நானும் என் சமுர்த்தியும்..... (முன்றாம் பகுதி)

 நானும் என் சமுர்த்தியும்..... (முன்றாம் பகுதி)

குறிப்பு - இரண்டாம் பகுதியில் ஒரு திருத்தம் இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வங்கிக்கு அப்போது திருமதி.கீதா கணகசிங்கம் அவர்கள் கடமையாற்றிதாக குறிப்பிட்டிருந்தேன் அவர் அல்ல செல்வி குமுதினி கடமையாற்றி இருந்ததாக இக்கட்டுரையை வாசித்த என் நண்பர் பிரபா தெரிவித்திருந்தார் நன்றி பிரபா தங்களின் தகவல்களுக்கு.....



               மாசிலாமணி நடேசராஜா

பிரதேச செயலகத்தில் ஒப்பமிடுமாறு எமக்கு பணிக்கப்பட்டது இதன் போது எமக்கான பயிற்சிகளும்  வழங்கப்பட்டு கொண்டே இருந்தது பயிற்சி கருத்தரங்குகளை பலரும் வந்து பல விடயங்களை கூறி கொண்டே சென்றனர். 
இருந்த போதிலும் 1997.08.02ம் திகதியன்று மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பிரிவால் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் நடைபெற்ற பயிற்சி கருத்தரங்கை நாங்கள் யாரும் மறந்திருக்க மாட்டோம். அன்றைய தினம் ஒரே பரபரப்பு யாரோ நடேசராஜா என்பவர் வருவதாகவும் மிகவும் கண்டிப்பானவர் எனவும் கதைக்கப்பட்டது. அவரின் வரவை எதிர்பார்ந்த எமக்கு அவரின் வரவும் சரியாக தான் இருந்தது கம்பீரமான தோற்றத்தை கொண்ட அவரைத்தான்  நான்  முதல் நாள் நியமனம் வழங்கும் போது மிகவும் பரபரப்பாக காணப்பட்ட மனிதர் என்று குறிப்பிட்டிருந்தேன். அவர் கம்பீரமான குரலில் பேச ஆரம்பித்தார் இச்சமுர்த்தி திட்டமானது பங்களாதேசை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாகவும் ஜவர் கொண்ட குழுக்களை அமைத்து அவர்களிடையே சேமிப்பை ஊக்கப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கிகளை அமைத்து கடன்கள் வழங்குவதே இதன் பிரதான நோக்கம் எனவே நீங்கள் இதற்காகா அர்பனிப்புடன் சேவையாற்ற வேண்டும் என கூறினார். என்னடா புதுசா இருக்கு சிறு குழு வங்கி என்றெல்லாம் சொல்றாறே என ஒருவருக் கொருவர் முனுமுனுத்துக் கொண்டோம்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் இச்செயற்பாட்டை பாங்களாதேசில் ஒரு வங்கியாளராக தன் பணியை தொடங்கிய முகமது யூனுஸ் 1976ம் ஆண்டு வறிய மக்களை குழுவாக அமைத்து கிராமிய வங்கிகளை உருவாக்கி அவர்களுக்கு கல்விசார் கடன்கள், வீட்டுக்கடன்கள், மீன்பிடிகடன்கள், விவசாய கடன்கள், கைத்தறி கடன்கள் என பல வகை கடன்களை பெண்களுக்கு வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி உயர்த்தினார் இதற்காக இவருக்கு 2006ம் ஆண்டு அமைதி மற்றும் கிராமிய வங்கிகளை மேம்படுத்தியதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதை மையப்படுத்தியே ஏற்கனவே இலங்கையில் காணப்பட்ட வறிய மக்களின் நிவாரன வேலைத்திட்டத்தை சமுர்த்தி எனும் நாமத்துடன் புதிய பரினாமத்துடன் இலங்கைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டு உங்களுக்கும் சமுர்த்தி ஊக்குவிப்பாளர் எனும் நியமனமும் வழங்கப்பட்டதாக கூறினார்.

