நாவற்குடா புனித சின்ன லூர்த்து அன்னை திருத்தலத்தின் 110 வது திருவிழா இரண்டாம் நவநாள்.....

நாவற்குடா புனித சின்ன லூர்த்து அன்னை திருத்தலத்தின் 110 வது திருவிழா இரண்டாம் நவநாள்.....

மட்டக்களப்பு நாவற்குடா புனித சின்ன லூர்த்து அன்னை திருத்தலத்தின் 110 வது திருவிழா 11.05.2018 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இரண்டாம் நாள் திருப்பலியை அருட்தந்தை ரி.லோரன்ஸ்; அவர்களால் அன்னை மரியாளின் சமூக அக்கறை எனும் கருத்தில் திருப்பலி ஓப்புக்கொடுக்கப்படவுள்ளது இன்றைய இரண்டாம் நவநாளை கார்மேல் மாதா வட்டார இறைமக்கள் சிறப்பிப்பர்.

கார்மேல் மாதா  வட்டாரக்குழு.......
நாவற்குடா சின்ன லூர்து அன்னை ஆலயத்தில் எட்டு வட்டாரங்கள் அன்னையின் பெயரைக் கொண்ட வட்டார குழுக்களாக செயற்பட்டு வருகின்றோம். இதில் எங்கள் வட்டார குழுவுக்கு கார்மேல் மாதா வட்டாரகுழு என நாமம் சூட்டி சிறப்பாக செயற்பட்டு வருகின்றோம். இனி நாம் கார்மேல்மாதா என பெயர் வந்தமைக்கான வரலாற்றை சற்று நோக்குவோம்.
அன்னையாம் கன்னிமரியாளுக்கும் கார்மேல் மலைக்கும் இடையிலான தொடர்பு வரலாற்று ரீதியாகவும், வேதாகம ரீதியாகவும் இணைந்து காணப்படுகின்றது. கார்மேல் மலையானது இயேசுபிறந்த நகராகிய நாசரேத்திலிருந்து 20 மைல்கள் தொலைவில் மெடிற்ரரேரியன் கடலைப் பார்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. இம் மலையில் நிறைந்து காணப்படும் மரங்கள், கனிகள் என்பவற்றுடன் இணைந்து இயற்கையின் எழிலும், வனப்பும் இம்மலைகள் அனைத்து ஆசீர்வாதங்களையும் பெற்றதொரு இடமாக கணிக்கப்படக் காரணமாக விளங்குகின்றது. வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள இறைவாக்கினரான எலிசா தனது காலத்தில் ஏற்பட்ட வரட்சியை நீக்குவதற்கு இம்மலை மீதிருந்து இறைவனைப் பார்த்து வேண்டுதல் செய்ய, ஆண்டவரும் அவரது வேண்டுதலுக்கு பதிலளிக்கும் வண்ணம் மழைபொழியச் செய்து புதிய வாழ்க்கையையும் நல்கினார். சாலமோனின் புகழ்ப்பாக்கள் கார்மேல்மலையின் அழகை விரிவாக விரித்துரைக்கின்றது.
கார்மேல் மலையில் அமைந்துள்ள பல குகைகள் துறவிகள் மறைந்து வாழ பெரிதும் உதவிசெய்கின்றன. இங்கு எலிசா, எசாயா போன்ற இறைவாக்கினர்கள் மறைந்து வாழந்துள்ளதாக வரலாறு தெரிவிக்கின்றது. இம்மலையின் பால் ஈர்க்கப்பட்ட இலத்தீன் அமெரிக்க துறவுச்சபையான தூயகார்மேல் சபை சகோதரர்கள் 12ம் நூற்றாண்டு காலப்பகுதிக்குப் பின் அதனையே தங்களது தங்குமிடமாகவும் பயன்படுத்தினர். கார்மேல் மலையில் அமைக்கப்பட்ட ஆலயம் அன்னைமரியாளுக்கு அர்பணிக்கப்பட்டு கார்மேல் மாதா எனஅழைக்கப்பட்டார். கார்மேல் மாதாவின் திருநாள் வருடந்தோறும் யூலை16ம் நாள் நினைவு கூறப்படுகின்றது.
