நானும் என் சமுர்த்தியும் (14ம் தொடர்)......

 நானும் என் சமுர்த்தியும் (14ம் தொடர்)......

அதே போல் எமது புளியந்தீவு சமுர்த்தி வலயத்தை வங்கி பயிற்சி நெறிக்காக சமனலவெவவிற்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தது. சமனலவெவவை சென்றடைந்து மறு நாள் காலையில் பயிற்சிக்காக நாம் ஒன்று கூடிய போது இன்னும் சில இடங்களில் இருந்து பலரும் சமுர்த்தி வங்கி பயிற்சிக்காக வந்திருந்தனர். இதிலும் ஒரு பெருமை என்னவென்றால் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக முதலில் சமுர்த்தி வங்கி பயிற்சிக்கு அழைக்கப்பட்டிருந்தது மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தை சேர்ந்த புளியந்தீவு சமுர்த்தி வலயம் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடமாகும். அங்கு நடேசராஜா ஐயா  அவர்களை கண்டோம் பார்த்ததும் பயமாக இருந்தது. ஏதும் கேட்டு விடுவாரோ என்று அவர் சிங்களத்தில் நடக்கும் பயிற்சிநெறியை தமிழில் மொழி பெயர்பாளராக வந்திருந்தார். அக்கால கட்டத்தில் வங்கி நடவடிக்கைகளில் மிகவும் பிரசித்தி பெற்ற சமுர்த்தி வங்கிப்பிரிவின் பணிப்பாளர் திரு.லியன்வெல சேர் அவர்கள் அவருக்கே உரிய பாணியில் பயிற்சிநெறியை ஆரம்பித்தார்.

இலங்கையில் பல வங்கிகள் காணப்படுகின்றன ஆனால் சமுர்த்தி வங்கி மாத்திரமே சமுர்த்தி பயனாளியை தலைவராக கொண்டு செயற்பட இருக்கும் ஒரு வங்கியாக திகழவுள்ளதாகவும், இது ஏழைகளின் வங்கி, இவ்வங்கி ஒரு காலத்தில் அரச வங்கிகளுடன் போட்டி போடும் ஒரு வங்கியாக திகழப்போகின்றது. நீங்கள் எல்லாம் அப்போது சமுர்த்தி வங்கியில் பணி செய்வதற்கே திண்டாடுவீர்கள் என் குறிப்பிட்டார். இவ்வங்கியிலும் பங்கு கணக்கு, அங்கத்தவர்  சேமிப்பு கணக்கு, சிறுவர் கணக்கு, பெண்களுக்கான கணக்கு என பல வகையான கணக்குகளை ஆரம்பிக்க முடியும். எதிர் காலத்தில் மற்றைய வங்கிகள் போன்று கடன் வசதிகளும் செய்து கொடுக்கப்படும் இது பற்றி உங்களுக்கு விரிவாக சொல்லித்தரப்படும் என்றார்.

 இதன் பின் விரிவுரைக்கு வந்த சமுர்த்தி வங்கிப்பிரிவின் பிரதிப்பணிப்பாளர் திரு.குணரெட்ன அவர்கள் தமது உரையில் கிராமங்களில் இருந்து ஒரு சங்க தலைவர் என்கின்ற ரீதியில் ஒரு வங்கியில் 15 கட்டுப்பாட்டு உறுப்பினர்களை கொண்ட வங்கிச்சங்கம் உருவாக்கப்பட வேண்டும். ஒரு சாதாரண ஏழை மகனே சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டு சபை தலைவராக செயற்படுவார் என கூறி, சமுர்த்தி வங்கி முகாமையாளர் இக்கட்டுப்பாட்டு சபைக்கு செயலாளராக செயற்படுவார் என குறிப்பிட்டார். இனி கடன் பற்றி பார்ப்போம் என கூறி கடன் பெறுவது பற்றி விளக்கம் வழங்கினார். சமுர்த்தி வங்கியில் கடன் பெற விரும்புவோர் முதலில்  சமுர்த்தி சங்கங்களில் இனைந்து ஐவரைக் கொண்ட குழுவில் இனைந்து கொள்ள வேண்டும். பின் சமுர்த்தி வங்கியூடாக பங்கு, அங்கத்தவர், குழு கணக்குகளை திறந்து குழுவில் உள்ளவர்களை பிணையாக வைப்பதன் மூலம் கடன் பெற முடியும் என்றார். ஒரு நபரின் பங்கில் இருக்கும் தொகையைப் போன்று 10 மடங்கு கடனை அந்நபர்  பெற முடியும் எனவும் இதற்காக குழுவில் கடன் பெறும் தொகைக்கு  25% இருக்க வேண்டும் எனவும் கூறினார். கடன் பெறுபவர் பங்கு கணக்குகளை ஆரம்பித்து மூன்று மாதத்தின் பின்னரே கடன் பெற முடியும் எனவும் குறிப்பிடப்பட்ட அவர் எந்த வங்கிகளிலும் இவ்வாறான குழுப்பிணையில் கடன் வழங்குவது இல்லை சமுர்த்தி வங்கியில் தான் இது முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர் எந்த வங்கியிலும் இல்லாதவாறு  வட்டி வீதம் கடனின் இறுதி மீதிக்கே கணிக்கப்படும் எனவும் இது குறைந்து செல்லும் வட்டி வீதமாக அமையும் எனவும் கூறி அன்றைய கருத்தரங்கை முடிவுக்கு கொண்டு வந்தார்.