 எனவே உங்கள் கிராமங்களை நீங்கள் அறிவீர்கள் எனவே சிறப்பான சேவையை பெற்றுக் கொள்ளவே இவ்வரசாங்கம் உங்களை நியமித்துள்ளது. நீங்கள் உங்கள்  கிராமங்களுக்கு சென்று ஐவரைக் கொண்ட சிறு குழுக்களை முதலில் அமைத்து அவர்களிடையே வாரந்தோரும் சேமிப்பு ஊக்கப்படுத்தி சேமிப்பை செய்து 8 தொடக்கம் 12 சிறுகுழுக்களை  ஒரு சங்கங்களாக ஸ்தாபித்து அதில் தலைவர், செயலாளர், பொருளாளர் என ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு குழு ரீதியாக தங்களால் சேமிக்கப்படும் பணத்தை நீங்களே பெற்றுக் கொண்டு அதற்கான பற்றுச்சீட்டை வழங்கி விட்டு அப்பணத்தை சமுர்த்தி வங்கியில் வாராந்தம் வைப்பிலிட வேண்டும் எனவும் கூறினார்.

 இது என்ன புது விதமான நடைமுறை என எண்ணியபடி பலரும் கலந்துரையாடினோம். அன்று தான் எமக்கு எம் பணி பற்றி அறியக் கூடியதாக இருந்தது. கண்டிப்பானவராக இருந்தாலும் எங்களுடன் அன்பாக பேசினார். தான் வாழைச்சேனையை சேர்ந்தவர் எனவும் ஏற்கனவே சிறைச்சாலை அத்தியேட்சகராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்று விட்டு இச்சமுர்த்தி திட்டத்திற்காக ஜனாதிபதியால் வடகிழக்கு மற்றும் மலையக பகுதிக்கு தன்னை நியமித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தனது பெயர் மாசிலாமணி நடேசராஜா எனவும் குறிப்பிட்டு தன் அறிமுகத்தை மேற் கொண்டார். அதில் பலருக்கு அவர் நியமனம் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும் இதை பலரும் என்னிடம் அவ்விடத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

  உடனடியாக குழுக்களை அமைக்கும் படி தலைமைய முகாமையாளர் ஊடாக எமது வலய முகாமையாளரால் எமக்கு அறிவுருத்தப்பட்டது. நானும் மற்றைய சமுர்த்தி ஊக்குவிப்பாளருமான செல்வி.ரதினி இராசதுரையும் தாமரைக்கேணி கிராமத்தில் வறிய நிவாரணம் பெறும் மக்களை தாமரைக்கேணி வீதியில் இருந்த சக்தி கல்வி நிலையத்தில் ஒன்று கூடச் செய்து குழுக்கள் அமைத்தோம்  கூடுதலாக வசதிபடைத்தவர்கள் காணப்பட்ட அக்கிராமத்தில் அக்காலத்தில் 56 குடும்பங்களே வறுமை நிவாரணம் பெற்று வந்த குடும்பங்களாகும்.  8 தொடக்கம் 12 சிறு குழுக்களை கொண்ட இரு சங்கத்தையே எங்களால் நிறுவ முடிந்தது. அதற்கமைய இக்கிராமத்தில்  இரண்டு சங்கத்தை அமைத்து தலைவர், செயலாளர், பொருளாலர் என நியமனங்களும் வழங்கப்பட்டது. சிறு குழுக்களுக்கு பெயர் வைத்து வாராந்தம் கூட்டம் கூட்டப்பட வேண்டும் இதற்கும் தலைவர். செயலாளர். பொருளாலர் என நியமிக்கப்பட்டு வாராந்தம் ஒருவரிடம் இருந்து 10 ரூபாய் சேகரிக்கப்பட்டு 50 ரூபாவை வைப்பிலிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தொடரும்.........


Comments