களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் சமுர்த்தி சௌபாக்கியா வீடுகள் மக்களிடம் கையளிப்பு.....

 களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் சமுர்த்தி சௌபாக்கியா வீடுகள் மக்களிடம் கையளிப்பு.....

வீடில்லா பிரச்சனையை ஓரளவு குறைத்து வைப்பதற்காக சமுர்த்தி திணைக்களம் சௌபாக்கியா வீட்டுத்திட்டத்தின் மூலம் வீடுகளை அமைத்துக் கொள்ள உதவி வருகின்றது. இதன் அடிப்படையில் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவில்  சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் வீடுகளை அமைத்துக் கொள்ள நிதி உதவிகள் வழங்கப்பட்டது.   2021/02/18ம் திகதி அன்று மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம்  அவர்களால் இவ்வீடுகள் உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்பட்டன. 

இவ் செயபாக்கியா வீட்டுத்திட்டத்திற்கு களுதாவளை, குருமண்வெளி, மகிழூர், கோட்டைக்கல்லாறு, ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இருந்த  05 வீடுகள் தெரிவு செய்யப்பட்டு  மக்களிடம் கையளிக்கப்பட்டன. 

 இவ் வீடுகளை அமைத்துக் கொள்ள தலா இரண்டு லட்சம் ரூபாவினை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் வழங்கப்பட்டது. பயனாளியின்  பங்களிப்புடன் கிராம தனவந்தர்களின் உதவியுடன்  ரூபா ஐந்து லட்சத்திற்கு இவ்வீடுகள்   நிர்மானிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இந் நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் கே.உதயகுமார், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.










Comments