200,000 இராணுவ உறுப்பினர்கள் இவ்வருடம் 135,000 ஆக குறைக்கப்படுவர்...

 200,000 இராணுவ உறுப்பினர்கள் இவ்வருடம் 135,000 ஆக குறைக்கப்படுவர்...

இலங்கை இராணுவத்தின் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள 200,783 ஊழியர்கள் தொகையை, இவ்வருடம் (2024) 135,000 ஆக குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2030 ஆம் ஆண்டில் அவ்வெண்ணிக்கையை 100,000 ஆக குறைக்கவும் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இராணுவத்தின் செலவுகளை குறைப்பதன் அடிப்படையில் இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களை குறைக்கும் எதிர்கால திட்டத்தை மையமாகக் கொண்டு, பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை வருமாறு...

இராணுவத்தின் பலம் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி ஆகியன ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றன. அவை ஒன்றாக இருந்த போதிலும் ஒன்றுடன் ஒன்று வெளிப்படையாக தென்படுவதில்லை. இராணுவச் செலவினம் என்பது தேசிய மற்றும் மனிதப் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம், பொருளாதார வளர்ச்சிக்கான வழிகளை ஏற்படுத்தும் மறைமுகமாகத் தூண்டப்படும் ஒரு அரச செலவினமாகும்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், இராணுவத்தின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் தற்போது 200,783 ஆக இருந்தாலும், அது 2024 ஆம் ஆண்டளவில் 135,000 ஆகக் குறைக்கப்பட்டு 2030 ஆம் ஆண்டளவில் அது 100,000 ஆக சரி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு இணையாக எந்தவொரு பாதுகாப்பு சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் தொழில்நுட்ப ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் உரிய சமநிலையான இராணுவப் பலத்தை உருவாக்குவதே இந்த மூலோபாயத் திட்டத்தின் நோக்கமாகும்.

Comments