  இனி எங்கள் குழுவைப்பற்றி நீங்கள் அறிந்து கொள்வதற்காக:
எம் குழுவில் 24 குடும்பங்கள் அங்கம் வகிக்கின்றன ஆலயத்தை விட்டு சற்று தொலை தூரத்தில் நாம் இருந்தாலும் இறைவனின் அன்பிலே நெருங்கியே இருக்கின்றோம். கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் அன்னையின் திருக்கரத்தால் பூரண ஆசி பெற்றவர்களாய் நாம் காணப்படுவதில் பெருமை கொள்கின்றோம். பெருவாரியாக எம் குழுவை சார்ந்தோர் நாளாந்த வேலை செய்வோராகவும், ஒரு சில குடும்பங்கள் அரச உத்தியோகத்தர்களாகவும், தனியார் தொழில் செய்வோராகவும் ஆண்டவரின் ஆசீர்வாதமாக கிடைத்துள்ளது அதிகம். அத்துடன் எம் குழந்தை செல்வங்களுக்கு ஆண்டவர் கொடுத்த அறிவுசார் தாலந்துக்களுக்கும் நன்றி கூறுகின்றோம்
பக்திச்சபைகளான பாலத்துவ சபை, மறையாசிரியர்கள், மரியகொரட்டி, மரியாளின்சேணை, வழிபாட்டுக்குழு, என்பவற்றில் நிறைவான பங்களிப்பை வழங்குவதுடன், பங்குத்தந்தையாலும் பங்கு உறுப்பினர்களாலும் வழங்கப்படும் செபவழிபாடு திருப்பலி ஆயத்தங்களை எப்போதும் ஒற்றுமையுடனும். பக்தியுடனும், பணிவுடனும் நாம் செய்து வருகின்றோம். மற்றும் ஆலய செயற்பாடாகிய ஒளிவிழா, ஆலயதிருவிழா, தைப்பொங்கல் விழா, தவக்கால வழிபாடுகள், மாதாந்த திருப்பலி வழிபாடுகள் என்பற்றில் எம் குழு நிதானமாகவும், நிறைவாகவும், புரிந்துணர்வுடனும் செயற்படுகின்றது.
 ஆலயத்திற்கான பொருளாதாரபங்களிப்பில் எம் குழுவை பொறுத்த மட்டில் சிலுவைப்பாதைக்கான சிலுவை அமைத்தல், சேமக்காலைக்கான  வேலி அமைத்தல், கிறிஸ்மஸ்மரம், ஆலய பராமரிப்பு, தவக்கால உண்டியல், ஐக்கிய உணவு நிகழ்வு, கிரிக்கெட் போட்டி, போன்றவற்றிலும் எமது கனவுகளில் ஒன்றான ஆலய கட்டுமான பணிக்கு உறவுகளாக ஒன்றிணைந்து தனித்தூண், குழுக்காக இணைந்து தணித்தூண், குடும்பநிதி, ஆலய கட்டிட நிதிக்காக சிறியவர் முதல் முதியவர் வரை வீடு வீடாக வெளி பங்குமக்கள் மற்றும் நண்பர்களிடம் நிதி சேகரித்தமை, இறுவெட்டு விற்பனை, கட்டிட நிதி அட்டை சேகரிப்பு, சீமெந்திற்கான சேகரிப்பு போன்றவற்றில் மூலம் சிறப்பாக நிதி சேகரித்துள்ளோம்.
  மேலும் எம் குழுவினர் சார்பாக திரு.யோகேஸ்வரன் நற்கருனை பணியாளராக செயற்படுவது எமக்கு பெருமையளிக்கின்றது, அத்துடன் எமது குழுவில் இருந்து தான் அருட்சகோதரி.டொமினிக்கா துறவரத்திற்கு சென்றமைக்காக இறைவனுக்கு நன்றி கூறுகின்றோம்.
'லூர்த்து அன்னையே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்'

Comments