நானும் என் சமுர்த்தியும்..... (நான்காம் பகுதி)
ஒவ்வொரு சமுர்த்தி வலயத்திற்கும் ஒரு அலுவலகமும் அமைப்பதுடன் இவை இனி வரும் காலத்தில் சமுர்த்தி வங்கியாகவும் செயற்பட வேண்டும் என்பதற்காக கட்டிடங்கள் அமைக்கப்பதற்கும் பழைய கட்டிடங்களை திருத்தி சமுர்த்தி வலயங்களை உருவாக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களுக்கும் 29 சமுர்த்தி வலயங்கள் அமையப்படவிருந்தன. நான் அறிந்த மட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயகத்திலேயே முதல் முதல் இச்செயற்பாட்டை ஆரம்பிக்க அமைய இருக்கும் இடங்கள் கட்டிடங்கள் பரிசீலனை செய்யப்பட்டது. கல்லடி சமுர்த்தி வலயத்திற்கு கல்லடி இராணுவ முகாமிற்கு அருகாமையில் புதிய கட்டிடமாக அமைக்க ஓர் இடமும், இருதயபுரம் சமுர்த்தி வலயத்திற்கு இருதயபுரம் சந்தைக்கு அருகாமையில் புதிய கட்டிடமாக அமைக்க ஓர் இடமும், இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வலயத்திற்கு இருதயபுரம் கிழக்கு பெற்றோலிய விடுதிக்கு அருகாமையில் புதிய கட்டிடமாக அமைக்க ஓர் இடமும், புளியந்தீவு சமுர்த்தி வலயத்திற்கு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தை திருத்தி அமைப்பதற்காக ஓர் இடமும் தெரிவு செய்யப்பட்டது. இவை அனைத்தும் புதிய சமுர்த்தி திட்டத்தின் முக்கிய செயற்பாடான மக்கள் பங்களிப்பை பிரதானமாக கொண்டே செயற்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதற்காக ஓர் புதிய சமுர்த்தி செயலணியை கிராமங்களில் உருவாக்கி செயற்படுத்தப்பட் வேண்டும் எனவும் கூறப்பட்டது. இவை அனைத்தும் நடைபெறும் வரை அனைவரும் பிரதேச செயலகங்களில் ஒப்பமிட்டு பணி புரியுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
இதை விட முதல் தடவையாக ஒவ்வொரு வலயத்திற்கும் ஒரு கருத்திட்டத்தினை செயற்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டது அதற்கான முன்மொழிவுகளை கூடிய விரைவில் சமர்ப்பிக்குமாறும் ஒவ்வொரு சமுர்த்தி முகாமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. ஒருபுறம் இச்செயற்பாடு இடம்பெற மறுபுறம் சிறு குழுக்களின் பணிகளும் முன்னேடுக்கப்பட்டது.
சிறு குழுக்களை உருவாக்கும் பணிகள் கிராமம் தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்க நானும் பல கிராமங்களுக்கு சென்று சிறு குழுக்களை அமைக்க நண்பர்களுக்கு உதவி வந்தேன். சிறு குழுக்கள் அமைக்கப்பட்டு சேமிப்புக்களை சிறு குழுவின் பொருளாளர் சேமிப்பு செய்து வந்தார். மறுபுறம் வறுமை நிவாரணம் பெற்று வருபவர்களுக்கு சமுர்த்தி நிவாரணம் என புதிய முத்திரை ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டு கூட்டுறவு சங்க கடைகளின் ஊடாக பொருட்களை பெறுவதற்கு அட்டைகளை நாம் வழங்கி வந்தோம். எனது குடும்பத்திற்கும் நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது எனக்கு சமுர்த்தி ஊக்குவிப்பாளர் நியமனம் கிடைத்தவுடன் என் குடும்பத்திற்கான நிவாரணம் நிறுத்தப்பட்டது. இச்சமுர்த்தி நிவாரனத்தில் புதிதாக சமுர்த்தி சமூக காப்புறுதி திட்டமும், வீட்டு லொட்றி திட்டமும், கட்டாய சேமிப்பு திட்டமும் இச்சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் அதற்கான பணிகளை செய்யும்படி எமக்கு அறிவுருத்தப்பட்டது. இதில் முக்கியமான ஒரு விடயத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும் சமுர்த்தி பயனாளி எனும் அழகான வார்த்தை அப்போது தான் அறிமுகமாகி இன்று வரைக்கும் சமுர்த்தி பயனாளி எனும் அழகான வார்த்தை பாவனையில் உள்ளதை கூறியே ஆக வேண்டும்.
