நானும் என் சமுர்த்தியும்..... (இரண்டாம் பகுதி)

நான் மறுநாள் 08.01.1997 புதன் கிழமை அன்று நியமன கடிதத்துடன் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தை சைக்கிளில் சென்று அடைந்த போது ஒரே பயம் எப்படி இதை நகர்த்துவது என்று. மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் உள்ள 48 கிராமசேவகர் பிரிவிற்கும் இரண்டு பேர் எனும் விகிதத்தில் கிட்டத்தட்ட 90 பேர் அவ்வளாகத்தில் நின்று கொண்டிருந்தோம் இருப்பதற்கு கூட இடமில்லை. பிரதேச செயலக அக்கட்டிடத்திற்கு நடுவில் உள்ள திறந்த வெளியில் அனைவரும் நின்று கொண்டிருந்தோம். எனக்கு தெரிந்தவர்களை தேடினேன் என் கண்ணில் முதல் பட்டது என் பாடசாலை நண்பனான நித்தியானந்த பவான் தான் அவனிடம் கதையை கொடுத்த போது மற்றுமொரு பாடசாலை நண்பன் குமனனை,  மற்றும் சிறி ஆகியோரை அங்கு சந்தித்தேன் ஒருவாறு  இவர்களை கண்ட பின் ஒரு தெம்பு. சற்று தொலைவில் இன்னுமொரு நண்பன் வசந்தனைக் கண்டேன் நால்வரும் உரையாடிக் கொண்டிருந்த போது பிரதேச செயலாளர் அழைப்பதாக கூறினார்கள்.  அன்றைய காலகட்டத்தில் மண்முனை வடக்கு  பிரதேச செயலாளராக திரு.புண்ணியமூர்த்தி ஐயா அவர்களே கடமையாற்றி இருந்தார் அவர் எங்களுக்கு வாழ்த்துக்களை கூறி தங்கள் பணிகளை மேற் கொள்ளுமாறு கூறினார்.

  48 கிராம சேவகர் பிரிவையும் நான்கு வலயமாக பிரிக்கப்படவுள்ளதாகவும் அவை நான்கிற்கும் நான்கு முகாமையாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் இவர்களை மேற்பார்வை செய்ய ஒரு பெரிய முகாமையாளர் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வந்தது. எல்லோர் மனதிலும் என்ன வேலை எப்படி வேலை எவ்வாறு செய்வது ஒன்றுமே புரிய வில்லை ஒருவருக்கொருவர் கதைத்தபடி நின்று கொண்டிருந்தோம்.

புதிதாக சிலர் என்னுடன் கதைத்தனர் குறிப்பாக அன்மையில் அமரத்துவம் அடைந்த காண்டீபன் அவரை எனக்கு ஏற்கனவே தெரியும் அவரின் நண்பர்  யூட் செல்வா இராஜரெட்னம், யூட், சுகுமார், ரவி, சிவா, சுரேஸ் போன்றோர் இவர்களை பற்றி வரும் காலத்தில் பார்ப்போம் ஒவ்வொருவரும் என் நண்பர்களாயினர்.

அன்றைய கால கட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட முதல் சமுர்த்தி ஆணையாளராக இரா.நெடுஞ்செழியன் ஐயா அவர்கள் கடமையாற்றி வந்தார். புதிதாக மண்முனை வடக்கு பிரதேச செயலத்தின் முதல் சமுர்த்தி தலைமையக முகாமையாளராக திருமதி.மாலா நெடுஞ்செழியன் அம்மணி அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார் இது அனைத்தும் சம்பவம் அல்ல சரித்திரங்கள் அனைவரும் புரட்டி பார்க்க வேண்டியது. எந்த விடயத்தை யார் செய்தாலும் அதை முதலில் செயற்படுத்துபவர் தான் சரித்திர வரலாற்று சாதனையாளர். எனவே முதல் முதலில் என இதில் குறிப்பிடப்படுவோர் அனைவரும் வரலாற்று பொக்கிசங்களே.

மண்முனை வடக்கு பிரதேச செயலகம் நான்கு சமுர்த்தி வலயங்களாக பிரிக்கப்பட்டது. முதலாவது சமுர்த்தி வலயமாக கல்லடி சமுர்த்தி வலயமும் இதற்கு சமுர்த்தி முகாமையாளராக திருமதி பத்மா ஜெயராஜா அம்மணி அவர்களும், இரண்டவது சமுர்த்தி வலயமாக இருதயபுரம் சமுர்த்தி வலயமும் இதற்கு சமுர்த்தி முகாமையாளராக செல்வி. ஜெயஸ்ரீ அம்மணி அவர்களும், மூன்றாவது சமுர்த்தி வலயமாக இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வலயமும் இதற்கு சமுர்த்தி முகாமையாளராக செல்வி குமுதினி அம்மணி அவர்களும், நான்காவது சமுர்த்தி வலயமாக புளிந்தீவு சமுர்த்தி வலயமும் இதற்கு சமுர்த்தி முகாமையாளராக செல்வி.தமயந்தி அம்மணி அவர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர் முக்கிய விடயம் என்னவென்றால் நியமிக்கப்பட்ட தலைமையக முகாமையாளர் மற்றும் முகாமையாளர்கள் அனைவரும் பெண்களாகவே மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். எனது தாமரைக்கேணி கிராமம் நான்காவது வலயமான புளியந்தீவுக்கு சமுர்த்தி வலயத்திற்கு உட்பட்டதாக எமக்கு அறிவிக்கப்பட்டது. 

தொடரும்.........


Comments