'ஆட்டநாயகன்' யாரிந்த துனித் வெல்லாலகே?

 'ஆட்டநாயகன்' யாரிந்த துனித் வெல்லாலகே?

ஆசியக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில், சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி, கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 213 ரன்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதில் இலங்கை அணியின் இடக்கை சுழற்பந்து வீச்சாளரான துனித் வெல்லாலகே, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருடைய சுழற்பந்து வீச்சில் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் வீழ்ந்தனர். அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இந்த துனித் வெல்லாலகே யார்?

20 வயதே நிரம்பிய இளம் சுழற்பந்து வீச்சாளரான இவர், 1 டெஸ்ட் மற்றும் 13 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார். 2022இல் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான இவர், அதற்கு முன்பு 2022 ICC 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். அந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில், 5 விக்கெட்டுகளை வீழ்த்திய துனித் வெல்லாலகே, இரு போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருதையும் வென்றிருந்தார். மேலும் அந்தத் தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 113 ரன்கள் எடுத்துஇ இலங்கை அணி வெற்றி பெற உதவினார்.

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை தொடரில், சதம் அடித்த இலங்கை அணியின் முதல் அணித்தலைவர் இவரே ஆவார். அந்தத் தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்திய துனித் வெல்லாலகே, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். இவருடைய பந்து வீச்சின் சராசரி 13.58. மேலும் இவர் அத்தொடரில் 264 ரன்களைக் குவித்து இலங்கை அணியின் சார்பாக அதிக ரன்களை எடுத்த வீரராகவும் திகழ்ந்தார்.

முத்தையா முரளிதரன், அஜந்த மென்டிஸ் மற்றும் அகில தனஞ்ஜெயவிற்குப் பிறகு இந்திய அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 4ஆவது இலங்கை பந்துவீச்சாளர் துனித் வெல்லாலகே. அஜந்தா மென்டிஸின் நிழல் என்று கருதப்படும் துனித் வெல்லாலகே இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்காலமாக கணிக்கப்படுகிறார்.

தற்போது ஆசியக்கோப்பை தொடரில் விளையாடி வரும் இவர், இதுவரை 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சு மட்டுமில்லாமல் துடுப்பாட்டத்திலும் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார் துனித் வெல்லாலகே. 214 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.

இந்நிலையில், இக்கட்டான சூழலில் களமிறங்கிய துனித் வெல்லாலகே துடுப்பாட்டத்தில் தனது திறமையை வெளிப்படுத்தினார். அணியின் வெற்றிக்காக கடைசிவரை போராடிய துனித் வெல்லாலகே 46 பந்துகளில் 42 ரன்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியடைந்தாலும், அணிக்காக பந்துவீசி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடுஇ பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்ட துனித் துடுப்பாட்டத்திலும் ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது.


Comments