இந்த சமூக காப்புறுதி திட்டத்திற்கென அரசினால் வழங்கப்படும் சமுர்த்தி நிவாரன அட்டையில் இருந்து 45 ரூபாய் மாதாந்தம் அறவிடப்பட்டு அக்குடும்பத்தில் இறப்பு, பிறப்பு, திருமணம், நோய் போன்றவற்றிக்கு இழப்பீடுகள் வழங்குவதற்கும் வீட்டு லொட்டறி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு மாதாந்தம் 10 ரூபாய் சமுர்த்தி நிவாரன அட்டையில அறவிடப்பட்டு வீடு அமைப்பதற்காக ஒரு தொகை பணம் வழங்குவதற்கும் கட்டாய சேமிப்பாக அக் குடும்பம் சேமிக்க வேண்டும் என்பதற்காக சமுர்த்தி நிவாரன அட்டையில் இருந்து ஒரு தொகை பணமும் அறவிடப்பட்டு மக்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் சமுர்த்தி திட்டமாக செயற்பட்டது. அத்துடன்; நிவாரணத்தை அதிகரிக்க செய்வதற்கான பணிகளையும் செய்யும் படி எமக்கு அறிவுருத்தப்பட்டது. நாடுபூராவும் காப்புறுதி நிறுவனங்கள் மக்களிடம் பணத்தை அறவிட்டு இழப்பீடை வழங்கும் போது சமுர்த்தி திட்டத்தில் மாத்திரம் அரசே அப்பணத்தை மக்களுக்காக செலுத்தி இழப்பீடடிற்கான தொகையை வழங்கி வந்தது இச்செயற்பாடு தற்போதும் நடைமுறையில் உள்ளது இவ்விடயம் தொடர்பாக தெளிவாகவும் விரிவாகவும் பிற்காலத்தில் பார்ப்போம்.
இதை கூற மறந்து விட்டேன் வேலை கிடைத்து 1997 பெப்ரவரி மாதத்தில் இது நடைபெற்றது. முதலாவது மாதம் முடிவடைந்து விட்டது 30ம் திகதியும் கடந்து விட்டது சம்பளம் கிடைக்கவில்லை. புதிய நியமனம் தானே வரும் என நினைத்து பணிகளை செய்து வந்தோம். ஒரு நாள் காலையில் ஒப்பமிடும் போது என் நண்பர் ஒருவர் சொன்னார் மகிழ்ச்சியான செய்தி நாளை முதல் மாத சம்பளம் வழங்கப்படவுள்ளதாக கூறினார். தகவல் மகிழ்ச்சியாக இருந்தது மறு நாள் சம்பளம் கிடைத்தது. ஒரு அரச சேவையாளனாக இருந்து முதல் சம்பளம் பெறுவதில் வரும் மகிழ்ச்சியை அன்று தான் என் வாழ்வில் கண்டேன். அக்காலத்தில் நான் சொந்தமாக ஒரு வீடியோ கடையையே நடத்தி வந்தேன் நான் என் கடையில் பணிபுரிபவருக்கு 3000 ரூபாய் மாத சம்பளம் வழங்கி வந்தேன் ஆனால் நான் 2000 ரூபாய் சம்பளம் பெற்றேன். என் முதல் சம்பளமாக 1586 ரூபாய் என் கைகளுக்கு கிடைத்ததும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன் எவ்வளவு தான் பணத்தை நாம் கண்டிருந்தாலும் அரச சேவை மூலம் எனக்கு கிடைத்த முதல் சம்பளத்தை இன்றும் நான் என் மனதில் எண்ணி மகிழ்கின்றேன். அதை என் தந்தையாரிடம் கொடுத்து மகிழ்ச்சியடைந்தேன்.
1997ம் ஆண்டு மே 31 புகைத்தல் எதிர்ப்பு வாரமாம் கொடி விற்பனை செய்வதற்காக உண்டியலை வீதிகளில் குலுக்கி பணம் சேகரிக்கும் படி கூறப்பட்டது. எனக்கு வெட்கமாகவும் சங்கடமாகவும் இருந்தது. இருப்பினும் இதை நான் பெரிதாக கருதாமல் ஏனோ தானோ என்று சேமிப்பில் ஈடுபட்டேன் மொத்தம் 225 ரூபாக்களை சேமித்து கொடுத்தேன். பல விமர்சனங்களை எனது முகாமையாளர் என் மீது வைத்தார். நான் அதை பொருட்படுத்தவில்லை ஆனால் பிற்காலத்தில் இப்புகைத்தல் எதிர்ப்பு வாரமே மிகவும் போட்டி மிக்கதாக அமையும் என நான் எதிர்பாக்கவும் இல்லை எனக்கு பல விருதுகளையும் பெற்று தரும் என எண்ணவும் இல்லை. அவை பற்றி பின்பு பார்ப்போம்.
தொடரும்..........
Comments
Post a Comment