மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சியடையாது ஏன் உள்ளது?

 மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சியடையாது ஏன் உள்ளது?

பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்ய முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் அரவிந்த டீ சில்வா தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அன்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 நிச்சயமாக பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதன் மூலமே தேசிய அணியை வழுப்பெற செய்ய முடியும் என்பது உண்மை. இதை கருத்தில் கொண்டு கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை கிரிக்கெட்டை ஊக்குவிக்க பல்வோறு வேலைத் திட்டங்கள் வகுக்கப்பட்ட   போதிலும் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டவை போலவே தென்படுகின்றது


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் கிரிக்கெட்டின்  தரத்தை உயர்த்தி  தேசியமட்டத்தில் கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவோம்  என பிரித்தானிய தமிழர் கிரிக்கெட் சம்மேளனத்தின் செயலாளர்  தெரிவித்தார். 2017ல் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்துடன் இனைந்து பிரித்தானிய தமிழர் கிரிக்கெட் சம்மேளனமும் நடாத்திய மட்டக்களப்பு பாடசாலைகளுக்கான கிரிக்கெட் பயிற்றுனருக்குரிய பயிற்சி முகாமை நடாத்திய போதே இதனை குறிப்பிட்டார். இதன் போது செயற்பட்ட இந்த மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் இத்துடன் முடிவுக்கு வந்தது.



இதே போல் 2019ம் ஆண்டு நடுப்பகுதியில் பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் பாடசாலைகளுக்கான கிரிக்கெட் சங்கம் உருவாக்கப்பட்டது. அதற்கான முதல் கட்ட பணிகளும் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அதுவும் இற்றைவரை கிடப்பில் போடப்பட்டவை போலவே இருக்கின்றது.

இதை விட 2019ம் ஆண்டு இறுதியில் 13 வயதிற்குட்பட்டோருக்கான கடின பந்து கிரிக்கெட் போட்டிகளை முதல் கட்டமாக சிவானந்தா, புனித மிக்கல் கல்லூரி, மெதடிஸ்த மத்திய கல்லூரி பாடசாலைகளை இணைத்து சுற்றுப்போட்டி நடாத்தி ஒவ்வொரு பாடசாலைக்கும் 13வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டும் அதுவும் கிடப்பில் விடப்பட்டதாகவே தென்படுகின்றது.

இதை தவிர புலம் பெயர்ந்து வாழ்பவர்களால் ஒரு தொகை கிரிக்கெட் உபகரணங்கள் இலங்கைக்கு அனுப்பபட்டு இவை அனைத்தும் மட்டக்களப்பில் உள்ள புனித மிக்கல் கல்லூரி, சிவானந்தா பாடசாலை, மெதடிஸ்த மத்திய கல்லூரி போன்ற பாடசாலைகளுக்கு வழங்கியும் இன்னும் அதன் செயற்பாடுகள் மந்த கதியில் செல்வதாகவே தென்படுகின்றது.

இவை அனைத்திற்கும் பக்க பலமாக இருந்து மட்டக்களப்பில் செயற்படுவது கோட்டைமுனை விளையாட்டு கழகம், மற்றும் கோட்டைமுனை விளையாட்டு கிராமம் என்றே கூறலாம். இதற்கான முழு நிதியினையும் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகழத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் அந்த நல்ல உள்ளங்கள் மூலமே கிடைக்கப்பெற்றுள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

 

கடந்த காலங்களில் இச்செயற்பாடுகள்  ஒரு முன்னேற்றத்தை அடையாத காரணத்தால் இயையோர் விளையாட்டை ஊக்குவிக்க மட்டக்களப்பில் முன்னுதாரமாக EPP எனும் அமைப்பு உருவாக்கப்பட்டு தற்போது சிறார்களின் கிரிக்கெட்  விளையாட்டு மட்டக்களப்பில் மேலும் வலுவடைச் செய்துள்ளது. தற்போது இச்சிறார்களில் அதிக கரிசனை கொண்டு இளையோருக்கான  கிரிக்கெட் விளையாட்டை மட்டக்களப்பில் ஊக்குவிக்க EPP அமைப்பை போன்று ஈஸ்டன் ஸ்டார் கிரிக்கெட் அக்கடமி, கல்லாறு சென்றல் கிரிக்கெட் அக்கடமி என பல அமைப்புக்கள் தோன்றியுள்ளன இது ஒரு நல்ல ஆரம்பமாக மட்டக்களப்பிற்கு தென்படுவதாலும் அன்மையில் விளையாட்டுத்துறை அமைச்சர் கூறியது போன்று இனியாவது பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் சங்கங்களை மீள் புனரமைப்பு செய்து மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரிக்கெட்டை வளம் பெற செய்வோம்.









 




Comments