 அன்றைய இரவு நேரம் நாங்கள் நடேசராசா சேரை சந்திக்க சென்றோம் சற்று பயத்துடன் கூடிய நடுக்கத்துடன் தான் சென்றோம். என்ன எப்படி போகுது வங்கி நடவடிக்கை விட்டுப்போட்டு போகச் சொல்லுதா? அல்லாட்டி இழுத்து போகலாம் என்டு சொல்லுதா? என்று வேடிக்கையாக கேட்டுக் கொண்டு இத்திட்டத்தின் வெற்றி உங்கள் கைகளிலே தான் தங்கியுள்ளது என வாழ்த்தும் பயமும் ஊட்டி நாளைய கருத்தரங்கில் சந்திப்போம் என்றார்.

மறு நாள் காலையில் பயிற்சி ஆரம்பமானது அன்றைய நாளில் வங்கி நடவடிக்கை பற்றி ஆராயப்பட்டது. முகாமையாளரின் கடமை என்ன?, உதவி முகாமையாளரின் கடமை என்ன?, காசாளரின் பணி என்ன?, கணக்கு எழுதுனரின் பணி என்ன?, கடன் லிகிதரின் பணி என்ன?, புத்தக காப்பாளரின் பணி என்ன? என்று மிகவும் விளக்கமாக கூறப்பட்டது. அன்றை நாள் கணக்குகளை எல்லாம் அன்றைய நாளே முடிக்கப்பட வேண்டும், என்றும் முடிக்காமல் யாரும் வீடு செல்ல முடியாது எனவும் குறிப்பிட்டார். அத்துடன் மதிய உணவுக்கு வந்த நாங்கள் இது என்னடா பெரிய வேலையா வரப்போகுதே பயமாக இருப்பதாக ஆளுக்காள் கூறிக் கொண்டோம்.  மதியத்திற்கு பின் பயிற்சி மீண்டும் தொடங்கியது  இதன் போது வங்கிகள் காலை 8.30 திறக்கப்பட வேண்டும் எனவும், முதலில் பங்கு, அங்கத்தவர் மற்றும் குழுக்கணக்குகளை ஆரம்பிக்கும் படி கூறப்பட்டது. தற்போது கடன் வழங்கும் வேலையை தற்காலிகமாக நிறுத்தி விட்டு வங்கியின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறும், வங்கிகளுக்கான உபகரணங்கள் கொள்வணவு செய்ய நிதி கூடிய விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறியதுடன் மட்டக்களப்பில் இருந்து முதல் தடவையாக வங்கி பயிற்சிக்கு வந்த எம்மை விசேடமாக வாழ்த்து கூறியதுடன் இனி வரும் காலத்தில் வங்கி திறக்க நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு கூறி பயிற்சியை முடித்துக் கொண்டனர்.

 வங்கி பயிற்சியை முதலில் முடித்த என்கின்ற பெருமையில் நாம் மட்டக்களப்பை வந்தடைந்தோம். இதைத் தொடர்ந்து இருதயபுரம் சமுர்த்தி வங்கி சார்பாக சமுர்த்தி முகாமையாளர் ரவிச்சந்திரன், சமுர்த்தி உத்தியோகத்தர்களான நித்தியானந்தபவான், சிவநாதன், மணிவண்ணன், பிருந்தா, சாருலதா ஆகியோரும்.  இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வங்கி சார்பாக சமுர்த்தி முகாமையாளர் கீதா கணகசிங்கம், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான தசேந்திரன், சுகுமார், வசந்தன், செல்விபுஸ்பா, மதலேனாமேரி ஆகியோரும் கல்லடி சமுர்த்தி வங்கி சார்பாக பத்மா ஜெயராஜ் சமுர்த்தி முகாமையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர்களான உமாசங்கர், புஸ்பலாதா, யோகேஸ்வரி, சுதர்சினி, குளோடி ஸ்பெக் ஆகியோர் மண்மனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள வங்கி சார்பாக் பயிற்சிக்கு சென்று வந்திருந்தனர். 

 தொடரும்.....


சமுர்த்தி வங்கிக்கான பயிற்சிக்கு சென்ற போது எடுக்ப்பட்ட புகைப்படம் இடமிருந்து வலமாக பத்மா முகாமையாளரின் தயார், பத்மா ஜெயராஜா-சமுர்த்தி முகாமையாளர், உமாசங்கர்(SDO), ரவிச்சந்திரன்-சமுர்த்தி முகாமையாளர், மணிவண்ணன்(SDO), வசந்தன்(SDO), குளோடி ஸ்பெக்(SDO), சுதர்சினி(SDO), சாருலதா(SDO), பிருந்தா(SDO), நித்தியானந்தபவான்(SDO)  ஆகியோரை படத்தில் காணலாம்.


சமுர்த்தி வங்கிக்கான பயிற்சிக்கு சென்ற போது பிற மாவட்டங்களில் இருந்து வந்த சக சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் இதில் வசந்தன், மணிவண்ணன், உமாசங்கர் ஆகியோரை காணமுடியும்.

சமுர்த்தி வங்கிக்கான பயிற்சிக்கு சென்ற போது பிற மாவட்டங்களில் இருந்து வந்த சக சமுர்த்தி உத்தியோகத்தர்களுடனும் பயிற்சிவழங்கிய சமுர்த்தி வங்கிப்பிரிவின் பணிப்பாளர் திரு.லியன்வெல அவர்களும் சமுர்த்தி வங்கிப்பிரிவின் பிரதிப்பணிப்பாளர்களாகிய திரு.குணரெட்ண அவர்களும், திருமதி பந்துசேனவுடன் எமது உத்தியோகத்தர்களும் இருப்பதை பார்க்கலாம்.

Comments