மட்டக்களப்பில் சூடு பிடிக்கும் 13வயதுக்குட்பட்ட இளம் கிரிக்கெட் வீரர்களின் பாசறை.......

 மட்டக்களப்பில் சூடு பிடிக்கும் 13வயதுக்குட்பட்ட இளம் கிரிக்கெட் வீரர்களின் பாசறை.......

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற் கொண்டு வந்தாலும் மிக முக்கியமாக பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை இளம் வயது முதல் சீர் செய்வதன் மூலமே மேம்படுத்த முடியும் என்பதை தற்காலத்தில் மட்டக்களப்பில் காணக் கூடியதாகவுள்ளது.

 கடந்த காலங்களில் பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றாலும் 13 வயதிற்குட்பட்டோருக்கான கடின பந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது குறைவாவே காணப்பட்டதுடன் இதற்கு பாடசாலைகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதும் உண்மையாகவே காணப்படுகின்றது. இவற்றை எல்லாம் தாண்டி அன்மை காலங்களில் சில அமைப்புக்கள், கழகங்கள் முன் வந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த 13 வயதிற்குட்பட்ட வீரர்களை உள்வாக்கி புதிய முயற்சியை மேற் கொண்டு வருகின்றன.

 இதன் அடிப்படையில் மட்டக்களப்பில் EPP எனும் அமைப்பின் மூலம் இளம் வீரர்களை இனம் காணப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதுடன் இவ்வமைப்பின் மூலமாக 2019ம் ஆண்டில் 13 வயதிற்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கான கடின பந்து சுற்றுப்போட்டியையும் நடாத்தி இருந்தனர். இதன் பின் பல பாடசாலைகள் 13 வயதிற்குட்பட்ட வீரர்களை இனம் கண்டு தம் அணிகளை தயார்படுத்தின முக்கியமாக புனித மிக்கல் கல்லூரி, மெதடிஸ்த மத்திய கல்லூரி, சிவானந்தா பாடசாலை, ஏறாவூர் அறபாக் கல்லூரி என்பன  வற்றை குறிப்பிடலாம். தம் பாடசாலை அணியை தயார் படுத்தி இருந்த போதிலும் சில தடைகள் காரணமாக மீண்டும் இதில் ஓர் தளர்வு தென்படுவதாக காணப்படுகின்றது.

 இருந்த போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த 13 வயதிற்குட்பட்ட வீரர்களை ஒன்று திரட்டி ஈஸ்டன் ஸ்டார் கிரிக்கெட் அக்கடமி, கல்லாறு சென்றல் கிரிக்கெட் அக்கடமி EPP அமைப்பு என கிரிக்கெட் அக்கடமிகள் ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றன.  இவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் அன்வர் டீன் அவர்களால் அன்மையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் வைத்து வழங்கப்பட்டது. இப்பயிற்சிக்கு 13 வயதிற்குட்பட்ட  பாடசாலை, கழகங்கள் மற்றும் அக்கடமிகளில் தம்மை இணைத்துக் கொண்ட சிறார்களுக்கு வழங்கப்பட்டதாக  மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் அன்வர் டீன் தெரிவித்தார்.

எனவே  கொவிட் - 19 காரணத்தால் தடைப்பட்டிருந்த சகல நடவடிக்கைகளும் மீண்டும் துளிர்விட ஆரம்பிக்கும் போது கிரிக்கெட் விளையாட்டையும் மீண்டும் பாடசாலைகள், கழகங்கள், அக்கடமிகள் மீண்டும் பயிற்சிகளைஆரம்பித்து ஒரு முன்னேற்றகரமான பாதைக்கு செல்ல வாழ்த்துகின்றோம். 






Comments