மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி மகாசங்களில் 15 மில்லியன் ரூபாக்கள் செலவிடப்படாமல் உள்ளது.....

 மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி மகாசங்களில் 15 மில்லியன் ரூபாக்கள் செலவிடப்படாமல் உள்ளது.....



மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் கூட்டம் 08.09.2020 அன்று மாலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

சமுர்த்தி தேசிய சமுதாய நிதியத்திற்கான கட்டுப்பாட்டு சபையினை உருவாக்குவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து இரண்டு அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்காக  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்களை அழைத்து இக்கூட்டம் இடம்பெற்றது. இதன்  போது அங்கு உரையாற்றி மாவட்ட அரசாங்க அதிபர் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களினால் வருடந்தோறும் சேகரிக்கப்படும் பணம் வெறுமனே தங்கள் தங்கள் மகாசங்கங்களில் வைப்புச் செய்யப்படுகின்றது. இப்பணத்தில் தங்கள் சமுர்த்தி திட்டத்தில் இணைந்த வறிய வறுமைக்கோட்டிற்குள் வாழும் குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்கள் செயற்பட வேண்டும் என கூறியதுடன் வருடாந்தம் சேகரிக்கப்படும் பணம் செலவு செய்யாமல் 15 மில்லியன் ரூபாக்கள் சமுர்த்தி மகா சங்கங்களில் தேக்கமடைந்துள்ளதாகவும் துரிதமாக திட்டங்களை உத்தியோகத்தர்கள் மூலம் இனங்கண்டு வறிய மக்களுக்கு உதவுமாறும் கூறினார்.

இக் கூட்டத்தில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அமுதகலா பாக்கியராஜா உரையாற்றும் போது தெரிவு செய்யப்பட்டு அனுப்பி வைப்படுகின்ற உறுப்பினர்கள் அங்கு நிகழும் தேசிய மட்ட கூட்டங்களுக்கு  பிரசன்னமும் பங்களிப்புக்களும் செய்வதுடன் அங்கு எடுக்கப்படுகின்ற தீர்மானங்களுக்கு உரியவாறு செயற்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட சமுர்த்தி தலைமைத்துவ முகாமையாளர் J.F.மணோகிதராஜ் மற்றும் சமுர்த்தி  முகாமைத்துவ பணிப்பாளர்கள் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின்  தலைவர்கள் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.




Comments