சமுர்த்தி ஆணையாளருடன் புறப்பட்டோம். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள   திசமகாராமை பிரதேச செயலகத்திற்கு சென்று அங்குள்ள சமுர்த்தி மக்களின் சிறுகுழு கூட்டம் மற்றும் சமுர்த்தி சங்கங்களின் கூட்டம் எவ்வாறு நடாத்துவது அக் கூட்டத்தை சங்க தலைவர் முன்னின்று நடாத்தவதும் செயலாளர் கூட்ட ஏற்பாடுகளை செய்வதும் பொருளாளர் வாராந்த சேமிப்பை பெற்றுக் கொள்வதுமாக இருந்தது. இவை அனைத்தையும் அக்கிராமத்தின் சமுர்த்தி ஊக்குவிப்பாளர் மேற்பார்வை செய்வதையும் நடேசராஜா ஜயா எங்களுக்கு சுட்டிக்காட்டினார். இச்சங்க கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஆடல், பாடல்களை அவர்கள் செயற்படுத்திய விதம், மாதாத்தில் இரண்டு முறை கூட்டப்படும் கூட்டத்தில் அங்கத்தவரிடையே சேமிக்கப்படும் பணத்தில் கடன் வழங்குதல் சங்க அங்கத்தவர்களில் யாரவது ஒருவருக்கு இறப்பு நிகழும் சந்தர்பத்தில்  அவர்களின் வீடுகளுக்கு சென்று துக்கம் விசாரித்தல் போன்றவற்றை தாங்கள் இந்த சமுர்த்தி மூலம் செய்வதாக அவர்கள் எங்களிடம் தெரிவித்தனர். அன்று அவர்களுடன் கலந்தரையாடி அன்றைய நாளை கழித்தோம். 

மறு நாள் காலையில் இன்னுமொரு கிராமத்தை பார்க்க வேண்டும் சற்று தூரம் போக வேண்டும் எல்லோரும் நேரத்திற்கு தூங்குமாறு கூறப்பட்டது. ஆனால் இவர்கள் யாரும் தூங்குவதாக இல்லை இரவு முழுவதும் ஆடல் பாடல்கள் தான் முதல் சுற்றுலாவாயிற்றே அன்றைய தினம் இனிமையாக கடந்தது........

தொடரும்...........

Comments