T/20 உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து.....

T/20 உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து.....

மெல்பர்னில் பிரம்மாண்டமாக நடைபெற்ற T/20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை இங்கிலாந்து வீழ்த்தி உலகக்கோப்பையை வென்று அசத்தியிருக்கிறது. ஏற்கனவே 2010 இல் T/20 உலகக்கோப்பையை வென்றிருக்கும் இங்கிலாந்து இரண்டாவது முறையாக கோப்பையைத் தட்டித் தூக்கியிருக்கிறது.

மழை மேகங்கள் சூழ மெல்பர்னில் நடந்த இந்தப் போட்டியில் இங்கிலாந்து தலைவர் பட்லர் நாணய சுழற்சியில் வென்றிருந்தார். முதலில் பந்து வீசப்போவதாக அறிவித்தார். பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடியது. 20 ஓவர்களில் 137 ஓட்டங்களை மட்டுமே பாகிஸ்தான் அணி எடுத்தது. கொஞ்சம் சுமாரான ஓட்டங்களாக தான் இருந்தது. அரையிறுதியில் அடித்து வெளுத்த பாபர் அசாமும் ரிஸ்வானும் இங்கே பெரிதாக துடுப்பெடுத்தாட வில்லை. ரிஸ்வான்  சாம் கரனின் பந்தில் ஆட்டமிழந்தார். பாபர் அசாம் கொஞ்சம் நேரம் நின்று அடில் ரஷீத்தின் பந்தில் அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். இவர்களுக்கு பிறகு ஷான் மசூத்தும் ஷதாப் கானும் குறிப்பிடத்தக்க வகையில் கொஞ்சம் ஓட்டங்களை சேர்த்தனர். அதனால் மட்டுமே பாகிஸ்தான் அணி கொஞ்சம் சவாலளிக்கும் வகையில் 137 ஓட்டங்களை எட்டியது. இருந்த போதிலும் சாம் கரனும் அடில் ரஷீத்தும் இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக பந்துவீசியிருந்தனர்.

இங்கிலாந்து அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாட தொடங்கியது. தங்களின் வழக்கமான அதிரடி முறையிலேயே ஆட்டத்தைத் தொடங்கினர். ஆயினும் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்தை அத்தனை எளிதில் ஓட்டங்களை பெற்றுக் கொள்ள விடவில்லை. முதல் 06 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் ஓவரிலேயே ஹேல்ஸை ஷாகீன் ஷா வீழ்த்தினார். பட்லரையும் சால்ட்டையும் ஹரீஸ் ராஃப் வீழ்த்தினார். போட்டி தொடர்ந்து நெருக்கமாகவே சென்று கொண்டிருந்தது. ஆனால், இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் மட்டும் விக்கெட்டை விடாமல் நிலைத்து நின்று ஆடுவதில் குறியாக இருந்தார். 

நசீம் ஷா வீசிய துள்ளியமான பந்துவீச்சுக்களை பொறுமையுடன் இருந்து துடுப்பெடுத்தாடி இருந்தார். ஆயினும் பொறுமை இழக்காமல் சரியான நேரத்திற்காக காத்திருந்தார். 16வது ஓவரில் முதல் பந்தை வீசியதோடு ஷாகீன் ஷா காயம் காரணமாக வெளியேறினார். அடுத்த 5 பந்துகளை இஃப்திகார் வீசினார், இதுதான் சரியான சமயம் என ஸ்டோக்ஸ் விஸ்வரூபம் எடுத்தார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியையும், சிக்சரையும் அடித்து வேகமெடுத்தார். அடுத்தடுத்த ஓவர்களில் மொயீன் அலியும் வேகமாக ஆட இங்கிலாந்து அணி 19 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

ஸ்டோக்ஸ் 49 பந்துகளில் 52 ரன்களை எடுத்து மேட்ச் வின்னராக மிளிர்ந்தார். 2016 T/20 உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் தோல்விக்குக் காரணமாக இருந்த ஸ்டோக்ஸ் இப்போது அதற்கு ஈடாக ஒரு T/20 உலகக்கோப்பையையே வென்று கொடுத்துவிட்டார்.

Comments